கூட்டு எதிர்க்கட்சியினரை தனியான குழுவாக அங்கீகரிப்பது தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று !

Karu Jayasuriya_2
நாடாளுமன்றத்தில் செயற்படும் கூட்டு எதிர்க்கட்சியினரை தனியான குழுவாக அங்கீகரிப்பது தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று அறிவிக்கப்படவுள்ளது.

கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தங்களை தனியான நாடாளுமன்றக்குழுவாக அங்கீகரிக்குமாறு கோரி கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் சபாநாயகரிடம் கடிதம் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்படும் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் 52 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி உறுப்புரிமையிலிருந்து விடுபட்டு சுயேச்சை உறுப்பினர்களாக நாடாளுமன்றத்தில் செயற்படத் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கூட்டு எதிர்க்கட்சித் தொடாபில் சபாநாயகர் கரு ஜயசூரிய இன்றைய தினம் தீர்மானிக்க உள்ளார்.

நாடாளுமன்றிற்குள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரும்பியவாறெல்லாம் கடமையாற்ற அனுமதிக்க முடியாது என சபாநாயகர் கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றிற்கு தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும். அமுலில் உள்ள சட்ட திட்டங்களுக்கு அமைவான வகையில் நடந்து கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

தமது தரப்பினை சுயாதீன குழுவாக இன்று முதல் அங்கீகரிக்குமாறு கூட்டு எதிர்க்கட்சி சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இந்த விடயம் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் ஆகியோரிடம் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியிருந்தேன் என கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சகல வரப்பிரசாதங்களையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த விடயம் குறித்து இன்று முற்பகல் கூட்டு எதிர்க்கட்சியினரை அழைத்து விளக்கம் அளிக்கப்பட உள்ளது கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும், கூட்டு எதிர்க்கட்சியினர் சுயாதீனமாக இயங்குவது குறித்து விடுத்த கோரிக்கைக்கு எவ்வாறான பதில் அளிக்கப்படும் என்பதனை வெளியிடவில்லை.

கூட்டு எதிர்க்கட்சியினருனடான சந்திப்பின் போது அது குறித்த விளக்கத்தை சபாநாயகர் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.