சண்டித்தனம் !

Al NIFRAS

1930941_10153320551938379_9159595417170440341_n
பிரிட்டிஷ் பிரதமராக பதவி வகித்த சேர் வின்ஸ்டன் சேர்ச்சில், ஒரு தடவை அரசியல்வாதிகள் பற்றி கருத்துத் தெரிவிக்கையில், ‘அரசியல் செய்வோரில் சிலர் தமது கொள்கைகளுக்காக கட்சியை மாற்றிக் கொள்கின்றனர். வேறு சிலர் கட்சிக்காக கொள்கைகளையே மாற்றிக் கொள்கின்றனர்’ என்று கூறினார். அவ்வாறு பலர் தம்மை மாற்றிக் கொண்டதை உள்நாட்டு அரசியலில் நாம் கண்டிருக்கின்றோம். ஆனால், இவ்வாறு கொள்கைகளையும் கட்சிகளையும் மாற்றிக் கொள்கின்ற நமது அரசியல்வாதிகள், எப்படியான ஆட்சிச்சூழல் வந்தாலும் தம்முடைய அசல் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ளவில்லை என்பதே நமதான அரசியலின் தலைவிதியாக ஆக்கப்பட்டிருக்கின்றது.

 
இவ்வாறான சம்பவம் ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கை ஜனநாயக சோஷலிஸ குடியரசின் அதியுயர் சபையான பாராளுமன்றத்தில் இடம்பெற்றிருக்கின்றது. சிறுபான்மை சமூகங்களை அடக்கி ஆள வேண்டும் என்ற உள்மனக் கிடக்கையோடு நல்ல பிள்ளை வேடம் தரித்துள்ள பேரினவாத சக்திகளின் முகத்திரை விலகிய சந்தர்ப்பமாகவும் அதைக் கொள்ளலாம். ஒருகாலத்தில் தொழில்தந்து, பணம் தந்து எல்லா வரப்பிரசாதங்களும் தந்த முதலாளியின் சுற்றத்தாருக்கு செஞ்சோற்றுக் கடன் செலுத்த முனைகின்ற முயற்சி என்றும் சொல்லலாம். அதை யார் எப்படி வேண்டுமென்றாலும் எடுத்துக் கொள்ளட்டும். அது பிரச்சினையில்லை. ஆனால் இவற்றை எல்லாம் விட பாராளுமன்றத்தின் ஒழுங்கையும், மானிடவியல் நாகரிகத்தையும் கேள்விக்குள்ளாக்கிய ஒரு சம்பவம் இது என்பதே இங்கு முக்கியமானது.

 
மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற, சட்டம் இயற்றுகின்ற, ஆட்சியை வழிநடாத்துகின்ற இன்னும் பல உயரிய பொறுப்புமிக்க ஒரு சபையில் அங்கம் வகி;க்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் சிறு பிள்ளைகளைப் போலவும், தெருச் சண்டியர்கள் போலவும் நடந்து கொண்டதைப் பார்த்து வாக்காளப் பெருமக்கள் பல தடவை முகம் சுழித்திருக்கின்றார்கள். ‘இவர்களுக்கா வாக்களித்து பாராளுமன்றத்திற்கு அனுப்பியிருக்கின்றோம்’ என்று வெட்கித் தலைகுனிந்திருக்கின்றார்கள்.
நாடாளும் ஒரு சiபில் அறிவுத்தனம், சமூக அக்கறைத்தனம், பொறுப்புணர்வுத்தனம், பொறுப்புக்கூறல் தனம், நாகரிகத்தனம், நாசுக்குதனம், ஒழுக்கத்தனம், அரசறிவியல்தனம், ராஜதந்திரத்தனம், பொறுமைத்தனம்…. என்று எவ்வளவோ தனங்களை வைத்துக் கொண்டு இந்த நாட்டையும் மக்களையும் வழிநடாத்த வேண்டியிருக்கும் போது இவற்றுக் கெல்லாம் எதிரான பண்பியல்புகளோடு பாராளுமன்ற கதிரைகளை நிரப்புவதும், ஒன்றுக்கும் இயலாத சந்தர்ப்பத்தில் இந்தக் கட்டுரையின் தலைப்பில் கூறப்பட்டுள்ள தனத்தை கையில் எடுப்பதும் சிலருக்கு வாடிக்கையாகி விட்டது. நல்லாட்சியும் இதற்கு விதிவிலக்கல்ல என்பதை கடைசியாக இடம்பெற்ற சம்பவம் நிரூபித்துக் காட்டியிருக்கின்றது.

 
சபையில் அமளிதுமளி
இம்மாதம் 11ஆம் திகதி பாராளுமன்ற அமர்வு இடம்பெற்ற போது, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சபையில் உரையாற்றினார். அவர் தனது உரையின் போது ‘சர்வதேச மனித உரிமைப் போரவை உயர்ஸ்தானிகர் தன்னுடைய விசாரணை அறிக்கையில் இலங்கையில் இடம்பெற்ற திட்டமிட்ட படுகொலைகள் தொடர்பாக குறிப்பிட்டுள்ளார். இதனை சபைக்கு அறிவித்தீர்களா?’ என்று ஆளும் தரப்பை பார்த்து கேள்வி எழுப்பினார். நாமல் இந்த கேள்வியைக் கேட்டால் சபையில் இருக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்காரர்களின் மன உந்துதல் எப்படியிருக்கும் என்பதை நன்றாக ஊகிக்க முடிகின்றது.

 
அப்போது எழும்பிய ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான், ‘நாட்டில் பல கொலைகள் திட்டமிட்டே இடம்பெற்றிருக்கின்றன. லசந்த விக்கிரமதுங்க, பிரகீத் எக்னெலியகொட, வஸீம் தாஜுதீன் கொலைகளும் திட்டமிட்டு இடம்பெற்றவையே…’ என்று கூறிக் கொண்டிருந்தார். அப்போது தீடீரென தமது ஆசனங்களில் இருந்து ஆவேசமாக எழுந்த எதிர்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, கெஹலிய ரம்புக்வெல, (உள்ள10ராட்சி சபையில் இருந்து பாராளுமன்றத்திற்கு இம்முறை தெரிவு செய்யப்பட்ட) இந்திக அனுராத, சனத் நிசாந்த ஆகியோர் முஜிபுர் ரஹ்மானின் பேச்சுக்கு எதிர்கருத்து தெரிவித்து அவருடன் முரண்பட்டனர். டினேஸ் குணவர்தன எம்.பி.யும் எழுந்து பேசினார். சிலர் அவரை ஏதோ ஒருவகையில் தாக்க முற்பட்டனர். அது கைகூடாத போது ‘வெளியில் வா பார்த்துக் கொள்கின்றோம்’ என்று அதட்டியதாக கூறப்படுகின்றது. இதனால் சபை அமளி துமளிப்பட்டது. இது தொடர்பாக முஜிபுர் ரஹ்மான எம்.பி. சபாநாயகரிடம் முறைப்பாடு செய்திருக்கின்றார். தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

 
பாராளுமன்றத்தில் ஒரு விடயத்தை தானாக முன்வந்து பேசுவதும், இன்னுமொருவர் அதற்கு பதிலளிப்பதும் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமையாகும். அதை விமர்சிக்கவோ சவாலுக்கு உட்படுத்தவோ முடியாது. அத்துடன் உலக வரலாற்றிலும் இலங்கையின் பாராளுமன்ற வரலாற்றிலும் கூட இதைவிட பெரிய வாக்குவாதங்கள் சபையில் இடம்பெற்றிருக்கின்றன. முக்கிய விவாதங்களில் தூங்கி விழுந்திருக்கின்றார்கள். ஊழல், மோசடி, அரசியல் பழிவாங்கல், கொலை என பல விடயங்கள் பேசப்பட்டிருக்கின்றன. செங்கோல் தூக்கிச் செல்லப்பட்டிருக்கின்றது. ஆனால் அவையெல்லாம் அநேகமாக ஒரு வரண்முறைக்குள் இருந்திருக்கின்றன. இன்னுமொருவரை தனியே தாக்கும் நகர்வுகளாக அமைந்த சம்பவங்கள் மிகக் குறைவே எனலாம்.

 
இதனை வைத்துப் பார்க்கின்ற போது, பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் பேசியதும் அதற்கு ரஹ்மான் பதிலளித்ததும், அப்போது மஹிந்தவின் விசுவாசிகளான எம்.பி.க்கள் சிலர் குறுக்கீடு செய்ததும் சர்ச்சைக்குரிய விடயங்கள் அல்ல. ஏனெனில் அது அவர்களது சிறப்புரிமை சார்ந்தது. ஆனால் இங்கிருக்கின்ற விமர்சனம் என்னவென்றால், நாடறிந்த கொலைகள் தொடர்பாக பேசிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை சக எம்.பி.க்கள் அதட்டும் தொனியில் பேசியதன் மூலம், நீதியான நியாயமான ஆட்சியை எதிர்பார்;க்கும் இந்நாட்டு மக்களுக்கு சொல்ல வருகின்ற சேதி என்ன என்பதுதான், இங்கு வாதப் பிரதிவாதங்களுக்கு உள்ளாகியுள்ளது.

 
வசீம் தாஜூதீன் கொலை தொடர்பாக நமக்கு எல்லோருக்குமே தெரியும். இந்த கொலையின் ரிஷிமூலம் அதாவது சூத்திரதாரியை மோப்பம் பிடிக்கும் புலனாய்வு விசாரணைகள் எங்கே வந்து நிற்கப் போகின்றன என்பதையும் மிக இலகுவாக அறிந்து கொள்ளலாம். கேர்ணல் திஸ்ஸ பற்றிய சீ.சீ.டி.வி. ஒளிப்படக் காட்சிகளோடு இன்னும் ஆதாரங்களை திரட்டும் வேலைதான் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றதே தவிர இதில் பெரிய மர்மங்கள் இருப்பதாக தெரியவில்லை.
இப்படியான ஒரு சூழ்நிலையில் வசிம் தாஜூதீன் பற்றி பேசுவதற்கு யாருக்கும் உரிமை இருக்கின்றது. அவர் ஒரு பிரபல வீரராக இருந்தவர். அவர் வீரராக இல்லாமல் செருப்புத் தைக்கும் தொழிலாளியாக இருந்தாலும் அதற்காக குரல் கொடுக்க வேண்டிய கடப்பாடு மக்கள் பிரதிநிதிகளுக்கு இருக்கின்றது.

 
பொறுப்புள்ள பிரதமர்
தாஜூதீன் ஒரு முஸ்லிம் என்பதற்காக முஜிபுர் ரஹ்மான் பேசியதாக அவரே சொன்னாலும் அதை ஏற்க முடியாது. நீதி விடயத்தில் இன, மதங்களை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இருப்பினும் தனது சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் என்பதால் ரஹ்மானுக்கு சற்று கூடுதல் அக்கறை இருந்திருக்கலாம். அதற்காக அவர் தாஜுதீனை மட்டும் பெயர் குறிப்பிடவில்லை. லசந்த, எக்னெலியகொட விவகாரத்தையும் சொல்லியுள்ளார். எனவே இவ்வாறு பேசும்போது அது தொடர்பில் மாற்றுக் கருத்துக்கள் இருப்பின் அதை அழகான மொழியில் சபையில் முன்வைப்பதற்கு முடியும்.

 
உண்மையாகவே மேற்சொன்ன சம்பவங்கள் எல்லாம் முன்னைய ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றவையாகும். ஆதலால்;, இது பற்றி பேசப்படுகின்ற போது. அப்போது அதிகாரத்தில் இருந்தவர்கள் என்ற அடிப்படையில் அது தொடர்பில் அவர்கள் கருத்துக்களை முன்வைக்கலாம். அவை பொறுப்புக்கூறலாக இருக்கவேண்டுமே தவிர கோபமாக வெளியில் வரக்கூடாது. அது உன்னதமான சபையை களங்கப்படுத்துவதாக அமைந்து விடும். இருப்பினும், சோசலிஸவாதியாக அரசியலுக்குள் நுழைந்த தினேஷ் குணவர்தனவும் கையில் கைவிலங்கு பூட்டப்பட்ட போது கூட சிரித்துக் கொண்டு போட்டோவுக்கு போஸ்கொடுத்த ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவும், இந்த விடயத்திற்காக ஒரு பாராளுமன்ற உறுப்பினர் மீது சீறிப் பாய்ந்திருக்கின்றார்கள் என்றால்… அந்தக் கொலைகளின் கனதியை உணர்ந்து கொள்ள அது போதுமானது.

 
இந்த களேபரம் தொடர்பில் அதற்கு அடுத்த சபை அமர்வில் பேசிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ‘நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்து பாராளுமன்றத்தை பலப்படுத்துவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் நடத்தைகள் மேம்பட வேண்டும். கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் பாராளுமன்றத்திற்கு வெளியே முஸ்லிம்களை இலக்காகக் கொண்டு தாக்கியவர்கள், இன்று சபைக்குள்ளேயே முஸ்லிம்களுக்கு எதிராக சண்டித்தனம் புரிய முற்படுகின்றார்களா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதன்மூலம் ஒரு பொறுப்புள்ள பிரதமர் என்ற தன்னுடைய வகிபாகத்தை அவர் சரியாக வெளிப்படுத்தியிருக்கின்றார் என்று சொல்ல வேண்டும்.
இருப்பினும், வசீம் தாஜூதீனும் முஜிபுர் ரஹ்மானும் முஸ்லிம்கள் என்பதற்காக இதை தனியே முஸ்லிம்களின் பிரச்சினையாக மட்டும் நோக்க வேண்டியதில்லை. இந்நிலைமை ஒரு சிங்கள அல்லது தமிழ் பாராளுமன்ற உறுப்பினருக்கோ நடந்திருந்தாலும் அதற்கெதிராக நடுநிலையாளர்கள் குரல்கொடுக்க வேண்டும். இது மானுடவியலின் அடிப்படைப் பண்பாகும். அதுமட்டுமன்றி, ரஹ்மான் எம்.பி. பாராளுமன்றத்தில் குறிப்பிட்டது இலங்கையின் அண்மைக்கால வரலாற்றில் மக்களால் மிகவும் கவனிக்கப்பட்ட சில வழக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறிருக்கையில், ஒரு பாராளுமன்ற உறுப்பினரிற்கு எதிராக பேசியதன் மூலம், மறைமுகமாக மக்களது உள்மன எதிர்பார்ப்புக்களும் கேலிக்குள்ளாக்கப்பட்டுள்ளன.

 
கடந்த 11ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவம் ஒரேயொரு நிகழ்வு மட்டுமே இது. இதுபோல நாகரிகமற்ற, சண்டித்தனத்தை வெளிப்படுத்தும் பல சம்பவங்களை அரசியல்வாதிகள் இதற்கு முன்னர் வெளிப்படுத்தியிருக்கின்றனர். ஒருவேளை, இன, மத வெறுப்புணர்வு பேச்சை தடைசெய்யும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு அது சட்டமாக நடைமுறைக்கு வந்திருந்தால் பாராளுமன்ற உறுப்பினர்கள் இனவாத அடிப்படையில் செயற்படுவதை கட்டுப்படுத்தி இருக்க முடியும். ஆயினும் அச்சட்டமூலம் தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளமையால், இருக்கின்ற சிவில் சட்டங்களையும் பாராளுமன்ற ஒழுங்குவிதிகளையும் மக்கள் பிரதிநிதிகள் விடயத்திலும் கடுமையாக அமுல்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கின்றது. அதன்மூலமே பாராளுமன்றத்தின் கௌரவத்தை பாதுகாக்க முடியும்.

 
பண்பும் நாகரிகமும்
பாராளுமன்றம் என்பது மக்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள் அம் மக்களின் அபிலாஷைகளை பிரதிவிம்பப்படுத்தும் ஒரு மேலான சபையாகும். அதில் அங்கம் வகிப்பவர்களும்; மிக உன்னத நடத்தைகளைக் கொண்டவர்களாக இருப்பது இன்றியமையாதது. தெருச் சண்டியர்கள் போல, மீன் வியாபாரிகள் போல, போதைப் பொருள் கடத்தல் காரர்கள் போல நடந்து கொள்ள இயலாது. அவ்வாறானவர்களை வைத்துக் கொண்டு நடாத்தப்படுகின்ற ஆட்சியை நல்லாட்சி என்றும் சொல்வது சிரமமானது.
எனவேதான், முன்னைய ஆட்சியில் மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய சகாக்களாக இருந்தவர்களை மீள தேசிய அரசாங்கத்தில் இணைத்துக் கொண்டு, பதவிகளை வழங்க வேண்டாம் என்று மக்கள் தலையில் அடித்துக் கொண்டனர். ஆனால் மஹிந்தவைப் பலவீனப்படுத்தி, சுதந்திரக் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் தேசிய அரசாங்கம் என்ற தோற்றப்பாட்டை மெய்ப்பிக்க வேண்டிய நிர்ப்பந்த சூழலிலும், கடந்த அரசாங்கத்தில் அங்கம்வகித்த சில அரசியல்வாதிகள் மீண்டும் நல்லாட்சிக்குள் உள்வாங்கப்பட்டனர். இதன் பக்க விளைவுகளில் ஒன்றாகவும் மேற்படி சம்பவத்தை கருத இடமுள்ளது.

 
தற்போது நிறைவேற்றதிகாரத்தை ஒழிப்பதற்கான பூர்வாங்க சட்ட ஏற்பாடுகள் எல்லாம் மேற்கொள்ளப்பட்டு விட்டன. அதன்படி பாராளுமன்றத்திற்கு முழுமையான அதிகாரம் கிடைக்கின்றது. இவ்வாறான ஒரு சூழலில், சண்டியர்களையும், ஊழல் பேர்வழிகளையும், மோசடிக்காரர்களும் பாராளுமன்றத்தில் வைத்திருந்தால் என்ன நடக்கும் என்று நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கின்றது. அதிகாரம் எல்லாம் பாராளுமன்றத்திற்கு வருகின்ற போது நடுநிலையாக சிந்திக்கின்ற, நீதி நியாயத்திற்காக போராடுகின்ற, எல்லா சமூகங்களுக்காகவும் குரல்கொடுக்கின்ற அரசியல்வாதிகள் பாராளுமன்றத்தில் இருப்பது அவசியமாகும். அதைவிட முக்கியமாக நாகரிகமானவர்களாகவும் பண்பானவர்களாகவும் ஒழுக்கமானவர்களாவும் அவர்கள் இருப்பது எல்லாவற்றையும் விட அத்தியாவசியமான உடடித் தேவைப்பாடாக இருக்கின்றது. கடந்த வாரம் இடம்பெற்ற அமளி துமளி அதனை மேலும் வலியுறுத்துகின்றது.

 
எனவே, அரசாங்கம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்கவிதிக் கோவையை உருவாக்க வேண்டும். அரசாங்க ஊழியர்களுக்கு பிரமாணக் குறிப்புக்கள் இருப்பது போல எம்.பி.க்களுக்கும் சேவை நடைமுறைகள் இருக்க வேண்டும். அவர்கள் அவற்றையெல்லாம் சரியாக பின்பற்றுகின்றனரா என்பதை ஒரு அதிகாரம் பெற்ற குழுவினர் கண்காணித்து அறிக்கையிட வேண்டும். இதற்காக ஒரு சூத்திரம் உருவாக்கப்பட வேண்டும். நாட்டில் வாழும் ஒரு கடைநிலை பொதுமகன் கூட சட்டத்தின்படி நடக்க வேண்டுமென்றும் ஒழுக்கமாக இருக்க வேண்டுமென்றும் எதிர்பார்க்கின்ற அரசானது, அந்தச் சட்டத்தை இயற்றுகின்ற உயரிய சபையில் உள்ளவர்கள் சட்டத்திற்கு மதிப்பளிப்பதையும் பண்போடு நடந்து கொள்வதையும் கட்டாயமாக்க வேண்டும். ஒரு அரச நிறுவனத்தில் சிற்றூழியரை சேர்க்கின்ற போது அவனது தகமைகள் எந்தளவுக்கு பரிசீலிக்கப்படுகின்றன? ஒரு பிள்ளை பாடசாலையின் சக மாணவனுடன் முரண்படுவதே ஆசிரியரின் பார்வையின் தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகின்றது. இவ்வாறிருக்கையில் மிகவுயர் சபையில் அங்கம் வகிப்பவர்கள் மிக முன்னேற்றகரமான பண்பியல்பை உடையவர்களாக இருக்க வேண்டியது இன்றியமையாதது.

 
அதேவேளை, பாராளுமன்றத்திற்கு பொருத்தமானவர்களை உள்வாங்க வேண்டும் என்றால், படித்த, சமூக சிந்தனையுள்ள, நீதி நியாயத்திற்கு கட்டுப்படுகின்ற, ஒழுக்க விழுமியங்களை பேணும், பணத்தாசை இல்லாத ஆளுமைகளை தமது பிரதிநிதிகளாக தெரிவு செய்ய வேண்டிய தலையாய கடைப்பாடு பொது மக்களுக்கு இருக்கின்றது. தம்முடைய உண்மையான பிரதிநிதிகள் யார் என்பதை தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் என எல்லோரும் மிகக் கவனமாக தீர்மானிக்க வேண்டும்.
சட்டத்தை இயக்குகின்ற சபையே அதை மதிக்கவில்லை என்றால், சண்டித்தனமும் ஒழுக்கமின்மையும் பாராளுமன்றத்திற்குள்ளேயும் நடமாடித் திரியும் நிலைமை தொடருமானால்,… நல்லாட்சியை பூச்சியத்தால் பெருக்கிய மாதிரி ஆகிவிடும்.

ஏ.எல். நிப்றாஸ்
(வீரகேசரி 19.12.2015)