ஊரக வளர்ச்சி திட்ட இளம் ஆய்வாளர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்  !

modi1
 பிரதம மந்திரியின் ஊரக வளர்ச்சி திட்ட ஆய்வில் நாடு முழுவதும் ஏராளமான இளம் ஆய்வாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் நாட்டில் உள்ள கிராமப்புற, பின்தங்கிய மற்றும் மழைவாழ் பகுதிகளில் தங்கி மக்களின் சுகாதாரம், கல்வி, சத்தான உணவு, மகளிர் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு தேவைகள் மற்றும் வாழ்க்கை முறைகள் குறித்து ஆய்வு செய்கின்றனர்.

இந்த இளம் ஆய்வாளர்கள் 230 பேர் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்தித்து கலந்துரையாடினர். இவர்களில் 11 பேர் தாங்கள் நிறைவு செய்த ஆய்வை பிரதமரிடம் ஒப்படைத்தனர்.

அப்போது பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-

இளம் ஆய்வாளர்கள் மக்களுடன் ஒன்றிணைந்து பணியாற்றுவதன் மூலம் கிராமப்புற பகுதியில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர். உயர்குடியில் பிறந்து, குடும்ப சூழ்நிலையை அனுசரித்து ஊரக பகுதிகளில் தங்கி பணியாற்றும் ஆய்வாளர்கள் சிறு குறையும் இன்றி தங்கள் பணியை செய்து வருவது பாராட்டுக்குரியது ஆகும்.

ஆய்வாளர்கள் தெரிவித்த கருத்துகள் மூலம் ஊரக வளர்ச்சி திட்டத்தை மேலும் சிறப்பாக செய்ய முடியும் என்று நம்புகிறேன். ஆய்வை நிறைவு செய்த இளம் ஆய்வாளர்கள் மேலும் ஒரு ஆண்டு ஊரக பகுதிகளில் தங்கி மக்களின் வளர்ச்சிக்கு சேவை ஆற்ற வேண்டுகோள் விடுக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

கலந்துரையாடல் முடிவில் ‘‘ஸ்கிரிப்டிங் சேஞ்ச்’’ என்ற புத்தகத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். அப்போது மத்திய ஊரக வளர்ச்சி திட்ட மந்திரி சவுத்ரி பிரேந்தர் சிங் உடன் இருந்தார்.