நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க தாமாக முன்வந்த ஒரேயொரு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே என, அமைச்சர் சரத் அமுணுகம தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஆரம்பிக்கப்பட்டது முதல் அதிகாரத்துக்கு வந்த அனைவரும், ஜனாதிபதிக்கான அதிகாரங்களைக் குறைப்பதாகவே கூறினர். எனினும் அதனை செய்து காட்டியது மைத்திரிபால சிறிசேன மட்டுமே என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் புதிய அரசியலமைப்பு உருவாக்க நடைமுறையின் போது, ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்படும், சில யோசனைகள் மற்றும் கருத்துக்கள் தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வர முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை புதிய அரசியலமைப்பு தொடர்பில் யோசனைகள் மற்றும் கருத்துக்களை முன்வைக்க இருக்கும் காலம் போதுமானதாக இல்லை எனவும் சரத் அமுணுகம இதன்போது சுட்டிக்காட்டினார்.