சுஐப் எம்.காசிம்
“வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை சந்தித்தேன்.” ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நாயகம் சயிட் அல் ஹுசைன் இவ்வாறு தெரிவித்தார். இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் தூதரகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் முஸ்லிம்கள் தொடர்பில் அவர் குறிப்பிட்ட வார்த்தையே இது.
இலங்கைக்கான ௦4 நாள் விஜயத்தை மேற்கொண்டு இங்கு வந்திருந்த ஐ.நா மனித உரிமை ஆணையாளர் இளவரசர் சயிட் அல் ஹுசைன் யாழ்ப்பாணம், திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்குச் சென்று யுத்தத்தினால் பாதிப்புற்ற பிரதேசங்களை பார்வையிட்டார். அகதி முகாம்களுக்குச் சென்றார். மக்களின் அவல வாழ்வை நேரில் கேட்டறிந்தார். மீள்குடியேற்றம் தொடர்பான பிரச்சினைகளையும் கண்டறிந்தார்.
ஐ.நா ஆணையாளர் நாயகம், ஜனாதிபதி மைத்திரி,. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் ஆகியோரையும் சந்தித்து அரசியல் நிலவரங்களை கேட்டறிந்தார். இதைத் தவிர வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் ஆகியோரையும் அந்தந்த மாகாணங்களின் முதலமைச்சர் என்ற கோதாவில் சந்தித்து உரையாடினார்.
அவரது விஜயத்தின் இறுதி நாளான கடந்த 09 ஆம் திகதி ஐ.நா தூதரகத்தில் செய்தியாளர் மாநாடு ஒன்றையும் நடத்தினார். அங்கு மனித உரிமை, யுத்தக் குற்றம், மீள்குடியேற்றம், போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டார்.
“பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.” ஆணையாளரால் கூறப்பட்ட கருத்துக்களில் இதுவும் பிரதானமானது அது உண்மைதான். வடக்கு – கிழக்கில் சுமார் 3௦ ஆண்டுகால போர் நெருக்கடியில் அந்த மக்கள் அனுபவித்த துன்பங்கள் சொல்லொணாதவை. எனவே, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவே வேண்டும். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
யுத்தத்தின் விளைவுகளால் நேரடியாக பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகமும் இலங்கையில் இருக்கின்றது என்ற உண்மை ஆணையாளருக்கு எத்துணை தூரம் தெரியுமோ? வடக்கு முஸ்லிம்களின் பிரச்சினையை ஐ.நா வோ சர்வதேசமோ இற்றை வரை பெரிதாக கருத்திற்கெடுக்கவில்லை. இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்ற இளவரசரின் கருத்து முஸ்லிம் மக்களுக்கு எந்தளவு தூரம் உதவப் போகின்றது என்பதில் தெளிவில்லை.
ஆணையாளர் இலங்கையில் தங்கியிருந்த நாட்களின் முஸ்லிம் சமூகத்தின் மக்கள் பிரதி நிதிகளையோ, அல்லது அந்த சமூகம் சார்ந்த காத்திரமான அமைப்புக்களையோ சந்திக்கவில்லை.
யாழ்ப்பாணம் நல்லூர் கோவிலுக்கு இளவரசர் சென்றபோது, அங்கு கோவிலின் சுற்றுவட்டத்தில் சுலோக அட்டைகளுடன் அமர்ந்திருந்த ஆறு முஸ்லிம்கள், இளவரசர் கோவில் வளாகத்துக்குள் நுழையும் போது “அஸ்ஸலாமு அலைக்கும்” எனக் கூறினர். அருகே வந்த அவர் பதிலுக்கு சலாம் கூறினார். இந்தச் சந்தர்பத்தை பயன்படுத்தி அவர்கள் தங்களது பிரச்சினைகளை எடுத்துக் கூறி மகஜர் ஒன்றையும் கையளித்தனர். யுத்தத்தினால் தாங்களும் பாதிக்கப்பட்ட சமூகம் என்பதும் தெரிவித்து மீள்குடியேற்றத்தில் யாழ் முஸ்லிம்கள் படும் இன்னல்களும் அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டிருந்தது.
1990 ஆம் ஆண்டு வடமாகாணத்தில் வாழ்ந்த சுமார் ஒரு இலட்சம் முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக புலிகளால் விரட்டப்பட்டு இன்னும் அவர்களில் பெரும்பாலானோர் அகதி முகாம்களிலேயே வாழ்க்கை நடத்துகின்றனர். இருந்த போதும் ஆணையாளர் எந்த ஒரு முஸ்லிம் அகதி முகாம்களுக்கும் விஜயம் செய்யாமை அந்த மக்களுக்கு மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் சமாதானம் ஏற்பட்ட பின்னர் அந்தப் பிரதேசத்துக்கு மீள்குடியேறச் சென்ற போது அவர்கள் எதிர்நோக்கிய தடைகளும், தற்போது ஏற்படுத்தப்பட்டு வரும் முட்டுக்கட்டைகளும் ஆணையாளருக்கு தெரிவிப்பதற்கு முஸ்லிம்களுக்கு எந்த சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.
கடந்த அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு (L.L.R.C) பரிந்துரையின் பிரிவு 9.108 – 113 என்ற அம்சத்தில் வடக்கு முஸ்லிம்கள் தொடர்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டு, இந்த மக்கள் ஆறு மாத காலத்துக்குள் குடியேற்றப்பட வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரை ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவுக்கும் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. எனினும் இலங்கை அரசு ஐ.நா வுக்கு வழங்கிய உறுதியும் உத்தரவாதமும் காற்றில் பறந்தன. இந்த விடயங்கள் புதிய ஆணையாளருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
1990 ஆம் ஆண்டு வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட பின்னர், 1993 ஆம் ஆண்டு அகதிகளின் உரிமைகளை பாதுகாக்க பாதிக்கப்பட்ட சமூகத்தின் முக்கியஸ்தர்கள் சிலரால் “வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பு” (NMRO) தொடங்கப்பட்டது. அகதிகள் தொடர்பில் இந்த அமைப்பின் காத்திரமான பணிகளை நாம் மறப்பதற்கில்லை. முஸ்லிம் அகதிகள் பிரச்சினையை சர்வதேசமயப்படுத்துவதற்காக இந்த அமைப்பு பட்ட கஷ்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல. எனவே. இந்த அமைப்பின் பிரதிநிதிகள் சயிட் அல் ஹுசைனை சந்திக்க சந்தர்ப்பம் ஒன்றை எதிர்பார்த்து நின்றனர். வெளிநாட்டு அமைச்சுக்கும், இலங்கையில் உள்ள ஐ.நா தூதரகத்துக்கும் மாறி மாறி எழுத்து மூல கடிதங்களை அனுப்பிய போதும் எதற்குமே பதில் கிடைக்கவில்லை. இலங்கையில் மனித உரிமை பற்றி பெரிதாகப் பேசும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளிடமும் தமக்கு ஆணையாளரைச் சந்திக்க வாய்ப்பைப் பெற்றுத்தருமாறு கோரிய போதும் எதுவுமே நடக்கவில்லை.
இந்த நிலையில் பௌத்தாலோக மாவத்தையில் உள்ள ஐ.நா இலங்கை தூதரகத்துக்கு முன்னே, இவர்கள் அமைதியான முறையில் ஒரு கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்தினர். செய்தியாளர் மாநாட்டுக்கு வருகை தரும் ஆணையாளர் தம்மை சந்திப்பார் என்ற இறுதி நேர நப்பாசை அவர்களுக்கு இருந்த போதும் எதுவுமே சாத்தியப்படவில்லை. இந்த நிலையில் ஐ.நா அலுவலகத்திலிருந்த வெளிநாட்டுப் பிரமுகர் ஒருவர் வீதி ஓரத்துக்கு வந்து, அங்கு குழுமியிருந்த NMRO பிரதிநிதிகளிடம் விடயங்களைக் கேட்டறிந்து கொண்டார். பிரதிநிதிகளால் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. அத்துடன் பிரஜைகள் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையான “விடுதலைக்கான தேடல்” என்ற ஒர் ஆவணப் புத்தகம் ஒன்றும், பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் எழுதிய வில்பத்து தொடர்பான நூல் ஒன்றும் அந்தப் பிரமுகரிடம் கையளிக்கப்பட்டது. எல்லா விடயங்களையும் ஆணையாளரிடம் தெரிவிப்பதாக அவர் உறுதியளித்துச் சென்றார்.
இனிவரும் காலங்களில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நாயகம் இலங்கை வரும்போது முஸ்லிம்களின் பிரச்சினைகளை அறிந்துவிட்டு, இங்கு வந்து இந்த மக்களின் நிம்மதியான வாழ்வுக்கு உதவுவார் என்ற நம்பிக்கையுடன் வடக்கு முஸ்லிம்கள் இன்னுமே காத்திருக்கின்றனர்.