ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி இஸ்ரேலுக்கு தாக்குதல் மிரட்டல் விடுத்துள்ளார்.
ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் தலைவர் அபுபக்கர் அல்–பக்தாதி. கடந்த 7 மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா நடத்திய குண்டுவீச்சில் சிக்கி படுகாயம் அடைந்தார். அதை தொடர்ந்து தலைமறைவாக இருந்து சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் அவரது பேச்சு அடங்கிய ‘ஆடியோ’ கேசட் ஒன்று சமீபத்தில் இணையதளத்தில் வெளியானது. அதில், ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக குண்டுவீச்சு நடத்தும் சவுதிஅரேபியாவை அவர் கடுமையாக சாடியுள்ளார். அதற்கு கண்டனம் தெரிவித்து அந்நாட்டு அரச குடும்பத்துக்கு எதிராக பொது மக்கள் புரட்சி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அதே நேரத்தில் அவர் இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். பாலஸ்தீனத்தை ஐ.எஸ். இயக்கம் ஒரு போதும் மறக்காது. கடவுள் அனுமதியுடன் மிக விரைவில் உங்கள் மீது (இஸ்ரேல் மீது) தாக்குதல் நடத்துவோம். அதற்காக உங்களை நாளுக்கு நாள் நெருங்கி கொண்டே இருக்கிறோம்’’ என்று பேசியுள்ளார்.
இந்த ஆடியோ கேசட் 24 நிமிடங்கள் ஓடுகிறது. அதில் அவரது பேச்சு தெளிவாக இல்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.