மு.கா.வுக்கு கிடைத்த தேசியப் பட்டியல் ஆசனத்திற்கு தற்காலிகமாக நியமிக்கப்பட்ட சல்மானை இராஜினாமாச் செய்து விட்டு நிரந்தரமாக ஒருவரை மு.கா.தலைமை எப்போது நியமிக்கும்? அவர் யாராக இருப்பார்? என்ற எதிர்பார்ப்புக்கள் வலுவடைந்து கொண்டிருக்க, தலைமை மெத்தனப் போக்கையே கடைப்பிடிக்கின்றது
முன்னொரு காலத்தில் ரேஷன் கடை எனப்படும் கூட்டுறவுக் கடைக்கு வரையறுக்கப்பட்ட அளவிலான அத்தியாவசிய பொருட்களே அரசாங்கத்தால் வழங்கப்படும். அதனை பெற்றுக் கொள்வதற்காக ஏழை மக்கள் உணவுப் பங்கீட்டு கூப்பன் அட்டைகளுடன் நேர காலத்தோடு போய் குழுமி விடுவார்கள். கூட்டுறவுக் கடை உரிய நேரத்திற்கு திறக்கப்படாது. காலதாமதமாகி முகாமையாளர் வந்து, உள்ளே சென்றாலும் மேலும் பல நிமிடங்கள் கடையைத் திறக்கமாட்டார். சில முகாமையாளர்கள் தமது சொந்த கணக்கு வழக்குகளை கணிப்பிட்ட பின்னரே முன்னேயுள்ள கதவை திறப்பார்கள். வரிசையில் முன்னே நிற்கின்ற அல்லது எல்லோரையும் தள்ளி வீழ்த்திக் கொண்டு முன்னே செல்லும் பலம்மிக்க நபர்கள் அல்லது முகாமையாளருக்கு நெருக்கமானவர்களுக்கே பெரும்பாலும் உலர் உணவுகள் கிடைக்கும். மற்றவர்களுக்கு அடுத்த முறை வாருங்கள் என்று சொல்லப்படும். முஸ்லிம் காங்கிரஸ் தேசியப் பட்டியல் எம்.பி.களை பிரித்தளிப்பதில் காட்டிவரும் மெத்தனப் போக்கு, இந்த கூப்பன் கடை நடைமுறைகளையே நினைவுபடுத்துகின்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு கிடைக்கப் பெற்ற தேசியப் பட்டியல் பாராளுமன்ற ஆசனத்திற்கு தற்காலிகமாக நியமிக்கப்பட்ட சட்டத்தரணி எம்.எச்.எம்.சல்மானை இராஜினாமாச் செய்து விட்டு அவ்விடத்திற்கு நிரந்தரமாக ஒருவரை மு.கா.தலைமை எப்போது நியமிக்கும்? அவர் யாராக இருப்பார்? என்ற எதிர்பார்ப்புக்கள் வலுவடைந்து கொண்டிருக்கின்ற நிலையில் ரவூப் ஹக்கீம் இன்னும் மெத்தனப் போக்கையே கடைப்பிடித்து வருகின்றார்.
தற்காலிகமாக என்று சொல்லி வழங்கப்பட்ட தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்புரிமையை, ஒரு சுழற்சி முறை எம்.பி. பதவி போல ஐந்தரை மாதங்களாக சல்மான் சுகித்துக் கொண்டிருக்க, தலைவர் அதை வைத்து மிக நுட்பமான காய்நகர்த்தல் ஒன்றை மேற்கொண்டு வருகின்றார். இது தொடர்பில், கட்சியில் முக்கிய பொறுப்புக்களில் இருக்கின்ற உறுப்பினர்கள் தலையாட்டி பொம்மைகளாக இருக்க, கட்சியை மனப் பூர்வமாக நேசிப்போரும் போராளிகளும் உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டிருக்கின்றனர்.
தற்காலிக நடவடிக்கை
இதில் மிகப் பெரிய சுவாரஸியம் என்னவென்றால், ஹக்கீம் சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டு நல்லபிள்ளை போல் அங்கிருந்து வருகின்ற முக்கியஸ்தர்கள் பலர், வெளியில் வந்து தமக்கு நெருக்கமானவர்களுக்கு அழைப்பை எடுத்து புலம்பித் தள்ளுகின்றனர். இதை தாங்க முடியாத சில புள்ளிகள், தொலைபேசியில் அழைத்து தலைவர் இப்படிச் செய்துவிட்டார். இந்த அநியாயத்தை சும்மா விடக் கூடாது. எனவே, நீங்கள் பத்திரிகையில் அப்படி எழுதுங்கள் என்று சொல்லும்போது அவர்களைப் பார்க்க பாவமாக இருக்கும். அவர்களுக்கு கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை. அதாவது ஹக்கீமை பகைத்துக் கொள்ளவும் கூடாது. அதேநேரம் தமக்கு அல்லது நியாயமான ஒருவருக்கு தேசியப் பட்டியல் எம்.பி. கிடைக்கவும் வேண்டும் என எண்ணுகின்றனர்.
உண்மையில், ஐ.தே.க.வின் தேசியப்பட்டியலுக்காக மு.கா. முன்மொழிந்த பெயர்களுள் – கட்சியின் மூத்த உறுப்பினர்கள், கட்சிக்காக உயிரை துச்சமென மதித்தவர்களை பெயரிட்டிருக்க வேண்டும். அன்றேல் எம்.பி. கேட்டு ஒற்றைக்காலில் நிற்கும் ஊர்களைச் சேர்ந்தவர்களை போட்டிருக்க வேண்டும். ஆனால் இதில் எந்த வகையறாவுக்குள்ளும் வராத இரண்டு பேர் அப் பட்டியலில் இணைக்கப்பட்ட வியூகம் பாரிய சர்ச்சையை தோற்றுவித்தது.
மு.கா.வும் அதற்கு கிடைக்கும் வெகுமானங் களும் யாருடைய தனியுடமையும் அல்ல. மாறாக, இந்ந நாட்டில் பரவலாகவும் வடக்கு, கிழக்கில் செறிவாகவும் வாழ்கின்ற முஸ்லிம் மக்களின் சொத்தாகும். எனவே, அதற்கு பிரதிநிதிகளை நியமிக்கின்ற போது மிகக் கவனமாக நியமிக்க வேண்டும். கட்சியின், மக்களின் நம்பிக்கையை வென்ற நபர்களையே நியமிக்க வேண்டுமேயொழிய தனியே தலைவரின் நம்பிக்கை இங்கு ஒரு பொருட்டல்ல. ஏனென்றால், மு.கா. என்பது ஒரு தனியார் நிறுவனம் அல்ல. எனவே சில்லறைக் கடைக்கு ஆட்களை நியமிப்பது போல முதலாளிக்கு விரும்பியவர்களை பணிக்கமர்த்த முடியாது.
தற்காலிகமாக இருவரை பாராளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்க தீர்மானம் எடுத்த போது அவர்கள் இருவரும் தலைவருக்கு நம்பிக்கையானவர்கள் என்றே சொல்லப்பட்டது. அப்படியென்றால் தேசியப் பட்டியலில் இருக்கின்ற மற்றைய மூவரும் கட்சியின் உறுப்பினர்களும் தலைவரின் நம்பிக்கைக்கு உரியவர்களல்ல என்றுதானே அர்த்தம்!? ஆனால் இது பற்றி தலைமை சொன்னபோது உயர்பீட உறுப்பினர்களில் 99 வீதமானோர் வாய் திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை. தலைவரை பகைத்துக் கொண்டால் – தமது வருமானம், தமது பிள்ளைகளின் தொழில், கொந்தராத்து, வியாபாரம், அரசியல் கனவு எல்லாம் பாதிக்கப்பட்டுவிடும் என்று நினைத்தார்கள். என்னவாவது நடந்து விட்டுப் போகட்டும் நமது காரியம் முடிந்தால் சரி என்ற எண்ணமே பொதுவாக எல்லோருக்கும் இருந்தது.
அஷ்ரஃப் மரணித்த போது முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடம் 27 பேரை மட்டுமே கொண்டிருந்தது. ஆனால் இன்று அதன் எண்ணிக்கை 90 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது பாடசாலையில் 3 வகுப்புக்களாக பிரிக்கக் கூடிய மாணவர்களின் எண்ணிக்கைக்கு இது சமமாகும். எல்லா ஊர்களிலும் உயர்பீட உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் பதவிகள் வழங்கப்பட்டன என்பது எவ்வளவுக்கு உண்மையோ அதுபோலவே அவர்களுக்கான அதிகாரங்கள் மறைமுகமாக பறிக்கப்பட்டுள்ளன என்பதும் உண்மையே. உயர்பீட உறுப்பினர் என்ற கௌரவம் கிடைத்ததே சிலருக்கு போதுமானதாக இருக்கின்றது. இதில் அங்கம் வகிக்கும் 90 வீதமானவர்கள் தலைவரால் நியமிக்கப்பட்டவர்கள் அல்லது தலைவரில் ஏதோ ஒரு அடிப்படையில் தங்கி இருப்பவர்கள். எனவே அவர்களால் எதையும் எதிர்த்துப் பேசும் திராணி இல்லை.
எம்.பி. சூத்திரம்
எம்.பி. பதவியை எடுத்துக் கொண்டு பல்டியடித்த ஹூசைன் பைலாவை தேசியப் பட்டியலில் நியமித்தமை முதற்கொண்டு, 18ஆவது திருத்தத்திற்கு மஹிந்தவுக்கு ஆதரவளித்தமை தொட்டு, இன்றைய தேசியப்பட்டியல் விடயத்தை கையாளுதல் வரைக்குமான எல்லா நகர்வுகளையும் மு.கா. தலைவர் மேற்சொன்ன 90 வீதமானவர்களின் பலவீனத்தை பயன்படுத்தியே மேற்கொண்டிருக்கின்றார். உயர்பீட உறுப்பினர்களின் கதைகளை கேட்டால், மசூரா அடிப்படையில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுவதாக தெரிய வில்லை. அப்படியான தீர்மானங்கள் எடுக்கப்படுகின்ற போது யாராவது ஒரு உறுப்பினர் கட்சித்தலைவருடன் கடுமையாக முரண்பட்டு சமூகத்திற்காக குரல் கொடுத்தார் என்று நீங்கள் யாராவது அறிந்ததுண்டா?
ஒரு ஊருக்கு இரண்டு எம்.பி.க்கள் இருக்க முடியாது என்பது மிகவும் நியாயமானதே. ஆனால் அந்த தாரக மந்திரத்தை வைத்து ஒரு அரசியல் சதுரங்கம் நடத்தப்பட்டது. கட்சியில் மூத்த மூவர் வீழ்த்தப்பட்டுள்ளனர். ஆனால் ஒரு ஊருக்குள்ளேயே இரண்டு எம்.பி. இருக்கக் கூடாது என்றிருக்க, ஒரு குடும்பத்திற்குள் ஏன் இரண்டு பேர் எம்.பி.யாக இருந்தனர்? என்பதை மு.கா. தலைவர் ஹக்கீம் நியாயப்படுத்தவில்லை.
அதேபோல் இன்று வரைக்கும் மு.கா.வின் கோட்டையாக இருக்கின்ற அம்பாறை மாவட்டம் கடந்த தேர்தலிலும் 3 உறுப்பினர்களை பெற்றுக் கொடுத்தது. நியாயமாகப் பார்த்தால் கட்சிக்கு கிடைக்கின்ற முழு அமைச்சு அம்பாறைக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் மறைந்த தலைவர் அஷ்ரஃபிற்குப் பிறகு இம் மாவட்டத்திற்கு மு.கா. சார்பு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு வழங்கப்படவில்லை. இம்முறை தேசியப் பட்டியலும் கிடைப்பதற்கான நிகழ்தகவுகள் குறைந்து செல்கின்றன. இவற்றையெல்லாம் யாராவது தட்டிக் கேட்டு உயர் பீடக் கூட்டத்தில் இருந்து வௌியேறிதாக தகவல் எதுவும் கசியவில்லை. எனவே, தவறு தலைவரில் மட்டும் இல்லை என்பதை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
எது எவ்வாறிருப்பினும், தற்காலிக எம்.பி.களில் ஒருவரை பதவி விலக்கி நிரந்தரமாக ஒருவரை நியமிப்பதற்கு மு.கா. தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நடவடிக்கை எடுத்தார். இதன்படி தலைவரின் சகோதரர் டாக்டர் ஹபீஸ் தனது பதவியை இராஜினாமா செய்ய, திருமலை எம்.எஸ்.தௌபீக் அவ்விடத்திற்கு நியமிக்கப்பட்டார். பல மாதங்கள் கழித்து என்றாலும் சகோதரர்கள் இருவரும் இவ்வாறான செயற்பாடு ஒன்றை மேற்கொண்டமை மக்களிடையே அவதானிப்பை பெற்றிருந்ததை மறுக்க முடியாது. ஆனால், இது நடைபெற்று 17 நாட்கள் முடிவடைந்து விட்ட பிற்பாடும் இக்கட்டுரை எழுதி முடிக்கப்படும் வரைக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சல்மான் தனது பதவியை உத்தியோகபூர்வமாக இராஜினமாச் செய்யவில்லை.
விமர்சனத்திற்கு அப்பால் இவ்விடத்தில் இன்னுமொரு விடயத்தை குறிப்பிட்டாக வேண்டும். அதாகப்பட்டது தற்காலிகமாக பாராளுமன்ற உறுப்பினரை நியமிப்பதற்காக கட்சியின் நேரடி அரசியலோடு தொடர்புபடாத இருவர்களை தலைவர் தேர்ந்தெடுத்தமை விமர்சனத்திற்குட்பட்டது என்றாலும், அதில் ஒருவரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹபீஸ் தனிப்பட்ட ரீதியில் மிகவும் நல்ல மனிதர். அவருடன் ஒரு சகோதரர் போல பழகிய அனுபவம் என் போன்ற பலருக்கு உள்ளது. அந்த வகையில் அவரது மேன்மையான குணாதிசயங்கள் மெச்சப்படத்தக்கவை. தொழில்சார் அடிப்படையில் ஒரு வைத்தியராகவும் மு.கா. தலைவரின் மூத்த சகோதரராகவும் இருந்தாலும் எந்த பந்தாவும் இன்றி பழகக் கூடிய ஒரு மென்மையான மனிதர். எனவே, யாருக்கோ உரித்தான பதவியை 5 மாதங்களாக தான் நிரப்பிக் கொண்டிருப்பது அவருக்கு உறுத்தலாக இருந்திருக்கும் என்பதை நன்றாக அனுமானிக்க முடிகின்றது. அதனடிப்படையில் இராஜினமாச் செய்வதற்கு அவராக இழுத்தடித்திருக்க மாட்டார் என்ற முடிவுக்கும் வரலாம் என நினைக்கின்றேன்.
பாராளுமன்ற உறுப்பினராக இருந்த இக்காலப்பகுதியில் டாக்டர் ஹபீஸ் பாராளுமன்றத்தில் ஒரு சில விடயங்களை பேசி இருக்கின்றார். இவ்விடயம் பெரிதாக பிரசித்தப்படுத்தப்படாவிட்டாலும், தான் அறிந்த பிரச்சினைகள் குறித்து அவர் உரையாற்றியுள்ளார். ஆனால், சல்மான் எம்.பி. அவ்வாறு எதாவது பேசியுள்ளாரா என்பதை ஹன்சாட்டிலேயே தேடிப்பார்க்க வேண்டும்.
மு.கா. தலைவர் ஹக்கீம், தேசியப் பட்டியல் சர்ச்சையை தணிப்பதற்காகவும் கட்டம் கட்டமாக அதனை எதிர்கொள்வதற்காகவுமே ஒவ்வொருவராக இராஜினாமாச் செய்ய வைப்பதற்கு நடவடிக்கை எடுத்தார் என்று முன்னைய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். இது நடந்து இரு வாரங்கள் கடந்து விட்டன. இன்னுமொரு தேசியப் பட்டியல் எம்.பி. மீதமிருப்பதாலும், பலரை ஹக்கீம் வசியப்படுத்தி விட்டதாலும், தௌபீக் எம்.பி.யாக நியமிக்கப்பட்டமைக்கு பாரிய எதிர்ப்புக்கள் கிளம்பவில்லை என்றே சொல்ல வேண்டும்.
இந்நிலையில், சல்மானை இராஜினாமா செய்ய வைத்தால் (?) என்ன விளைவுகள் ஏற்படும் என்பது தேசியத் தலைமைக்கு தொிந்திருக்கும். அதனை சமாளிப்பதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்வது ஹக்கீமுக்கு கைவந்த கலையும் கூட. யாரை எப்படிச் சமாளிப்பது என்பதும், சமாளிக்க முடியாதவர்களை என்ன செய்வது என்பதையும் அவர் நன்கறிந்தவர். எனவே சல்மானை பதவி விலக்க இன்னுமேன் தாமதம்?
இரு தினங்களுக்கு முன்னர், சல்மான் எம்.பி. பதவி விலகப் போவதாக இணையத்தளத்தில் செய்தி ஒன்று வௌியாகியிருந்தது. நல்ல செய்தி என்று கட்சி ஆதரவாளர்கள் நினைத்தனர். ஆனால் தனது சொந்த காரணங்களின் அடிப்படையில் அவர் இராஜினாமா செய்யவுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்ததை பார்த்த போது, அவர்களுக்கு கோபமும் சிரிப்பும் கலந்த ஒரு உணர்வே ஏற்பட்டிருக்கும்.
அமானிதம் என்பது
சல்மான் எம்.பி. இதற்கு முன்னர் கட்சியின் நம்பிக்கையை பாதுகாத்தவர் என்பதை மறுப்பதற்கில்லை. இராஜினாமா கடிதத்தில் அவர் கையொப்பமிட்டால் மாத்திரமே இன்னுமொருவரை அவ்விடத்திற்கு தலைவரால் கூட நியமிக்க முடியும் என்பதும் உண்மையே. அதற்கப்பால் நோக்கினால், சொந்த காரணங்களுக்காக அவர் இராஜினாமா செய்வதாக குறிப்பிட்டுள்ளமை உண்மை என்றால் அது நகைப்புக்கிடமானதாகும். ஏனெனில், அவரை விட முக்கியமானவர்கள், கட்சிக்காக பாடுபட்ட மூத்த வர்களுக்கும் பிரதேசங்களுக்கும் இப்பதவியை பெற்றுக்கொள்ள இதைவிட பெரிய காரணங்கள் இருக்கின்றன. இப்பதவியானது சல்மான் இந்த சமூகத்திற்கு ஏதாவது பாரிய சேவைகளைச் செய்தமைக்காக அவருக்கு வழங்கப்பட்ட வெகுமதியோ அல்லது அவரிடம் இருந்து எதையாவது சமூகம் பெற்றுக் கொள்வதற்காக வைக்கப்பட்ட அடமானமோ அல்ல. மாறாக, இது ஒரு அமானிதம்.
அமானிதம் என்பது என்ன? அமானிதம் என்பது ஒருவர் திருப்பிக் கேட்கும் வரைக்கும் ஒரு பொருளை பத்திரமாக வைத்திருக்கும் பணி மாத்திரமே. அதில் இருந்து அவர் எந்தவொரு பயனையோ வரப் பிரசாதத்தையோ பெற்றுக் கொள்ளக் கூடாது. அவ்வாறு பெற்றுக் கொண்டால் அதனை வேறு பெயர் கொண்டே அழைக்க வேண்டும். அமானிதத்தை கொடுப்பதற்கு, அதன் பொறுப்பாளிக்கு காரணம் எதுவும் தேவையில்லை. இவ்வாறிருக்க, தானாக முன்வந்தே பதவியை கொடுத்ததாக ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதன் மூலம், சில விடயங்களை மறைத்து மக்களிடையே நல்லெண்ணத்தை ஏற்படுத்தும் முயற்சிக்கு மிக நெருக்கமானதாகவே இது நோக்கப்படுகின்றது.
மு.கா.வினால் வழங்கப்பட்ட தேசியப்பட்டியல் எம்.பி.யை சுஹைர் மற்றும் ஹூசைன் பைலா போன்றோர் இராஜினாமாச் செய்ய மறுத்து நம்பிக்கை மோசடி செய்தனர். ஆனால், அசித்த பெரேரா, தலைவர் அஷ்ரஃப் சொன்னவுடன் விட்டுக் கொடுத்தார். இவ்வாறான பின்னணியில், சுஹைரையும் பைலாவையும் போலன்றி, அசித்த பெரேரா போன்று, டாக்டர் ஹபீஸ் போன்று சல்மான் எம்.பி.யும் நம்பிக்கையுடன் நடந்து கொள்வார் என்ற நம்பிக்கை மக்களுக்கு இருக்கின்றது. தலைவரின் நம்பிக்கைக்கு உரியவர் என்பதால் தலைவரை நம்பும் மக்களுக்கு சல்மானையும் நம்புவதை தவிர வேறு வழியில்லை.
இருப்பினும் மக்களின் இந்த நம்பிக்கையை தலைவர் ரவூப் ஹக்கீமும் பாராளுமன்ற உறுப்பினர் சல்மானும் மேலும் கால தாமதமின்றி வௌிப்படுத்த வேண்டும். அதன்மூலம் மக்களின் நல்லபிப்பிராயத்தை கொஞ்சம் தக்க வைத்துக் கொள்ள வாய்ப்பிருக்கின்றது.
இதேவேளை, வெற்றிடமாகப்போகும் (?) தேசியப் பட்டியல் எம்.பி. பதவிக்கு கடுமையான கிராக்கி ஏற்பட்டிருக்கின்றது. அரசியல் அதிகாரம் வழங்குதல் என்ற வார்த்தையை தலைவர் ஹக்கீம் பயன்படுத்தியமையால், அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் தேசியப் பட்டியல் எம்.பி.க்காக காத்திருந்த பலர் சீச்சி இந்தப் பழம் புளிக்கும் என்ற நிலைமைக்கு வந்தாற்போல் தெரிகின்றது. மறுபுறுத்தில், அரசியல் அதிகாரமற்ற பகுதிகளில் புதிய போட்டியொன்று உருவாகியுள்ளது. பெருந்தொகையை செலவழித்தேனும் எம்.பி.யாகி விட ஓரிருவர் கனவு காண்பதாகவும் கூறப்படுகின்றது. இன்னும் பல நாட்களின் பின்னர் எடுக்கப்படப்போகும், முடிவுகளை நியாயப்படுத்துவதற்காக முன்கூட்டியே செயற்கையான போட்டி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதோ என்ற சந்தேகமும் எழாமல் இல்லை.
எது எவ்வாறாயினும், உடனடியாக சல்மான் எம்.பி. தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும். அதற்கான உத்தரவை பிறப்பிக்க மு.கா. தலைவர் ஹக்கீம் நல்லநாள் பார்க்கத் தேவையில்லை. அப்பதவிக்கு மிகப் பொருத்தமான ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். அரசியல் முதிர்ச்சி, கட்சிக்கு ஆற்றிய பங்களிப்பு, மக்கள் நலனில் அக்கறை போன்ற விடயங்களின் அடிப்படையில் அடுத்த தேசியப் பட்டியல் எம்.பி. நியமிக்கப்படல் அவசரமானதும் அவசியமானதும் ஆகும். சமூகம், கட்சி என்ற அடிப்படையில் அன்றி, வேறு எந்த டீல்களுக்காகவும் யாரையும் எம்.பி.யாக நியமிக்க மக்கள் இடமளிக்க மாட்டார்கள்.
ஞாபகமிருக்கட்டும்! ஒருமுறை தவறிழைத்துவிட்டு, திருந்திக் கொள்ள நினைப்பவர்களுக்கு மட்டுமே. மக்கள் மன்றத்தில் பாவமன்னிப்பு கிடைக்கும்.