விமலின் ஐரோப்பா விஜயம் தொடர்பில் முகநூல் ஊடாக நேரடி கேள்வி – பதில் !

ஒருமாத காலமாக ஐரோப்பாவில் தங்கியிருந்து பல்வேறு கருத்தரங்குகளை நடத்திய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ஸ, தனது விஜயம் தொடர்பில் விளக்கம் அளிக்கவுள்ளார்.

எதிர்வரும் ஜனவரி 5ஆம் திகதி முகநூல் ஊடாக நேரடி கேள்வி – பதில் நிகழ்வில் கலந்துகொண்டு விளக்கமளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசின் செயற்பாடுகள் கொள்கைகளைக் கண்டித்து ஐரோப்பாவில் ஒருமாத காலம் தங்கி அரசுக்கு எதிரான பிரசாரங்களை மேற்கொண்ட முன்னாள் அமைச்சர் விமல், நேற்றுமுன்தினம் இலங்கை வந்தடைந்தார். 

‘வெள்ளையர்களின் நீதிமன்றமும் நாட்டின் குற்றங்களும்’ என்ற தலைப்பில் இத்தாலியின் மிலானோ, ரோம், நாபொலி நகரங்கள், ஜேர்மனியின் பேர்லின் நகரம், இங்கிலாந்தின் லண்டன் நகரம், உள்ளிட்ட 7 நாடுகளில் 14இற்கு மேற்பட்ட உரைகளை நடத்தியிருந்தார். இதன்போது, நல்லாட்சி அரசு இராணுவத்தினரைக் காட்டிக்கொடுக்கும் முயற்சிகளில் ஈடுபடுவதாகவும், அரசின் இச்செயற்பாட்டைக் கண்டித்து ஐரோப்பா நாடுகளில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் அங்கு வலியுறுத்தியதாகக் கூறுப்படுகின்றது. 

விமலின் ஐரோப்பா விஜயம் தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ முகநூல் ஊடாக ஜனவரி 5ஆம் திகதி மாலை மூன்று மணிமுதல் நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளதாக விமல் வீரவன்ஸ அறிவித்துள்ளார். இதன்போது, ஒருமாத காலமாக உலகம் சுற்றியது எதற்காக?, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் நாடு தொடர்பில் என்ன கூறுகின்றனர்?, புதிய அரசின் கன்னி வரவுசெலவுத் திட்டத்துக்கு என்ன ஆனது?, சீபா ஒப்பந்தம் பெயர்மாற்றம் செய்யப்பட்டு வரவுள்ளது உண்மையா?, அரசு நடிக்கும் இனவாதக் கொள்கை நாட்டில் உண்மையிலேயே இருகின்றதா? போன்ற கேள்விகளுக்கு விசேடமாக பதிலளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதேவேளை, நேற்றுமுன்தினம் நாடு திரும்பிய விமல் வீரவன்ஸ ஊடஙகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போது, 

ஐரோப்பாவில் வசிக்கும் இலங்கைப் பிரஜைகள் நாடு எதிர்கொண்டிருக்கும் ஆபத்தான நிலைமையிலிருந்து நாட்டைக் காப்பாற்றத் தயாராக இருப்பதாகவும், கலப்பு நீதிமன்றம் ஒன்றை உருவாக்கி யுத்த வெற்றியைப் பெற்றுக்கொடுத்த இராணுவத்தினரை குற்றவாளிக்கூண்டில் நிறுத்த முனைவது மட்டுமன்றி, நாட்டையும் இரண்டாகப் பிளவுப்படுத்த இந்த அரசு முயல்வதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.