ஐக்கிய நாடுகளின் இலங்கை தொடர்பான பிரேரணை நாட்டிற்கு எந்த வகையிலும் அச்சறுத்தலாக அமையாது !

husain_press_003
வடக்கு கிழக்கில் காணப்படும் காணிகளை விடுவிக்க இராணுவம் துரிதப்படுத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் இன்று தெரிவித்தார்.

இலங்கைக்கான ஐ.நா அலுவலகத்தில் இடம்பெற்றுவரும் விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹீசைன் இதனை தெரிவித்தார். 

மேலும் யுத்தத்தில் பாதிக்கப்பட்டு அங்கவீனர்களானவர்களுக்கு உதவ அரசாங்கம் தவறியுள்ளது எனவும் தெரிவித்தார்.

நாட்டில் பாதுகாப்பை கருத்திற்கொண்டு சிறை பிடிக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க இலங்கை அரசாங்கம் துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

ஐக்கிய நாடுகளின் இலங்கை தொடர்பான பிரேரணை நாட்டிற்கு எந்த வகையிலும் அச்சறுத்தலாக அமையாது என அவர் உறுதியளித்துள்ளார்.

நல்லிணக்கம் மற்றும் நிலையான அபிவிருத்தி தொடர்பில் அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ள பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். 

இலங்கைக்கான தனது விஜயம் வெற்றியளித்துள்ளதாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் ஷெய்ட் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார். 

கொழும்பில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

யுத்தத்தின் பின்னரான சூழல் தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், இலங்கையில் ஊடக சுதந்திரம் மற்றும் தகவலறியும் உரிமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது கூறியுள்ளார். 

அத்துடன், வெள்ளை வேன் கலாசாரம் தற்போது குறைவடைந்துள்ளமை தனக்கு மிக்க மகிழ்ச்சி அளிப்பதாக ஷெய்ட் அல் ஹுசைன் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், இம்முறை சுதந்திர தினத்தின் போது தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்பட்டமையானது மிகுந்த சிறந்த விடயம் எனவும், அது நல்லிணக்கத்திற்கு வழி வகுக்கும் எனவம் கூறியுள்ளார். 

இலங்கையில் மனித உரிமையை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் ஒத்துழைப்புக்களை வழக்க வேண்டும் என அவர் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார். 

இதேவேளை, யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகிய இரு தரப்பினாலும் பொதுமக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தமை தனது விஜயத்தின் போது கண்டறியப்பட்டதாக அவர் கூறியுள்ளார். 

மேலும், வடக்கு கிழக்கு மாத்திரமன்றி, மலையகத்திலுள்ள தமிழ் மக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம் என ஐநா மனித உரிமை ஆணையாளர் ஷெய்ட் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார்.