பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவை உடன் கைது செய்ய வேண்டும் : தாய் நாட்டுக்கான இராணுவ அமைப்பு !

பீல்ட் மார்சல் சரத் பென்சேகாவை உடன் கைது செய்ய வேண்டும் என்று “தாய் நாட்டுக்கான இராணுவ அமைப்பு” கோரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அந்த சங்கத்தின் தலைவர் மேஜர் அஜித் பிரசன்ன இந்தக்கோரிக்கையை விடுத்தார். 

Sarath-Fonseka3

ஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பேரேரா வெளியிட்ட கருத்தை அடிப்படையாக கொண்டே அவர இந்தக்கோரிக்கையை விடுத்தார்.

சரத்பொன்சேகா இராணுவத் தலைவராக இருந்த போது அவருடைய விசேட குழு ஒன்றே, கீப்னொயா என்பவரை தாக்கியது என ஜோசப் மைக்கல் பேரேரா நாடாளுமன்றில் வெளிப்படுத்தியுள்ளார். 

எனவே இதனடிப்படையில் சரத் பொன்சேகா கைதுசெய்யப்படவேண்டும் என்று அஜித் பிரசன்ன கோரிக்கை விடுத்தார்.

பிரகீத் எக்னலிகொடவின் மனைவி தெரிவித்த கருத்து தொடர்பிலும் அஜித் பிரசன்ன கருத்து தெரிவித்தார். 

இறுதி யுத்தக்காலத்தில் விடுதலைப்புலிகளுடான மோதலில் தமிழ் மக்களை தொகுதிகளாக கொலை செய்வதற்கு இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக பிரகீத் எக்னெலிகொட ஊடகங்களில் தெரிவித்திருந்தார். 

இது சம்பந்தமாக அவரை பழிவாங்கும் நோக்கிலேயே அவர் கடத்தப்பட்டார் என சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளார். 

எனினும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் ஹுசேனின் அறிக்கையில் எந்தவொரு இடத்திலும் இலங்கை இராணுவத்தினர் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி மக்களை கொன்றதாக தெரிவிக்கப்படவில்லை. 

அப்படியானால் இரசாயன ஆயுதம் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட செய்தி பொய்யானது என்று பிரசன்ன குறிப்பிட்டார். 

இந்தநிலையில் சந்தியாவை ஏன் இந்த பொலிஸார் விசாரணை செய்யவில்லை என்றும் பிரசன்ன கேள்வி எழுப்பினார்.