ஒபாமாவின் பதவிக்காலம் முடிய உள்ளதால் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், வரும் நவம்பர் மாதம் 8-ந் தேதி நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதி தேர்தலில் முதல்கட்டமாக குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பல்வேறு மாகாணங்களில் நடந்து வருகிறது. இதனால் அங்கு இப்போதே தேர்தல் களை கட்ட தொடங்கி விட்டது.
அமெரிக்காவின் வடகிழக்கு மாகாணமான நியூ ஹாம்சயரில் இந்த வேட்பாளர் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
இதில் குடியரசு கட்சி வேட்பாளர் தேர்தலில், அமெரிக்காவின் மிகப்பெரும் கோடீசுவரர்களில் ஒருவரும், வேட்பாளர் போட்டியில் முன்னணியில் உள்ளவருமான டொனால்டு டிரம்ப் (வயது 69) அமோக வெற்றி பெற்றார். அவர் 34 சதவீத ஓட்டுக்களை பெற்றார். இரண்டாவது இடத்தை ஓயோ மாகாண கவர்னர் ஜான் காசிச் பிடித்தார். அவருக்கு 16 சதவீத வாக்குகள் கிடைத்தன.
ஜனநாயக கட்சி வேட்பாளர் தேர்தலில், ஹிலாரி கிளிண்டனுக்கும் (68), பெர்னி சாண்டர்சுக்கும் (74) இடையே கடும் போட்டி நிலவுகிறது. சமீபத்தில் இயோவா மாகாணத்தில் நடந்த தேர்தலில் மிகக்குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் பெர்னி சாண்டர்சை ஹிலாரி கிளிண்டன் தோற்கடித்தார். ஆனால் நியூ ஹாம்சயரில் அவரிடம் ஹிலாரி கிளிண்டன் தோல்வியை தழுவினார். இங்கு 90 சதவீத ஓட்டுகள் எண்ணப்பட்டதில் பெர்னி சாண்டர்ஸ், ஹிலாரி கிளிண்டனை விட 20 சதவீத வாக்குகள் அதிகம் பெற்றார்.
தேர்தல் வெற்றி குறித்து பேசும்போது, சக போட்டியாளர்களுக்கு டிரம்ப் வாழ்த்து தெரிவித்தார்.
தற்போதைய நிலவரப்படி குடியரசு கட்சி வேட்பாளர் தேர்தலில் டிரம்ப்தான் தொடர்ந்து முன்னணியில் உள்ளார். அவர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள வெளிநாட்டினரை அவர்களது நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்போவதாக கூறி உள்ளார். மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்புவேன் என வாக்குறுதி அளித்திருக்கிறார். குறிப்பிட்ட ஒரு மதத்தை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைய தற்காலிக தடை விதிப்பேன் என்றும் கூறி இருக்கிறார்.
ஹிலாரி கிளிண்டனை தோற்கடித்துள்ள பெர்னி சாண்டர்ஸ் தன்னை சோஷலிச ஜனநாயகவாதி என கூறி வருகிறார். சம்பள சமத்துவமின்மையை முடிவுக்கு கொண்டு வருவேன் என்கிறார். கல்லூரி மாணவர்களுக்கு டியூசன் கட்டணம் ரத்து செய்வேன் என வாக்குறுதி அளித்துள்ளார்.
நியூ ஹாம்சயரில் வெற்றி பெற்றது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், “மக்கள் உண்மையான மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதையே எனது தேர்தல் வெற்றி காட்டுகிறது” என கூறினார்.