அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வட்டியில்லா கொடுக்கல் வாங்கல்களில் அனைத்து இனத்தவரையும் பங்களிக்க வைப்பதே நோக்கம் :றிசாத்

 

12717543_551671744998875_6498103190657878644_n_Fotor

முனவ்வர் எ காதர்

இன ஐக்கியத்தையும் ஒருமைப்பாட்டையும் பிரதான மையப் பொருளாகக் கொண்டு ஆட்சி நடத்தி வரும் தேசிய அரசாங்கத்தில், இனவாதிகளின் ஜம்பம் ஒருபோதும் பலிக்காதென்று அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

மதுரங்குளி பலநோக்கு கூட்டுறவு சங்க சமாஜத்துக்கு இன்று  (12) விஜயம் செய்த அமைச்சர், அங்கு கூட்டுறவு சங்கத்தை பார்வையிட்ட பின்னர் ஏற்பாடு செய்யப்படிருந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். 

7M8A7305_Fotor

அவர் தனதுரையில் கூறியதாவது,

இலங்கையின் அரசியல் வரலாற்றிலே எதிரும் புதிருமாக இருந்த இரு பெரும் கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்று சேர்ந்து இந்த ஆட்சியை நடத்துவதே ஒற்றுமைக்கு பிரதான முன்னுதாரணம். 

“கூட்டுறவே நாட்டுயர்வு. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” என்ற பழமொழிக்கு ஒப்ப நாம் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். அனைத்து சமூகங்களின் பங்களிப்பும் கூட்டுறவுச் சங்கங்களின் வளர்ச்சிக்கு பிரதானமானது. அந்த வகையில் சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் இணைந்து பணியாற்றினால் கூட்டுறவுச் சங்கங்களை மேலும் விருத்தி செய்யலாம். 

கூட்டுறவு வங்கிகளில் இஸ்லாமியர்கள் அதிகம் ஆர்வம் காட்டாமைக்கு வட்டி ஒரு பிரதான காரணமாக அமைந்துவிடுகின்றது. எனவேதான், கூட்டுறவு வங்கிகளில் இஸ்லாமியர்கள் ஈடுபாடு காட்டும் ஷரீஆவின் அடிப்படையிலான கொடுக்கல் வாங்கல்களை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளேன்.  

கூட்டுறவுத் துறையில் கடந்த காலங்களில் நிலவிய ஊழல், மோசடிகளை இல்லாமலாக்கி இதனை புனிதமான ஒரு துறையாக மக்களுக்கு பயனளிக்கக் கூடிய ஒரு துறையாக, நியாயமான விலையில் பொருட்களை வாங்குவதற்குரிய ஒரு துறையாக மாற்றியமைக்கும் வேலைத்திட்டங்கள் எம்மிடமுண்டு. இலங்கையிலுள்ள அநேகமான கூட்டுறவுச் சங்கங்கள் மாகாண சபையின் கீழ் வருவதனால், எனது அமைச்சின் கீழ் அவைகளுக்கு நேரடியாக உதவ முடியாத சிக்கல்கள் இருக்கின்றன. எனினும் முடிந்தவரையில் அவற்றுக்கு என்னாலான பங்களிப்பை நல்குவேன். மதுரங்குளியில் இயங்காமல் இருக்கும் ஆறு கூட்டுறவு வங்கிகளை மீண்டும் செயற்பட விரைவில் நடவடிக்கை எடுப்பேன்.

கூட்டுறவுத் துறையில் புதிய கடன் திட்டங்களை உருவாக்கி மக்களுக்கு உதவ இருக்கின்றோம். எதிர்காலத்திலே இந்தத் துறையில் மறுமலர்ச்சி ஏற்படக்கூடிய வகையில் புதிய செயலணி ஒன்றை உருவாக்கியுள்ளோம். அந்த செயலணியில் துறை சார்ந்த நிபுணர்கள் பலர் உள்ளடக்கப்பட்டுள்ளனர். அதன் மூலம் நஷ்டத்தில் இயங்கி வரும் கூட்டுறவுத் துறையினை இலாபமீட்டும் துறையாக மாற்றியமைக்க நடவடிக்கை எடுப்போம். 

என்னைப் பற்றி பல்வேறு இடங்களில் இனவாதப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன மக்கள் பணி செய்பவர்களுக்கு இவ்வாறான கஷ்டங்கள் ஏற்படுவது சகஜம்தான். என்னை சிறையில் அடைக்க வேண்டுமென்று குருநாகல் போன்ற பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த அநாமதேய சுவரொட்டிகளுக்கும், பதாகைகளுக்கும் பயந்து நான் என் பணியை கைவிடமாட்டேன். சவால்களுக்கு முகம் கொடுத்து பழக்கப்பட்டவன் நான் எனவும் அமைச்சர் இங்கு கூறினார்.

12715758_551669641665752_7043578552973130466_n_Fotor

இந்நிகழ்வில் எம்.எச்.எம். நவவி எம்.பி, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் யஹியா, மக்கள் காங்கிரசின் அமைப்பாளர் அலி சப்ரி, மதுரங்குளி கூட்டுறவுச் சங்கத் தலைவர் ஹாரூன், கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் ஜீவானந்தா, மதுரங்குளி கூட்டுறவுச் சங்க உபதலைவர் ஜயசிங்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.