இந்தியா, பாகிஸ்தான் பேச்சுவார்த்தையை தொடர வேண்டும்: அமெரிக்கா வலியுறுத்தல்!

 

3c482a05-ec80-4c20-8f29-9816db059dc2_S_secvpf

இஸ்லாமாபாத்தில் நேற்று நடைபெறுவதாக இருந்த இந்திய–பாகிஸ்தான் பேச்சுவார்த்தை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 

பதான்கோட்டில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. 

இந்த தாக்குதலில் 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டாலும், பாகிஸ்தானில் இருந்து கொண்டு, மூளையாக செயல்பட்டு தாக்குதல்களை நடத்தியவர்கள், ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவன் மவுலானா மசூத் அசார், அவரது சகோதரர் அப்துல் ராவுப் அஸ்கார் மற்றும் அஷ்பாக், காசிம் ஆகிய 4 பேர்தான் என்பதை இந்திய புலனாய்வு அமைப்புகள் கண்டறிந்தன. இது குறித்த தகவல்களையும், ஆதாரங்களையும் பாகிஸ்தானிடம் இந்தியா வழங்கியது. 

இந்தியா வழங்கிய ஆதாரங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்தது. 

இருப்பினும், மசூத் அசார் மற்றும் அவரது கூட்டாளிகள் கைது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடவில்லை. இந்நிலையில், பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் இந்த தகவலை உறுதி செய்தார். மசூத் அசார் பாதுகாப்பு காவலில் தான் உள்ளார் என்றும் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார். 

இந்த நிலையில், இருநாட்டு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான மறு தேதி குறித்து ஆலோசிக்க ஒப்புதல் அளித்தன. மேலும் பாகிஸ்தான் விசாரணைக் குழு இந்தியா வரவும் திட்டமிடப்பட்டுள்ளது.   இந்நிலையில், இந்தியா, பாகிஸ்தான் பேச்சுவார்த்தையை தொடர வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. 

இது குறித்து அமெரிக்காவில் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், “இந்தியா- பாகிஸ்தான் இடையேயான அமைதியை சீர்குலைக்க பல்வேறு தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. இது எல்லோருக்கும் அதிர்ச்சி அளிக்க கூடிய விஷயம் தான். இருப்பினும் இந்த தாக்குதல்கள் தான் இருநாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு ஊக்கமளிக்கிறது” என்றார். 

மேலும், பதான்கோட் தாக்குதல் சம்பவத்தில் இருநாடுகள் தரப்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டதும், கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டதும் சுமூகமான அணுகுமுறை என்று அமெரிக்கா பாராட்டியுள்ளது.