பாராளுமன்றத்தில் அமளிதுமளி ,செங்கோளை பாதுகாப்பதற்காக சபாநாயகர் பாரிய பிரயத்தனம் !

Parliament-Sri-Lanka-interior
  ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினருக்கு உரிய சலுகைகள் பாராளுமன்றத்தில் வழங்கப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றத்தில் இன்று உறுதியளித்துள்ளார்.

தமக்கான உரிய இடம் கிடைக்கவில்லை என ஒன்றிணைந்த எதிர்க்கட்சி சுமத்திய குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார் . 

ஏனைய கட்சிகளுக்கு வழங்கப்படுகின்ற அனைத்து சலுகைகளும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கு வழங்கப்படும் என சபாநாயகர் உறுதி வழங்கியுள்ளார். 

எனினும், ஒன்றிணைந்த எதிர்க்கட்சி முன்னெடுக்கின்ற விடயங்கள் தமக்கு உரிய வகையில் அறிவிக்கப்பட்டு செயற்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

அதனைத் தொடர்ந்து, பாராளுமன்றத்தில் ஆளும் தரப்பினருக்கும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினருக்கும் இடையில் அமளிதுமளி ஏற்பட்டது. 

அமளிதுமளிக்கு மத்தியில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, உள்ளூராட்சி மன்றங்களில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான சட்டமூலத்தை கொண்டு வர தாம் இன்று முயற்சித்ததாகவும், அதற்கு ஒன்றிணைந்த எதிர்க்கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் கூறியுள்ளார். 

உள்ளூராட்சி மன்றங்களில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும் எனவும், அதற்கான ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் பிரதமர் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார். 

பிரதமரை உரை நிகழ்த்தவிடாது ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்தில் கூச்சலிட்ட வண்ணமே இருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் பாராளுமன்ற சபை மத்திக்கு பிரவேசித்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இந்த நிலையில், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் செங்கோளுக்கு முன்பாக நின்ற வண்ணம் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும், செங்கோளை பாதுகாப்பதற்காக சபாநாயகர் பாரிய பிரயத்தனத்தை மேற்கொண்டு வருவதாகவும் பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.