நாடாளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவு பலமடங்கு அதிகரிப்பு , மக்கள் மீதான சுமைகளை அதிகரிக்கும் செயலாகும் !

Parliament-Sri-Lanka-interior
இதுவரை காலமும் பாராளுமன்ற அமர்வுகளின் போது வருகை தரும் பாராளுமன்ற உறுப்பினரின் ஒருநாள் வருகைக்கான கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் 500 ரூபா வழங்கப்பட்டு வந்தது. இத்தொகையை 20 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த பாராளுமன்றத்தில் நடைபெற்ற மத்திய செயற்குழுக் கூட்டத்தின் போது அரசாங்க தரப்பில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஒரு நாள் வருகைக்காக தற்பொழுது ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்படுவது 500 ரூபா மாத்திரமே. இது 19500.00 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.

ஒரு மாதத்துக்கு 8 நாட்கள் பாராளுமன்றம் கூடுகின்றது. இதற்கேற்ப, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபா கிடைக்கப் பெறுகின்றது. ஏற்கனவே, வழங்கப்பட்ட கொடுப்பனவின் படி மாதத்துக்கு 4 ஆயிரம் ரூபா மாத்திரமே கிடைக்கப்பெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வழமையாக கொடுக்கப்படும் மாதாந்த சம்பளம், தொலைபேசிக் கட்டணம், எரிபொருள் கட்டணம், அலுவலக ஊழியர்களுக்கான கொடுப்பனவு என்பன தவிர்த்தே இந்த வருகைக்கான கொடுப்பனவு வழங்கப்படவுள்ளன. 

இதேவேளை, பாராளுமன்ற உணவகத்தில் 80 வகையான உணவுகள் தினமும் சமைக்கப்படுவதாகவும் சுமார் 500,000 ரூபாய்கள் தினமும் செலவிடப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 400 ரூபாய்கள் பெறுமதியான ஒருவேளை உணவுக்கு, உறுப்பினர்களிடமிருந்து வெறும் 12.50 ரூபாய்களே அறவிடப்படுகிறது. 

அமர்வுகள் இடம்பெறும் தினத்தில் சுமார் 200,000 பெறுமதியான உணவு விரயமாகிறதாம். வருடாந்தம் சுமார் 10 கோடி ரூபாய்கள் உணவகத்திற்கு நஷ்டம் ஏற்படுகின்றதாம்.

கொழும்பில் இலவச விடுதி, தீர்வையற்ற வாகனம் (சுமார் ஒன்றரைக் கோடி பெறுமதியான), எரிபொருள் கொடுப்பனவு, தொலைபேசி, அலைபேசி கொடுப்பனவுகள் எல்லாம் கொடுத்து இவர்களுக்கு அமர்வுகளுக்கான கொடுப்பனவையும் அதிகரிப்பது மக்கள் மீதான சுமைகளை அதிகரிக்கும் செயலாகும்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்குரிய சலுகைகளில் சரி பாதி மாகாண சபை உறுப்பினர்களுக்கும் வழங்கப்படல் வேண்டும் என அரசியலமைப்பில் இருப்பதனால் ஏற்கனவே வெள்ளை யானைகளாக கருதப்படும் மாகாண சபைகளிற்கான அமையச் செலவுகள் மேலும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஒரு உறுப்பினருக்குக் கிடைக்கப் பெறும் வரப்பிரசாதங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி,

சாதாரண பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அடிப்படைச் சம்பளம் – ரூ. 54525.00

போக்குவரத்துக் கொடுப்பனவு – ரூ. 10000.00

உணவு, குடிபானக் கொடுப்பனவு – ரூ. 1000.00

தொலைபேசிக் கட்டணம் – ரூ. 2000.00

பாராளுமன்றக் கூட்டமொன்றில் கலந்து கொள்வதற்கான கொடுப்பனவு -ரூ. 500.00

பாராளுமன்ற உறுப்பினர் ஒரு அமைச்சர் எனின்,

அவரின் அடிப்படைச் சம்பளம் – ரூ. 65000.00

பிரதி அமைச்சருக்கு அடிப்படைச் சம்பளம் – ரூ. 63500.00

மாதாந்தம் கொடுக்கப்படும் எரிபொருள் கொடுப்பனவு மாவட்டத்துக்கு மாவட்டம் வித்தியாசப்படும்.

இதன்படி,

கொழும்பு மாவட்டம் – ரூ. 18845.00

கம்பஹா மாவட்டம் – ரூ. 23000.00

கேகாலை, இரத்தினபுரி, காலி, கண்டி மற்றும் குருநாகல் – ரூ.28000.00

மாத்தளை, புத்தளம், மாத்தறை, நுவரெலியா – 32000.00

பொலன்னறுவை, பதுளை, ஹம்பாந்தோட்டை, வவுனியா, மொனராகலை, அம்பாறை, திருகோணமலை, கிளிநொச்சி – ரூ. 37745.00

இது தவிர, சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நிலையான தொலைபேசி அழைப்புக்கள் இரண்டு வழங்கப்படும். இதற்கான மாதாந்த கொடுப்பனவை பாராளுமன்றம் செலுத்தும்.

அத்துடன், உறுப்பினராக இருக்கும் காலத்தில் மாதிவெல கட்டிடத் தொகுதியில் ஒரு வீடு வழங்கப்படும். அல்லது வீட்டிற்கான வாடகை வழங்கப்படும்.

மேலும், பாராளுமன்றத்தில் ஐந்து வருடம் முழுமையாக உறுப்பினராக இருக்கும் சகலருக்கும் ஓய்வுதியம் வழங்கப்படும்.