சமூகவலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்ட விடயங்கள் !

இன்னும் சில தினங்களில் 2016ம் ஆண்டை வரவேற்க காத்திருக்கும் நிலையில், 2015ல் சமூகவலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்ட விடயங்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

உலகை உறைய வைத்த அய்லான்

அய்லான் என்ற சிறுவன் அகதிகள் சென்ற கப்பலில் இருந்து தவறி விழுந்து பலியானான்.

அது தொடர்பான புகைப்படம் உலகின் மனசாட்சியையே உலுக்கியது. இந்த புகைப்படம் உலகம் முழுவதும் பலரால் பகிரப்பட்டதை அடுத்து பலரும் ரத்தக் கண்ணீர் வடித்தனர்.

அசத்தல் மார்க் ஜீக்கெர்பெர்க்

இந்தியாவின் தலைநகர் டெல்லிக்கு கடந்த அக்டோபர் மாதம் வருகை தந்த பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜீக்கெர்பெர்க் ஐஐடி மாணவர்களுடன் கலந்துரையாடினார், தனது வருகையை பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட மார்க் தாஜ்மஹாலில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பதற வைத்த பாரீஸ் தாக்குதல்

கடந்தாண்டு ஐஎஸ் அமைப்பின் அட்டூழியங்கள் அதிகரித்த நிலையில், ஐரோப்பிய நாடுகளை குறிவைத்து தாக்கின.

குறிப்பாக பிரான்ஸ் மீதான திடீர் தாக்குதல் உலகையே உலுக்கியது, இதனையடுத்து ஐஎஸ் அமைப்பின் மீது பிரான்ஸ் தாக்குதலை தீவிரப்படுத்தியது.

செவ்வாயில் பிரமிடு

செவ்வாய் கிரகத்தில் ஏற்கனவே பெண்மணி ஒருவர் நிற்பது போல் சிலை உள்ளதாகவும், மிகப்பெரிய எலி போன்ற உருவம் தெரிந்ததாகவும் பல புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் கடந்த வருடம் பிரமிடு உள்ளது போன்று ஒரு புகைப்படம் வெளியாகியது.

ஏமாற்றிய வோல்க்ஸ்வேகன்

வோல்க்ஸ்வேகன் கார் நிறுவனம் சாஃப்ட்வேர் ஒன்றை பயன்படுத்தி எமிஷன் அளவுகளை ஏமாற்றி வந்ததை அமெரிக்காவில் வாழ்ந்து வரும் அரவிந்த் திருவேங்கடம் என்ற தமிழர் தான் முதன் முதலில் உலகறியச் செய்தார்.

இதையடுத்து அமெரிக்கா மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளிலும் இந்த ஏமாற்று வேலை நடந்தது அம்பலமானது.

ஒரு நிமிட மிஸ் யுனிவர்ஸ் 2015

2015ம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் முதலில் கொலம்பியா நாட்டைச் சேர்ந்த போட்டியாளர் தான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு மிஸ் யுனிவர்ஸ் கிரீடம் சூட்டப்பட்டது.

ஆனால் சில நிமிடங்களில் தான் அறிவிப்பாளர் செய்த தவறு தெரியவந்தது.

உண்மையில் மிஸ் யுனிவர்ஸாக பிலிப்பைன்ஸ் நாட்டு பெண் தான் வெற்றி பெற்றுள்ளார்.

இதையடுத்து தன் தவறுக்காக அறிவிப்பாளர் வருத்தம் தெரிவித்தார். பின்னர் கொலம்பியா நாட்டு பெண்ணுக்கு சூட்டப்பட்ட கிரீடம் கழற்றப்பட்டு பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்ணுக்கு சூட்டப்பட்டது.

நிர்பயா என்கிற ஜோதிசிங்

இந்தியாவையே உலுக்கிய 2012ம் ஆண்டு பேருந்தில் நடந்த கூட்டு பலாத்கார வழக்கில் பலியான ‘நிர்பயா’வின் நிஜப்பெயர் ஜோதிசிங் தான் என அப்பெண்ணின் பெற்றோர் ஊடங்களுக்கு தெரிவித்தனர்.

அந்த வழக்கில் தொடர்புடைய இளம் குற்றவாளி இந்த ஆண்டு விடுதலை அடைந்தது குறிப்பிடத்தக்கது.

மாப்பிள்ளைகளான யுவராஜ், ஹர்பஜன், ரோஹித்

கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தன் தோழியான மொடல் மற்றும் திரைப்பட நடிகை ஹேசல் கீச் என்பவரை திருமண நிச்சயம் செய்து கொண்டார். இதனை புகைப்படம் மூலம் இருவரும் அனைவருக்கும் தெரிவித்தனர்.

ஹர்பஜன் சிங் தனது நீண்ட நாள் காதலியான நடிகை கீதா பஸ்ராவை காதல் திருமணம் செய்து கொண்டார்.

வெகு விமரிசையாக நடந்த அவர்கள் திருமணத்தில் கிரிக்கெட் வீர்ர்கள் உள்பட பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

ரோஹித் சர்மா தனது காதலி ரித்திக்காவை இந்த மாதம் 13ம் திகதி திருமணம் செய்தார்.

நோ ஷேவ் நவம்பர் 

கடந்த நவம்பர் மாதம் “No shave november” என்ற விடயம் உலகம் முழுவதும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக இருந்தது. ஆண்கள் அந்த மாதம் முழுவதும் ஷேவ் செய்யாமல் தாடியுடன் திரிந்தனர். 

”No shave november” என்பதன் நோக்கம்: புற்று நோயால் பாதிக்கப்படுவர்கள் சிகிச்சையின் போது முடியை இழப்பதை பற்றிய வழிப்புணர்வை ஏற்படுத்தவும், அந்த மாதம் முழுவதும் ஷேவ் செய்யாமல் இருப்பதால் சேமிக்கப்படும் பணத்தினை புற்று நோயால் பாதித்தவர்களுக்கு வழங்குவதே நோக்கமாகும்.

கலாம் மறைவு 

மக்களின் குடியரசுத்தலைவர் என அழைக்கப்பட்ட அப்துல் கலாம் இறந்த பின் அவரது உடல் இராமேஸ்வரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அப்போது அவரது உடல் எடுத்து செல்லப்பட்ட வாகனத்தின் பின்னால், பல திசைகளில் இருந்தும் வந்த எண்ணற்ற இளைஞர்கள் பேரணியாக சென்றது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

சாதனை படைத்த மார்டினா- சானியா

மார்டினா- சானியா ஜோடி இந்த 2015ம் ஆண்டில் மொத்தம் 9 டைட்டில்களை பெற்று சாதனை படைத்துள்ளனர்.

விம்பிள்டன் இரட்டையர் முதல் சீன ஓப்பன் என அந்த இணைக்கு இந்த ஆண்டு சிறப்பாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

ஓய்வு பெற்ற குமார் சங்கக்காரா

இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்டக்காரரும் விக்கெட் கீப்பருமாக செயல்பட்டு வந்த முன்னாள் இலங்கை அணி கேப்டன் குமார் சங்கக்காரா டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார்.

இளவரசி சார்லோட் எலிசபத் டயானா

மே மாதம் 2ம் திகதி இங்கிலாந்து அரச குடும்பத்தில் குட்டி இளவரசி பிறந்தார்.

குட்டி இளவரசிக்கு சார்லோட் எலிசபத் டயானா என அரச குடும்பத்தினர் பெயர் சூட்டியுள்ளனர்.

கேளிக்குள்ளான டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ஆட்சிக்காலம் முடியவுள்ள நிலையில், வரும் 2016 ஆண்டுக்கான அதிபர் தேர்தலில் போட்டியிட டொனால்ட் ட்ரம்ப் முடிவெடுத்துள்ளார்.

டொனால்ட் டிரம்பையும் அவரது முடியையும் அமெரிக்கர்கள் கிண்டல் செய்து இணையத்தில் அதிகளவில் மீம்களை பரப்பி வந்தனர்.

KFC-ல் எலிக்கறியா?

உலகப்புகழ்பெற்ற உணவு நிறுவனமான KFC, எலி கறியை தனக்கு அளித்து விட்டதாக ஒருவர் புகார் அளித்ததை அடுத்து உலகம் முழுவதும் இந்த செய்தி பரவியது.

ஆனால் அது பொய் என கூறிய KFC, பின்னர் அந்த நபர் வாங்கியதாக கூறிய கறியை சோதனை செய்து அது சிக்கன் தான் என அறிக்கை வெளியிட்டது.

சாதனை படைத்த ஐபோன் 6S, ஐபோன் 6S Plus

கடந்த செப்டம்பர் மாதம் வெளியான ஐபோன் 6S, ஐபோன் 6S Plus மொடல் போன்கள் வெளியிடப்பட்ட மூன்றே நாட்களில் சுமார் 13 மில்லியன் என்ற எண்ணிக்கையையும் தாண்டி விற்பனையானதாக அப்பிள் தெரிவித்தது.

த டிரெஸ்

பெப்ரவரி 2015ம் ஆண்டு வெளியிடப்பட்ட த டிரெஸ் எனப்படும் ஒரு குறிப்பிட்ட ஆடை சிலரது கண்களுக்கு கருப்பும் நீலமுமாகவும், சிலரது கண்களுக்கு வெண்மையும் பொன்னிறமாகவும் தென்பட்டது. 

இந்த விடயம் இணையத்தில் ட்ரெண்டிங்காக இருந்தது.