எதிர்காலத்தில் ஈரான் இலங்கையில் முதலீட்டுத் துறையில் ஆர்வம் செலுத்த வேண்டும்: அமைச்சர் றிசாத் வேண்டுகோள்

 

7M8A4638 (1)_Fotorசுஐப் எம் காசீம்

இலங்கைக்கான ஈரானின் புதிய தூதுவராக பதவியேற்றுள்ள மொஹம்மட் ஷெயிரி மீரானி, கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீனை அவரது அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினார்.

7M8A4628_Fotor

இந்தச் சந்திப்பில் தூதுவருக்கு தனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும்  அமைச்சர் தெரிவித்தார்.

இரண்டு நாடுகளுக்குமிடையில் நல்ல புரிந்துணர்வும், திருப்தியான உறவும் இருப்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர் றிசாத், ஈரான் தொடர்பான சர்வதேச மட்டத்தில் உருவாகிய விவகாரங்களுக்கு இலங்கை என்றுமே ஈரானுக்கு ஆதரவாக இருப்பதைச் சுட்டிக்காட்டினார்.

ஈரானிய தலைவர்களுக்கும் தமது இதயபூர்வமான வாழ்த்துக்களைத்  தெரிவிப்பதாகவும் அமைச்சர் கூறினார்

பொருளாதார சர்ச்சைகளுக்கு மத்தியிலும் இரண்டு நாடுகளுக்குமிடையிலான  வர்த்தக, பொருளாதார ரீதியிலான உறவுகள் நீடித்து வருவதைச் சுட்டிகாட்டிய அமைச்சர், எமது நாட்டின் மொத்தமான வர்த்தகப் புரள்வு 2014ஆம்  ஆண்டு  188 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது என்றும் 2015 செப்டெம்பர் வரை அது 114 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது என்றும்  அமைச்சர் தெரிவித்தார்.

ஈரானுக்கு தேயிலையை ஏற்றுமதி செய்யும் நாடாக நாம் விளங்குகின்றோம். அத்துடன் தெங்கு, முந்திரி, நார்ப் பொருட்கள் ஆகியவற்றையும் ஏற்றுமதி செய்கின்றோம். கடந்த சில வருடங்களாக தேயிலை ஏற்றுமதியில் சிறிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார். அத்துடன் ஈரானிலிருந்து நாம் பிரதானமாக மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்து வருகின்றோம். பசளைகள். இரும்பு. உருக்கு, மின்சார மாற்றிகள் ஆகியவற்றையும் இறக்குமதி செய்கின்றோம். கடந்த சில வருடங்களாக மசகு எண்ணெய்  இறக்குமதியில் பல்வேறு கஷ்டங்களை நாம் சந்தித்த போதும் தற்போது வர்த்தகப் பொருளாதார துறையில் ஈரானும் இலங்கையும் முன்னணியில் திகழ்கின்றது.

வர்த்தக நடவடிக்கைகளை முன்னேற்றுவதற்கான தேவைப்பாடு நம்மிடம் உள்ளது. இரண்டு தரப்பினருக்குமிடையில் பரஸ்பர கலந்துரையாடல்கள் அவசியமாகின்றது. இரண்டு நாடுகளுக்குமிடையில் வர்த்தக ஊக்குவிப்பு நிகழ்வுகளை மேற்கொண்டு, தனியார் துறைக்கு ஊக்குவிப்பை வழங்க வேண்டும். எதிர்காலத்தில் எமக்கிடையிலான நல்லுறவுகளும் வர்த்தக மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளும் மேலும் முன்னேற்றமடையுமென நான் உறுதியாக நம்புகின்றேன். 

எதிர்காலத்தில் ஈரான் இலங்கையில் முதலீட்டுத் துறையில் ஆர்வம் செலுத்த வேண்டுமென நான் ஆலோசனை தெரிவிக்கின்றேன். அதற்கு எனது அமைச்சு முழுப் பங்களிப்பையும் உதவியையும் உங்கள் வழியாக வழங்குமென தெரிவித்துக் கொள்கின்றேன்.

7M8A4656_Fotor

ஈரான் முதலீட்டாளர்கள் எமது நாட்டில் முதலீடு செய்வதற்கு இது பொருத்தமான சந்தர்ப்பம். வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு எமது முதலீட்டுச் சந்தையை விரிவுபடுத்தியுள்ளோம், மேலும் இலங்கையில் உல்லாசப் பயணிகளை கவரக்கூடிய பல்வேறு மையங்கள் இருப்பதனால் ஈரானிய உல்லாசப்பயணிகள் இங்கு வருகை தர வேண்டுமென நான் அழைப்பு விடுக்கின்றேன் என்றும் அமைச்சர் றிசாத் தெரிவித்தார்.