நலம் தரும் சிவப்பரிசி..!

images

சிவப்பரிசி ஓர் அற்புதமான அரிய உணவு. இதன் மருத்துவ குணங்களைப் பற்றி கி.மு.400-லேயே நிறைய சொல்லப்பட்டு இருக்கிறது. சீனாவில் 3 ஆயிரம் ஆண்டுகளாக செந்நெல் பயிரிடப்படுகிறது. ஜப்பான், கொரியா, பிலிப்பைன்ஸ், இலங்கை, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் சிவப்பு நெல் பயிராகிறது. கொரியாவில் உள்ள சில புத்தர் சிலைகளின் உள்ளே சிவப்பு நெல் விதைகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. 

சிவப்பு நெல், விவசாய முறையில் மட்டுமின்றி தானாகவே காடுகளிலும் மலைகளிலும் மானாவாரியாக விளைந்தது. ஆகவே, இதை, ‘காட்டு அரிசி‘ என்றும் சொல்வார்கள். அதனால் தான் சமுதாயத்தின் கீழ்த்தட்டு மக்களே பெரும்பாலும் இதை உணவாகப் பயன்படுத்தினர். 

நாம் சத்துப்பகுதியை மாடுகளுக்குத் தீவனமாகக் கொடுத்துவிட்டு, சக்கையை மட்டுமே சாப்பிடுகிறோம். சிவப்பு நெல் மட்டும் இந்த அமைப்பில் சிறப்பு மிக்கது. இதன் சத்துக்கள் அனைத்தும் மாவுப்பகுதி வரை உட்சென்று சேமிக்கப்படுவதால், இது தீட்டப்பட்ட பின்பும் அதன் சக்தியை நாம் பெற முடியும். மேலும் வேறு எந்த அரிசியிலும் இல்லாத அளவுக்கு பி1, பி3, பி6 ஆகிய வைட்டமின்களும், இரும்புச் சத்து, ஜிங்க், மாங்கனீஸ், மெக்னீஷியம், செலினியம், பாஸ்பரஸ் போன்ற கனிமங்களும், மிகுதியான நார்ச்சத்தும் சிவப்பரிசியில் அடங்கியிருக்கின்றன. 

இந்த அரிசியில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட் குணங்களால், இதய வியாதிகளுக்கு அற்புதமான மருந்தாகிறது. மேலும் ஆன்த்தோசயனின், பாலிஃபீனால் போன்ற வேதிப்பொருட்களும் இதில் சங்கமித்திருக்கின்றன. இவற்றைவிட, சிவப்பு அரிசியில் ‘மானோகோலின் கே’ என்கிற அற்புத வேதிப்பொருள் உள்ளது. இதைத்தான் மருத்துவத்துறையில் இப்போதும் ‘லோவாஸ்டேடின்’ என்ற பெயரில் ரத்தத்தில் கொழுப்பைக் குறைக்க உலகெங்கும் கொடுத்து வருகிறோம். 

செந்நெல்லின் மீது வளரும் ஒரு வகை பூஞ்சணம்தான், இந்த லோவாஸ்டேடினை உற்பத்தி செய்கிறது. அதனால் சீனாவில், செந்நெல் மீது இந்த பூஞ்சணத்தை இவர்களாகவே வளர்க்கிறார்கள். ‘சிவப்பு பூஞ்சண அரிசி’ என்று இதற்குப் பெயர். இதைத் தவிர, சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, ஈரல் வியாதிகள், பித்தப்பை கற்கள், ஆஸ்துமா மற்றும் பலவித அலர்ஜிகளுக்கு சிவப்பு அரிசி மிகவும் உகந்தது.