ஜப்பானில் உள்ள ரோஷிமாவில் இரண்டாம் உலக போரின்போது 1945-ம் ஆண்டு, ஆகஸ்டு 6-ந் தேதி அமெரிக்கா போட்ட ‘லிட்டில் பாய்’ (சின்னப்பையன்) என்னும் அணுகுண்டை உலகம் எளிதில் மறந்து விடாது. இந்த அணுகுண்டால், அந்த நகரமே உருக்குலைந்து போனது. பல்லாயிரக்கணக்கானோர் பலியாகினர்.
இந்த அணுகுண்டை விட வடகொரியா நேற்று வெடித்து சோதித்ததாக கூறப்படுகிற ஹைட்ரஜன் குண்டு ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்தது என அணு வல்லுனர்கள் கூறுகின்றனர்.
மேலும், இது தொடர்பாக டோக்கியோவில் உள்ள மீஜி காக்குயின் பல்கலைக்கழகத்தின் சர்வதேச அரசியல் மற்றும் அமைதி ஆராய்ச்சித்துறை பேராசிரியர் டாக்காவ் டாக்காஹாரா கூறுகையில், “சூரியனில் என்ன நடக்கிறது? சிந்தித்து பாருங்கள். கோட்பாட்டில், அதன் செயல்பாடுகள் எல்லைகள் அற்றது. அதன் ஆற்றல், மிகப்பெரிய அளவிலானது. அந்த வகையில், ஹைட்ரஜன் குண்டின் தொழில்நுட்பம் மிகவும் அதிநவீனமானது. இது மிகவும் அச்சுறுத்தலானது. இதை கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணையில் பொருத்தக்கூடிய அளவுக்கு சிறிய வடிவில் தயாரிக்க முடியும்” என குறிப்பிட்டார்.
அணுகுண்டுகளை பொறுத்தமட்டில் அவை அணுப்பிளவின் அடிப்படையில் செயல்படுவதாகும். ஆனால் ஹைட்ரஜன் குண்டு, அணு கருக்கள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து மிகப்பெரும் ஆற்றலை வெளிப்படுத்துவதாகும்.