-ARA.FAREEL-
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் எனக்கும் இடையிலான உறவு தொப்புள் கொடி உறவை விட பலமானதாகும். என்னை எவராலும் வெளியே தள்ள முடியாது. நான் கட்சிக்கு இடையில் வந்து சேர்ந்தவனல்ல.
தொடர்ந்தும் கட்சியுடனேயே இருப்பேன் என முன்னாள் இராஜாங்க அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளருமான எம்.ரி. ஹஸன் அலி தெரிவித்தார். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்துக்கும் செயலாளர் ஹசன் அலிக்கும் இடையில் முரண்பாடுகள் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் அது பற்றி வினவியபோதே ஹசன் அலி இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்:
தேசியப் பட்டியல் நியமனம் எம்.எஸ். தௌபீக்குக்கு வழங்கப்பட்டதற்கும் எனக்கும் எந்தப் பிரச்சினையுமில்லை. நான் அதனை எதிர்க்கவுமில்லை. கட்சிக்கும் எனக்கும் ஆத்ம தொடர்பு இருக்கிறது. நான் கட்சியுடனேயே தொடர்ந்தும் இருப்பேன் என்றார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மக்களுக்குரிய கட்சி. வடக்கிலும் கிழக்கிலும் வட கிழக்குக்கு வெளியிலும் அஷ்ரபின் சிந்தனையுடனேயே இயங்கி வருகிறது. கட்சியில் நீ தான் இருக்க வேண்டும் அல்லது இருக்க முடியாது என்று கட்டுப்படுத்த முடியாது.
‘மறைந்த தலைவர் அஷ்ரபின் காலத்தில் கிழக்கில் 16 ஆயுதக் குழுக்கள் இயங்கி வந்த சந்தர்ப்பத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து நான் அடி வாங்கியுள்ளேன். அன்று பல சவால்களுக்கு மத்தியில் பாதுகாத்து வந்த கட்சியே முஸ்லிம் காங்கிரஸ். எனக்கும் கட்சிக்கும் இடையிலுள்ள உறவு சட்டத்துக்கும் அப்பாற்பட்டது.