அமெரிக்காவின் வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா, ஜார்ஜியா, டென்னசி, பென்சில்வேனியா, கென்டகி, நியூஜெர்சி, நியூயார்க், வாஷிங்டன், மேற்கு வெர்ஜினியா மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்புயல் வீசியது. நியூயார்க் நகரில் கடந்த சனிக்கிழமை அதிக பட்சமாக 68 செ.மீட்டரும், வாஷிங்டன் நகரின் சர்வதேச விமான நிலைய பகுதியில் 74.2 செ.மீ பனியும் கொட்டியது. மேற்கு வெர்ஜினியா மாகாணத்தின் கிளெங்கரியில் நாட்டிலேயே மிக அதிக பட்சமாக 106.7 செ.மீ. பனிப்பொழிவு பதிவாகி இருந்தது.
இந்த பனி புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட நகரங்களில் ஒன்று நியூஜெர்சி. இந்த நகரத்தை சேர்ந்த பெலிக்ஸ் போனில்லா என்பவர் தனது குடும்பத்துடன் காரில் சென்றுள்ளார். அப்போது ஒரு இடத்தில் பனி அதிகமாக இருந்ததால், சாலையில் படர்ந்திருந்த பனியை வெட்டி எடுத்து வழி ஏற்படுத்தியுள்ளார். காரின் உள்ளே பெலிக்ஸின் 23-வயது மனைவி, 3-வயது மகள், 1-வயது மகன் ஆகியோர் இருந்துள்ளனர். காரின் உள்ளே உஷ்ணத்தை பராமரிப்பதற்காக எஞ்சின் தொடர்ந்து இயங்கியுள்ளது.
அப்போது எதிர்பாராத விதமாக காரின் சைலன்சர் குழாய் பனியால் மூடப்பட்டுவிட்டது. எஞ்சின் ஓடியதால் உற்பத்தியான கார்பன் மோனாக்சைடு வாயு காரின் உள்ளே பரவியுள்ளது. காரின் உள்ளே இருந்த மூன்று பேரும் இந்த வாயுவை சுவாசித்ததால் மயக்க நிலைக்கு சென்றுள்ளனர். பனியை வெட்டி முடித்துவிட்டு காரை திறந்த பெலிக்ஸ் மூன்று பேரும் மயக்கமாக இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
உடனே 3 பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் தாயும், மகனும் இறந்து விட்டதாக கூறிவிட்டனர், தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் 3-வயது பெண் குழந்தை உயிர் பிழைப்பது கடினம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிகிச்சை அளித்த மருத்துவர்களும், போலீசாரும், பொது மக்களும் இந்த உயிரிழப்புகளைக் கண்டு கதறி அழுதனர். இந்த சம்பவம் அந்த நகரத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சைலன்ட் கில்லர் என்று அழைக்கப்படும் கார்பன் மோனாக்சைடு, நிறம், சுவை, மணம் அற்றது. இந்த வாயுவை சுவாசிப்பவர்கள் சில நிமிடங்களில் மயக்க நிலைக்கு சென்றுவிடுவார்கள். இது போன்ற சம்பவங்களால் அமெரிக்காவில் மட்டும் 1999 முதல் 2010 வரையிலான இடைப்பட்ட காலத்தில் 5100 பேர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.