அசாம் மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி பா.ஜனதா கட்சியின் பிரச்சாரத்தை இன்று தொடங்கினார்.
கோக்ராஜரின் போடோபாநகரில் இன்று பா.ஜனதா மற்றும் அதன் புதிய கூட்டணி கட்சியான போடோ மக்கள் முன்னணி (பிபிஎப்) சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜனதா, பிபிஎப் தலைவர்ககள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பேசிய மோடி, அசாம் மாநிலம் போதிய வளர்ச்சி அடையாமல் போனதற்கு 15 ஆண்டுளாக ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சிதான் காரணம் என்றும், மக்களின் பிரச்சினைகளை தீர்க்க எதையும் செய்யவில்லை என்றும் சரமாரியாக குற்றம் சாட்டினார். மத்தியில் இதற்கு முன்பு ஆட்சி செய்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கமும், அசாம் மக்களின் கனவுகளையும் அபிலாசைகளையும் நிறைவேற்றத் தவறிவிட்டது என்றும் அவர் குறைகூறினார்.
“கர்பி மற்றும் போடோ சமுதாயத்தினருக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்கப்படும். அதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. சமவெளி மற்றும் மலைப் பகுதிகளில் உள்ள பிரச்சனைகளை தீர்ப்பதற்கு ஒரே வழி வளர்ச்சிதான். இப்பகுதி மக்களின் கனவுகளையும், அபிலாசைகளையும் நிறைவேற்றுவோம். வடகிழக்கு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் டெல்லி காவல்துறையில் சேர்க்கப்படுவார்கள். இதற்கான பணிகள் தொடங்கி உள்ளன” என்றும் மோடி தெரிவித்தார்.
கோக்ராஜரில் உள்ள மத்திய தொழிற்பயிற்சி நிலையத்துக்கு நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து, சீல்டா-கவுகாத்தி கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் பாரக் பள்ளத்தாக்கு வரை நீட்டிப்பு போன்ற அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.
126 உறுப்பினர்கள் கொண்ட அசாம் சட்டசபைக்கு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.