கிழக்கு மகாண கராத்தே சங்கத்தலைவர் சாய்ந்தமருது இக்பால் தனக்கு கிடைத்த தலைவர் பதவி தனது திறமைக்கு வழங்கப்பட்டதெனவும் தான் இந்த துறையில் நீண்ட காலமாக ஜாம்பனாக இருப்பதால் அதற்கு கராத்தே சமூகத்தினர் வழங்கிய பரிசு தான் இதுவெனவும் பீத்தியிருக்கிறார். அவர் இது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில் கடந்த காலங்களில் இந்த துறையில் ஈட்டிய சாதனைகளையும் விலாவரிப்படுத்தியுள்ளார். சிங்கள சமூகத்தின் மத்தியில் தானொருவர் மட்டுமே முத்தாகத்திகழ்வதாகவும் வர்ணித்திருக்கிரார்.
உண்மையில் சாய்ந்தமருது இக்பால் நமது சமூகத்திற்கு கிடைத்த அறிய பொக்கொஷம் என நினைக்கும்போது நாம் பெருமிதம் அடைகிறோம். கனம் இக்பால் அவர்களே, நீங்கள் ஒரு விளையாட்டு வீரராக இருந்த போதும் உங்கள் எழுத்துக்களில் விளையாட்டு வீரனுக்குறிய மனப்பக்குவம் இருப்பதாகத் தெரியவில்லை. நீங்களும் உங்கள் முஸ்லிம் காங்கிரஸ்காரர்களும் எப்போதுமே உங்கள் எழுத்துக்களில் ரிசாட் பதியுதீன் மீதான காழ்ப்புணர்வுகளையே கொட்டித்தீர்க்கிறீர்கள். முஸ்லிம் சமூகத்தின் மீதான பார்வையையும் முஸ்லிம் சமூக அரசியல்வாதிகள் தொடர்பான ஆக்கபூர்வமான விமர்சங்களையுமே எழுதிவருவதாக பறைசாற்றுகின்றீர்கள். உங்கள் எழுத்துக்களை ஆழமாக மீண்டும் ஒருமுறை படித்துப்பாருங்கள்.
முஸ்லிம் காங்கிரஸிடமிருந்து கை நீட்டி பழக்கப்பட்ட நீங்கள், ரிசாட் தொடர்பான ஆக்க பூர்வமான கட்டுரைகள் வரும்போது குறிப்பிட்ட எழுத்தாளர்கள் ரிசாட்டிடமிருந்து அன்பளிப்பை பெற்றுக்கொண்டு எழுதுவதாக கூறுகிறீர்கள். கருத்துக்களை கருத்துக்களால் தான் மோதவேண்டும். கைலஞ்சம் பெற்றுக்கொண்டு புனிதமான எழுத்துக்களை கெடுத்துவிடக்கூடாது. ஹக்கீமுடன் சேர்ந்து சமூகத்தின் நலனுக்காக இணைந்து பணியாற்றத்தயாரென்று ரிசாட் பதியுதீன் இணையதளமொன்றுக்கு கூறியதாக வெளிவந்த செய்தியை, கை – கால் வைத்து மிகவும் அழகாக திருபுபடுத்தி முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றுவதற்கு நீங்கள் திட்டமிட்டு செயற்பட்டீர்கள்.
விமர்சனங்கள் தான் உங்கள் எழுத்துக்களென்றால் அந்த கட்டுரையை மிகவும் கேவலமான முறையில் எழுதியிருக்க மாட்டீர்கள். நீங்கள் முஸ்லிம் காங்கிரஸிடமிருந்து கை நனைக்காமல் இதயசுத்தியுடன் எழுதுவதாக இருந்தால் அக்கட்சி தொடர்பாகவும் அக்கட்சியின் தலைமை தொடர்பாகவும் நியாயமான விமர்சனங்களை எழுதியிருப்பீர்கள். தேர்தல் காலங்களிலே கரையோர மாவட்டமென்று கோஷத்தை உச்சரித்து அம்பாறை மாவட்ட அப்பாவி முஸ்லிம்களை ஏமாறச்செய்யும் முஸ்லிம் காங்கிரஸ்காரர்களின் முகத்திரையை கிழித்திருக்க வேண்டும். கல்முனை முன்னாள் மேயர் சிராஸ் மீரா சாகிப்பும், கிழக்கு மாகாண முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஜெமீலும் முஸ்லிம் காங்கிரசில் இருந்து வெளியேறியதனால் அவர்களின் சொந்த ஊரான சாய்ந்தமருதுவில் முஸ்லிம் காங்கிரஸ் ஆட்டங்கானத் தொடங்கியிருப்பது அதே ஊரைச்சேர்ந்த கராத்தே வீரரான உங்களுக்கும் தெரியாததொன்றல்ல.
அந்த சரிவை நிவர்த்தி செய்வதற்காவும் சாய்ந்தமருது பள்ளிவாசல் சங்கத்தினரதும், மரைக்கார் மாரினதும், ஊர் ஜமாஅத்தாரினதும் அழுத்தங்களுக்கும் அஞ்சியே சாய்ந்தமருது பிரதேச சபை என்ற ஆயுதத்தை பொலிஷ் பண்ணி தலைவர் தன் கையில் மீண்டும் எடுத்துள்ளார். பொதுத்தேர்தலில் அம்பாறை முஸ்லிம் பிரதேசங்களில் மயில் தோகை விரித்து ஆடியதற்கு பயந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் காலில் விழுந்து கெஞ்சிக்கூத்தாடி அவரை கல்முனை சந்தாங்கேணி மைதானத்திற்கு கொண்டு வந்த ஹக்கீம் சாய்ந்தமருது பிரதேச சபையை ஐ தே க அரசாங்கம் வழங்குமென்ற அவசரமான அறிவிப்பையும் ரணிலின் வாயிலாக வெளியிடச்செய்தார்.
ஆனால் இற்றைவரை அந்த உறுதிமொழிக்கு என்ன நடந்தது? அதன் பின்னர் இடம்பெற்ற அம்பாறைகூட்டங்களில் தலைவர் ஹக்கிம் இது தொடர்பில் வீர வசனம் பேசினாரே..!!! கண்டியில் இடம்பெற்ற கட்சியின் பேராளர் மாநாட்டில் ஜனவரி முப்பத்தி ஒன்று என ’டெட்லைன்’ கூறினாரே, ஆனால் இன்று திகதி என்ன? என்று அவரிடம் கேட்டுப்பருங்களேன். தேசியப்பட்டியலில் கட்சிக்குள் நடக்கும் தில்லு முல்லுகளை நீங்கள் எப்போதாவது எழுதியதுண்டா? முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஹசனலி இல்லாவிட்டால் இன்று உங்கள் தலைவருக்கு இந்த அரசாங்கத்தில் இடமிருந்திருக்காது. தாருஸ்ஸலாமில் அதாவுல்லா – ஹபீஸ் நசீர் கூட்டு அரங்கேற்றிய தலைவருக்கெதிரான சதி முயற்சியை (தலைவர் அப்போது நோர்வேயில்) , கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவுத்தும் முன்னாள் தேசிய அமைப்பாளரும் புத்தளம் நகரபிதாவுமான கே ஏ பாயிஸும் முன்னாள் செனட்டர் மர்ஹூம் மசூர் மெளலானவும் இணைந்து முறியடித்திருக்காவிட்டால் உங்கள் தலைவர் தலைவர் ஹக்கீமின் இன்றைய நிலையை யோசித்து பாருங்கள்.
கிழக்கு மாகாண முதலமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவருமான ஹாபீஸ் நசீர் அஹமட்டின் அழுத்தத்திற்கு பயந்து உங்கள் தலைவர் பஸீர் சேகுதாவுத்திற்கு பொதுத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை தேசியப்பட்டியலில் எம் பி பதவியையும் வழங்கவில்லை. முஸ்லிம் காங்கிரஸின் தலைமையை நாகரீகமாக விமர்சித்து வந்த பஸீருக்கு பாராளுமன்றத்தில் கதவடைப்பு செய்தார். மீண்டும் மீண்டும் கிண்ணியாவில் தோல்வியை சந்தித்து வரும் சின்ன தெளபீக்கிற்கு எம் பி பதவியை தாரைவார்த்ததன் பின்னனி என்னவென்று உங்கள் தலைவரை நீங்கள் எப்போதாவது கேட்டதுண்டா?
கடந்த பொதுத்தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளராக ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தரும் பின்னாளில் பொதுஜன ஐக்கிய முன்னனியின் விசுவாசியாகவும் இருந்த அலிசாகஹிர் மெளலானாவிற்கு மு காவில் டிக்கற் வழங்கியதன் காரணமென்னெ? முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்ட நாட்களில் பேரினவாதிகளை திருப்திப்படுத்துவதற்காக மர்ஹூம் அஷ்ரப்பை கொச்சைப்படுத்தி மேடைகளில் அன்னாரை தாருமாறாக விமர்சித்த அலிசாஹிர் மெளலானா இன்று முஸ்லிம் காங்கிரஸின் போராளியாக மாறிவிட்டாரா? ஹாபீஸ் நசீர் அஹமட்டை 1994ஆம் ஆண்டு பொதுதேர்தலில் தலைவர் அஷ்ரப் ஏறாவூர் மக்கள் சார்பாக தேர்தலுக்கு நிறுத்திய போது இந்த அலிசாஹிர் மெளலானா அவருக்கு வேட்டுவைத்தது உங்களுக்கு நினைவிருக்கிறதா? நீங்கள் எப்போதவது இவ்வாறான விடயங்களை அம்பலப்படுத்தியதுண்டா? இது தானா உங்கள் விமர்சனப்பார்வை? கொழும்பிலே கராத்தே சங்கமொன்று ஐயாயிரம் ரூபாவுக்கு கலாநிதிப்பட்டம் வழங்கி உண்மையான துறை சார் கல்வியலாளர்களை கொச்சைப்படுத்தி வருகிறதே, உங்கள் பேனா இதைப்பற்றி பேசமறுப்பதேன்? எப்போதும் குண்டாஞ்சட்டிக்குள் குதிரையோடுவது தானா உங்கள் பழக்கம்? சகோதரர் இக்பால் அவர்களே, ரிசாட் எதிர்ப்பு புராணத்தை இனியாவது கைவிடுங்கள். அதற்காக ரிசாட் ஒருபோதும் உங்களுக்கு கூலி தரப்போவதில்லை. இறைவன் உங்களுக்கு நற்கூலியைத்தருவானென்ற நம்பிக்கை கலிமா சொன்ன எங்களுக்கு இருக்கின்றது.
எம்.முஹாஜிரீன்