நியூசிலாந்தின் கிறைஸ்ட் சர்ச் நகரில் இன்று ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தின் விளைவாக பாறைகள் கடலுக்குள் சரிந்து விழுந்தன.
நியூசிலாந்தின் தெற்குப் பகுதி தீவுநகரான கிறைஸ்ட் சர்ச் நகரில் இருந்து கிழக்கே சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில், பூமியின் அடியில் 15 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இன்றைய நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 அலகுகளாக பதிவாகியுள்ளது.
நிலநடுக்கத்தை அடுத்து சுமார் 40 முறை நில அதிர்வுகளும் ஏற்பட்டதால் மலைக்குன்றுகள் சூழ்ந்த இப்பகுதியில் இருந்து பாறைகள் உருண்டு, கடலுக்குள் சரிந்து விழுந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உயிர்பலி, பொருட்சேதம் குறித்த உடனடி தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை.
கடந்த 2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதேபகுதியை தாக்கிய நிலநடுக்கத்துக்கு சுமார் 200 பேர் பலியாகினர். 4000 கோடி டாலர்கள் அளவுக்கு சேதாரம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.