இந்தியாவுக்கு எதிராக பேசாதே : பாகிஸ்தான் மந்திரிகளுக்கு திடீர் வாய்ப்பூட்டு போடும் நவாஸ் ஷெரிப் !

இந்தியாவுடனான அமைதி நடவடிக்கை தடைபடாமல் இருக்க அந்நாட்டுக்கு எதிராக பேசக்கூடாது என்று தனது மந்திரிகளை நவாஸ் ஷெரிப் கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக, பாகிஸ்தான் நாளிதழான த நேஷன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:- 

nawaz-sharif2
கடந்த காலங்களில் செய்ததுபோல அல்லாமல் இந்தியாவுடனான அமைதி பேச்சுவார்த்தையை ஊக்குவிக்கும் வகையில் மட்டுமே அறிக்கைகள் வெளியிட வேண்டும் என்று தனது மந்திரிசபை சகாக்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களிடம் பிரதமர் நவாஸ் ஷெரிப் கேட்டுக் கொண்டுள்ளார்

அதேபோல், இருதரப்பு பேச்சுவார்த்தையின்போது ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்தும் பேச வேண்டும் என்று டெல்லியில் இருந்து சில தலைவர்கள் அறிக்கைகள் விடுவதால், எரிச்சல் அடைந்துள்ள நவாஸ் ஷெரிப், இருந்தபோதிலும் இந்திய அரசின் கொள்கை இதுவல்ல என்பதை புரிந்து வைத்துள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அண்மையில் பாரிஸில் நடைபெற்ற பருவநிலை உச்சி மாநாட்டின் போது, பிரதமர் மோடி-நவாஸ் ஷெரிப் சந்திப்புக்கு பிறகு இருநாட்டு உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 8-ம் தேதி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்த சுஷ்மா சுவராஜ், அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரிப் மற்றும் வெளியுறவுத்துறை ஆலோசகர் சர்தாஜ் ஆஜிஸ் ஆகியோரை சந்தித்து பேசினார். 

வரும் ஜனவரியில் சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள உலக பொருளாதாரமன்ற மாநாட்டின் போது மோடி- நவாஸ் ஷெரிப் ஆகியோர் மீண்டும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.