ஆளும் கட்சியுடனான சந்திப்பை நாளை புதன்கிழமை நடத்துமாறு, வடக்கு மாகாண முதலமைச்சரிடம், அமைச்சர்கள் – ஆளும் கட்சி உறுப்பினர்கள் கூட்டாகக் கடிதமூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இருப்பினும், இந்தக் கோரிக்கைக் கடிதத்தில், வடக்கு மாகாண முதலமைச்சரைக் கடந்த சனிக்கிழமை தனித்து இரகசியமாகச் சந்தித்துக் கலந்துரையாடிய மூன்று உறுப்பினர்களும், தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் ஒரு உறுப்பினரும் கையெழுத்திடவில்லை.
அதிகாரப் பகிர்வு யோசனைகள் விடயத்தில் வடக்கு மாகாண சபையின் பங்குபற்றுதல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்படுதல், வினைத்திறனான மாகாணசபை ஆகிய மூன்று விடயங்கள் தொடர்பிலும் அவசரமாகப் பேச வேண்டியிருப்பதால், இந்தச் சந்திப்பை ஒழுங்கு செய்யுமாறு குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் – அமைச்சர்களுக்கு இடையிலான சந்திப்பு நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.
கடந்த 11ம் திகதி இடம்பெற்ற கூட்டத்தில், நேரம் போதாமை காரணமாக முதலமைச்சர் பதிலளிக்கவில்லை. 17ம் திகதிக் கூட்டத்தில் பதில் வழங்குவதாகத் தெரிவித்திருந்தார்.
இந்தக் கூட்டம் இடம்பெறுவதற்கு முதல் நாள் – கடந்த சனிக்கிழமை ஆளும் கட்சியின் மூன்று உறுப்பினர்கள் முதலமைச்சரைத் தனித்து இரகசியமாகச் சந்தித்துப் பேசியிருந்தனர்.
இதனையடுத்து நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவிருந்த கலந்துரையாடல் இரத்துச் செய்யப்பட்டிருந்தது.
இவ்வாறானதொரு நிலையில், யாழ்.பொது நூலகத்தில் நேற்றுக் காலை வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்கள், அதிகாரிகளுக்கு அதிகாரப் பகிர்வு தொடர்பிலான செயலமர்வு இடம்பெற்றது.
இந்தச் செயலமர்வின் முடிவில் ஆளும் கட்சியின் உறுப்பினர்களுக்கான சந்திப்பு ஒன்று திடீரென ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்தச் சந்திப்பில் கலந்துகொள்ளமாட்டோம் என்று தெரிவித்து இரண்டு உறுப்பினர்கள் வெளியேறியுள்ளனர்.
குறித்த உறுப்பினர்கள், முதலமைச்சரைக் கடந்த சனிக்கிழமை தனித்து சந்தித்துப் பேசியிருந்தவர்கள்.
மேலும், தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் மாகாண சபை உறுப்பினர் ஒருவரும் இந்தக் கலந்துரையாடலில் பங்கெடுக்கவில்லை. ஏனைய உறுப்பினர்கள், அமைச்சர்கள் இந்தக் கலந்துரையாடலில் பங்கெடுத்துள்ளனர்.
இதன்போது நாளை புதன்கிழமை ஆளும் கட்சியுடனான சந்திப்பை நடத்தக் கோரும் கடிதம் வரையப்பட்டு முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.