இன்று நாம் நாட்டில் எதிர்நோக்கும் அடிப்படை அரசியல் பிரச்சினைகளுக்கும் நமக்கு நாமே உருவாக்கிக் கொள்ளும் பிளவுகளுக்கும் பின்னணியில் மாற்றானை விரல் நீட்டில் மாத்திரம் போதுமா? என ஒவ்வொரு முஸ்லிமும் தமது மனச்சாட்சியிடம் கேள்வி கேட்க வேண்டும் என நியாயம் கேட்கிறார் அக்கரைப்பற்று சமூக ஆர்வலர் சபீஸ்.
அண்மையில், சமூகம் தமது வேதனையை வார்த்தைகளால் மாத்திரம் வர்ணித்துக்கொண்டிருந்த நிலையில் தனது சுய வேதனையையும் அதே வரையறையோடு நிறுத்திக் கொள்ளாது நேரடியாகவே மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்குச் சென்று பொது பல சேனா எனும் ஒரு பயங்கரவாத அமைப்பின் அழுத்தத்துக்கு அடி பணிந்த மனித உரிமைகள் ஆணைக்குழு அளுத்கம முஸ்லிம்களுக்கிழைக்கப்பட்ட அநியாயத்துக்கு எந்த விசாரணையையும் ஏன் இது வரை நடாத்தவில்லையென கேள்வி கேட்டிருந்தார்.
சமூக விவகாரங்களில் அரசியலில் நிலவும் மெத்தனப் போக்கு நிலவுவதாகக் குறைபட்டுக்கொள்ளும் சபீஸ், விளம்பரமில்லாத வகையில் பல்வேறு சமூக நலத்திட்டங்களில் தன்னை ஈடுபடுத்தி வந்துள்ளார். இந்நிலையில் எனக்குத் தெரிந்த ஒரு மாணவனின் கல்வியைத் தொடர தனிப்பட்ட ரீதியில் அவர் நிதியுதவி செய்துள்ளமை குறித்து தெரிய வந்த போது அவரை சந்தித்து உரையாட வேண்டும் என்று அக்கரைப்பற்று சென்று அவரை சந்தித்தேன்.
அடிப்படையில் சமூக சேவை செய்யும் நோக்கம் தனது இரத்தத்தில் ஊறிய விடயம் என்று சொன்ன அவர் வாழ்க்கையின் அடி மட்டத்திலிருந்து இன்று தான் சமூகத்தில் அடையாளமுள்ள ஒரு மனிதனாக உயர்ந்து நிற்பதற்கு ஒரே காரணம் அல்லாஹ் தனக்கு கல்வி மூலம் காட்டிய முறையான வாழ்க்கை வழிமுறையே என்றார்.
அந்தக் கல்வியைப் பெற்றுக்கொள்வதற்காகவும் குடும்பத்தில் ஒவ்வொருவரும் கல்வி பயில வேண்டும் என்பதற்காகவும் தான் தனிப்பட்ட ரீதியில் பட்ட துன்பங்களையும் கடந்து வந்த பாதைகளையும் நினைக்கும் போது ஏழை மாணவன் ஒருவன் கஷ்டப்படுகிறான் என்றால் அதற்கு எம்மால் எதையாவது செய்ய முடியும் என்றால் அதை வைத்துக் கொண்டு காரணம் தேடிக் கொண்டிராமல் தேடிச் சென்று உதவ வேண்டும் என்று அவர் ஆக்ரோசமாக என்னிடம் சொன்ன போது மனது கனத்தது.
இன்று நம்மைச் சுற்றியுள்ள பிரச்சினைகளுக்கெல்லாம் நாம் யாராவது ஒருவரை குறை சொல்கிறோம், குற்றம் சாட்டுகிறோம். ஒன்றில் அரசியல்வாதி அல்லது ஊரில் உள்ள, நாட்டில் உள்ள யாராவது காரணம் என்கிறோம். ஆனால், நமது மற்றும் நமது சமூக முன்னேற்றத்திற்காக தனி நபராக நாம் என்ன செய்திருக்கிறோம் என்று ஒவ்வொருவரும் தமது மனசாட்சியைத் தொட்டுக் கேட்க வேண்டும்.
அதற்காக உங்கள் சொந்தக் குடும்ப சூழ்நிலைகளைப் புறக்கணித்து வீண் விரயம் செய்யத் தேவையில்லை. ஆனால் முடிந்தளவு நாம் என்ன செய்கிறோம் என்று சிந்திக்க வேண்டும். அதிலே முக்கியமான விடயம் தான் கல்வி.
நமது சமூகம் போலியான முறையில் கல்வித் தகைமைகளைக் கொண்டு திருப்தியடைந்து கொள்கிறது. கல்வியிலிருந்து அந்நியப்பட்டுக்கொள்வதற்கு வறுமையைக் காரணம் சொல்வதில் நாம் கெட்டிக்காரர்கள். ஆனால் இலங்கையில் பல்கலைக்கழகம் வரை இலவசமாக கல்வி கற்கலாம். நமது சமூகத்தில் இல்லாத தனவந்தர்களா? இப்படி எத்தனையோ விடயம் கேட்கலாம். ஆனால், அதை அவரவர் தமது மனச்சாட்சியிடம் கேட்டால் நாம் தான் முன்னேறவில்லையென்றாலும் இன்னொருவரை முன்னேற்றி விடலாம்.
என்னைப் பொறுத்தவரையில் எமது சமூகத்தில் நிலவும் மிகப் பெரும் குறைபாடு கல்வி வளர்ச்சி. இதில் வெளியார் அக்கறை செலுத்துவரை விட அவரவருக்கு ஆர்வம் வருவது முக்கியமானது. அதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.
அவ்வப் போது என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன். ஆனால் இதை விடப் பெரிய வகையில் எமது நடவடிக்கைகள் விரிவடைய வேண்டுமென்றால் அதற்கு சமூகம் ஒத்துழைக்க வேண்டும். ஒரு கல்விச் சமூகத்தை நிபந்தனையின்றி உருவாக்குவதற்கு அக்கரைப்பற்றில் மாத்திரமில்லாமல் கிண்ணியா, மன்னார், யாழ்ப்பாணம், கண்டி, பதுள்ள என்று அனைத்து இடங்களிலும் நாம் முயற்சி எடுக்க வேண்டும்.
படித்தவர்கள் இல்லாத வெற்றிடத்தை சந்தர்ப்பவாதிகள் நிரப்புகிறார்கள். பின்னர் அவர்கள் செய்யும் காரியங்களால் சமூகம் பாதிக்கப்படுகிறது, மக்கள் திரும்பவும் குறை சொல்லிக் கொண்டு மாத்திரம் இருக்கிறார்கள். அப்படியில்லாமல் ஒரு உண்மையான சமூக மாற்றம் வர வேண்டும் என்று நாமாகவே நினைத்து உழைக்க வேண்டும் என்று தனது ஆதங்கத்தை அவர் வெளியிட்ட விதத்தைப் பார்த்த போது, அவரது பேச்சில் தெரிந்த நேர்மையான ஆதங்கத்தைக் கண்டு எனது மனதும் கனத்தது.
எமது சமூகத்துக்கு தொடர்ந்து நல்லது செய்யும் ஆற்றலையும் வல்லமையையும் இறைவன் அவருக்கு வழங்க வேண்டும்.
மொஹமட் ருசைக் சரீப்தின்