முதலில் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்; அதன் பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை!

515155544Untitled-1இலங்கையில் புதிதாக ஏற்படுத்தப்படவுள்ள அரசியல் சாசனம் தொடர்பில், தமிழ் மக்கள் பேரவை தமது கருத்துக்களை முன்வைத்துள்ளது. 

அதன் முதற்படியாக தமிழ் தரப்பும் சிங்கள தரப்பும் தம்மிடையே சமூக ரீதியில் ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்ட பிறகு அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கையை முன்னெடுக்க அந்தப் பேரவை முடிவு செய்துள்ளது. 

தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில், அதிகாரப் பகிர்வை உள்ளடக்கி அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என அந்தப் பேரவை ஞாயிற்றுகிழமை யாழ்ப்பாணத்தில் தெரிவித்தது. 

இது தொடர்பிலான வரைவு ஒன்றையும் அந்த பேரவையின் தலைவர்கள் வெளியிட்டுள்ளனர். 

நாட்டில் சுமார் மூன்றில் இரண்டு பங்கினர் பெரும்பான்மையின மக்கள் என்பதால், அவர்களுடன் முதலில் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொள்ளும் முடிவு எட்டப்பட்டது என அதன் பேச்சாளர் புவிதரன் பிபிசியிடம் தெரிவித்தார். 

சமஷ்டி முறையிலான தீர்வுக்கு இடமில்லை என்று மத்திய அரசு கூறினாலும், பல விட்டுக்கொடுப்புக்களுடன் அரசியல் தீர்வுக்குத் தயராக உள்ள தமிழ் மக்களின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதே இந்த முன்மொழிவுகளின் நோக்கமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

இந்த முன்மொழிவுகள் தொடர்பில் பொதுமக்களின் கருத்தறியப்பட்டு, நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்று தீர்வு யோசனைகள் முழுமையாக்கப்பட்டதன் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி பேரவை ஆலோசிக்கும் என்றும் புவிதரன் தெரிவித்தார். 

இதேவேளை, தமிழ் மக்கள் பேரவையின் இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தி வடமாகாண சபையின் 20 உறுப்பினர்கள் எழுத்து மூலமாக முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் கோரிக்கை விடுத்திருந்தாலும், அவர் இன்றையக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.