ஸ்ரீ. மு. காங்கிரசை போன்று நாம் தொடைநடுங்கிகளாக இருக்கவில்லை : ரிசாத் பதியுதீன்

IMG_9142_Fotor

தமது நாட்டில் சிங்கள முஸ்லிம் கலவரத்தை உருவாக்க மேற்கொள்ளும் சதி முயற்சிகளுக்கு இந்த அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்கக் கூடாதென்றும், இவ்வாறான பிரச்சினைகளை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டுமென்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் இன்று குருநாகலில் இடம்பெற்ற பேராளர் மாநாட்டில் தெரிவித்தார்.

IMG_9132_Fotor

அவர் தனதுரையில் கூறியதாவது,

முஸ்லிம் சமூகத்தின் அரசியல் அபிலாசைகளையும் அவர்களுடைய பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பதற்காக மர்ஹூம் அஷ்ரபினால் உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சமூகத்திற்கு மாற்றமாக செயற்பட்ட ஒரே ஒரு காரணத்துக்காகவே, அகில இலங்கை மக்கள் காங்கிரசை நாம் உருவாக்கினோம். மர்ஹூம் அஷ்ரபின் கண்ணீராலும் வியர்வையினாலும் உருவாக்கப்பட்ட அந்த அமைப்பு அவரின் மறைவின் பின்னர் பிழையான பாதையிலே பயணிக்கத் தொடங்கியுள்ளது. முஸ்லிம் சமூகத்தை ஜனநாயக ரீதியாக ஒன்றுபடுத்தி ஆயுதப் போராட்டத்துக்கோ, பிரிவினைவாதத்துக்கோ, அந்த சமூகத்தின் இளைஞர்கள் பிரவேசித்து விடக்கூடாது என்ற நோக்கத்துக்காக மர்ஹூம் அஷ்ரப் அப்போதைய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்தார்.

இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் என்றுமே ஆயுதப் போராட்டத்தில் நாட்டம் கொண்டவர்கள் அல்லர். சிங்கள் இளைஞர்கள் ஆயுதம் தூக்கிய போதும், தமிழ் இளைஞர்கள் இந்த நாட்டை பிளவுபடுத்துவதற்காக ஆயுதம் தூக்கிய போதும் அவர்கள் நடுநிலையாக நின்று சிந்தித்து செயற்பட்டவர்கள். 

எமது மூதாதையர்கள் போல நாமும் நாட்டுப்பற்றுடன் வாழ்ந்தவர்கள். டி.பி.ஜாயா தொடக்கம் அதன் பின் வழி வந்த அத்தனை முஸ்லிம் தலைவர்களும், அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தால் என்ன, சுதந்திரக் கட்சியில் இருந்தால் என்ன, நாட்டுப்பற்றுடன் வாழ்ந்து தமது சமூகத்தையும் வழிநடத்தியவர்கள். 

போர்த்துக்கீசர், ஒல்லாந்தர் இந்த நாட்டை ஆக்கிரமித்த போது, சிங்கள தலைவர்களுடன் சேர்ந்து எமது முஸ்லிம் தளபதிகள் இந்த நாட்டை பாதுகாக்கப் போராடியவர்கள்.அவ்வாறான ஒரு சமூகத்தை இன்று கேவலப்படுத்த சில பிற்போக்குவாதிகள் முனைந்து வருகின்றனர். இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளும், தலிபான்களும் ஊடுருவியுள்ளதாகவும், அதற்கு இலங்கை முஸ்லிம்கள் துணை போகின்றனர் என்றும் வீண் கட்டுக்கதைகளை பரப்பி இங்கு கலவரங்களை உருவாக்க திட்டமிடுகின்றனர். நாங்கள் தமிழ்த் தீவிரவாதத்துக்கோ, பௌத்த தீவிரவாதத்துக்கோ, இஸ்லாமிய தீவிரவாதத்துக்கோ ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. அதனை கடந்த காலங்களில் செயலில்  நிரூபித்துக் காட்டியுள்ளோம். இஸ்லாம் எமக்குக் காட்டிய வழியில் நாம் வாழ்க்கை நடத்துபவர்கள். நாம் யாருக்கும் பயந்தவர்களும் அல்லர். இறைவனைத்தவிர எவருக்கும் தலைவணங்குபவர்களும் அல்லர். அகில இலங்கை மக்கள் காங்கிரசை பொறுத்தவரையில், அதன் தலைமை எங்கு பிழை நடக்கின்றதோ அதனைத் தட்டிக் கேட்கும். கடந்த காலங்களில் ஆட்சியாளர்களையும், விடுதலைப் புலிகளையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திருப்திப்படுத்திய காரணத்தினாலேயே நமது சமூகம் இவ்வாறான கீழ் நிலைக்குச் சென்றது. 

ஆட்சியின் பங்காளியாக இரண்டு ஜனாதிபதிகளை உருவாக்கிய சக்தியைப் பெற்ற நமது முஸ்லிம் சமூகம், பின்னர் முஸ்லிம் காங்கிரசின் போக்கின் காரணாமாக மலினப்படத்தொடங்கியது. ரணில் – பிரபா ஒப்பந்தத்திலிருந்துமுஸ்லிம் சமூகத்தை ஒரு குழுவாகவும், வடபுலத்திலிருந்து அடித்து விரட்டப்பட்ட முஸ்லிம்களை இடம்பெயர்ந்தவர்கள் என அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டமைக்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைமை தலையசைத்தது. 

அகில இலங்கை  மக்கள் காங்கிரசை பொறுத்தத்தவரையில்இந்த நாட்டில் பயங்கரவாதம் தலைத்தூக்கிய போது அதனை ஒழிப்பதற்கு அப்போதைய அரசுடன் ஒத்துழைத்தது. அதன் மூலம் வடக்கிலே வாழ்ந்த முஸ்லிம் சமூகம் மீண்டும் அங்கு திரும்புவதற்கான சூழ்நிலை ஏற்பட்டது. மஹிந்த ராஜபக்ச ஆட்சியின் இறுதிக் காலப் பகுதியில் இந்த நாட்டில் கட்டவிழ்த்துவிடப்பட்ட அராஜஹங்களை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் சமூகத்தின் நன்மைக்காக உயிரையும் துச்சமெனக் கருதாது நாம் அந்த அரசாங்கத்திலிருந்து வெளியேறி மைத்ரிக்கு ஆதரவளித்தோம். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை போன்று நாம் தொடைநடுங்கிகளாக, மனசாட்சிப்படி வாக்களியுங்கள் எனக் கூறிவிட்டு, முஸ்லிம் மக்கள் ஓரணியில் திரண்டதை அறிந்து மைத்ரிக்கு வாக்களிப்பதாக நாம் அறிக்கை விடவில்லை. எமது கட்சியைப் பொறுத்தவரையில் தேசியப்பட்டியலில் நாம் தீர்க்கமான முடிவை மேற்கொண்டுள்ளோம்  செயலாளராக இருந்த     வை.எல்.எஸ்.ஹமீட் கட்சியுடன் முரண்பட்டு, கட்சி நடவடிக்கைகளை சீர்குலைத்ததனாலேயே நாம் இந்த பேராளர் மாநாட்டைக் கூட்டி புதிய யாப்புக்கு அங்கீகாரம் வழங்குமாறு கேட்கின்றோம் என்று அமைச்சர் றிசாத் தெரிவித்தார்.

IMG_9133_Fotor

அமைச்சர் றிசாத் பதியுதீன் தமதுரையின் பின்னர் கட்சியின் புதிய நிர்வாகிகளையும் அறிவித்தார். புதிய செயாலாராக சுபைர்டீன் ஹாஜியார் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், 7 பேர் கொண்ட மஜ்லிஸ் சூரா சபை 25  பேர் கொண்ட அரசியல் அதிகார சபையாக மாற்றப்பட்டுள்ளது.  

இந்தப் பேராளர் மாநாட்டில் பிரதி அமைச்சர் அமீர் அலி சிறப்புரையாற்றும் போது கூறியதாவது.

கடந்த காலங்களில் நமது சமூகத்துக்காக அமைக்கப்பட்ட கட்சிகள் முஸ்லிம் சமூகத்தின் குரலை வெளிபடுத்த தவரியதினாலேயே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. இந்தக் கட்சியை எவரும் எம்மிடம் வளர்த்துவிட்டு, அதனைக் கையில் தந்துவிட்டு செல்லவில்லை. ஒரு தனி மனிதன் தான் சார்ந்த சமூகத்துடன் இணைந்து தான்பட்ட வேதனைகளுக்கு விடிவேற்பட வேண்டுமென்ற ஆதங்கத்தினால், இரவு பகலாக சிந்தித்து இஹ்லாசின் அடிப்படையில் உருவாக்கிய கட்சியே மக்கள் காங்கிரஸ். துடிப்புள்ள இளைஞனான றிசாத் பதியுதீன் ஈமானியத்தின் அடிப்படையில் இந்தக் கட்சியை உருவாக்கியதனாலேயே,இன்று இந்த மாநாட்டு மண்டபம் நிரம்பி வழிகின்றது. 

ஒரு தனி மனிதனின் போராட்டத்துக்குக் கிடைத்த விளைவே, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உருவாக்கம். இந்தக் கட்சி உருவாகியதன் பின்னர், முஸ்லிம் சமூகத்துக்கு ஏற்பட்ட அத்தனைக் கஷ்டங்களையும் தீர்க்க துணிவுடன் போராடி இருக்கின்றது. தம்புள்ளை பள்ளி விவகாரத்திலிருந்து, தர்காநகர் பிரச்சினை வரை நடந்த அத்தனை அநியாயங்களையும் தட்டிக்கேட்க, கட்சித் தலைவர் றிசாத் பதியுதீன் மிகத் தீரமாக செயற்பட்டுள்ளார்.

ஆனந்த தேரருடன் நடாத்திய விவாதத்தில் அவர் மிகவும் நிதானமாகவும், துணிவுடனும் கருத்து வெளியிட்டு, சமூகத்துக்கு இழைக்கப்படும் அநியாயங்களிலிருந்து எமது சமூகத்தைக் காப்பாற்ற பாடுபட்டார். தேசியப் பட்டியலில் எழுந்த சர்ச்சையே, இன்று கட்சி செயலாளர் கட்சியுடன் முரண்படக் காரணம். ஒரு தனி மனிதனுக்காக கட்சியை பாழ்படுத்த முடியாது. கட்சியை செவ்வனே சிறப்பாக நடத்துவதற்கு கட்சியின் யாப்பிலே திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை காலமும் 07 பேர் கொண்ட மசூரா சபையாக இருந்த இந்தக் கட்சி, இப்போது 25 பேர் கொண்ட உயர்பீட சபையாக மாற்றம் பெற்றுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன்  தெரிவிக்கின்றேன்.

இந்தப் பேராளர் மாநாட்டில் கட்சியின் முக்கியஸ்தரும், பாராளுமன்ற முன்னாள் வேட்பாளருமான Dr.சாபி, எம்.பிக்களான அப்துல்லாஹ் மஹ்ரூப், எம்.எச்.எம்.நவவி ஆகியோர் உரையாற்றினர். 

இந்த மாநாட்டில் தவிசாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியினால் கட்சியின் யாப்புத் திருத்த வரைபு வாசிக்கப்பட்டது. 

கட்சியின் பதில் செயலாளர் சுபைர்டீன் ஹாஜியார், சிரேஷ்ட பிரதித் தலைவர்  சட்டத்தரணி.என்.எம்சஹீத், பிரதித் தலைவர் Dr.ஏ.எல்.சாஜஹான் மற்றும் எம்.பிக்களான மஹ்ரூப், நவவி, இஷாக் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களான றிப்கான் பதியுதீன், பாயிஸ், ஜனூபர் மற்றும் கைத்தொழில்,வர்த்தக அமைச்சின் கீழ் பணிபுரியும் நிறுவனங்களின் தலைவர்கள், பணிப்பாளர்கள், கட்சியின் பிரதிபிரச்சாரச் செயலாளர் முபாரக் அப்துல் மஜீத், கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளர் Dr.ஹில்மி, மௌலவி முபாரக் ரஷாதி ஆகியோர் உட்பட நாட்டின் பல பாகங்களிலும் இருந்து வந்த சுமார் 1200 பேராளர்கள் பங்கேற்றிருந்தனர்.