இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 20க்கு 20 உலக கோப்பை போட்டியை பாகிஸ்தான் புறக்கணிக்க கூடாது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் அணி தலைவர் வசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான தொடர் நெடுநாட்களாக இழுபறியாக காணப்படும் நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இவர் இதன் போது கூறுகையில்,
பாகிஸ்தானுக்கு எதிரான நேரடி தொடரில் விளையாடுவது தொடர்பாக முடிவு எடுப்பதில் இந்தியா கொஞ்சம் அதிகமாகவே நேரம் எடுத்துக்கொண்டுள்ளது. இப்போது இந்த தொடர் நடக்காவிட்டாலும் விரைவில் நடக்கும். ஆனால் பாகிஸ்தானுடன் விளையாட விருப்பமா? இல்லையா? என்பதை இந்திய கிரிக்கெட் வாரியம் முதலில் தெளிவாக கூற வேண்டும். அவ்வாறு செய்தால் தேவையில்லாமல் பேசிக்கொண்டிருப்பதை விட்டு, இந்த விவகாரத்தை ஓரங்கட்டி விடலாம்.
20 ஓவர் உலக கோப்பை போட்டி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்துவதாகும். எந்த காரணத்திற்காகவும் இந்த போட்டியை புறக்கணிப்பது பற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நினைத்து கூட பார்க்க கூடாது. எந்த விலை கொடுத்தாவது இந்த போட்டியில் நாம் பங்கேற்க வேண்டும். அதை செய்யாவிட்டால் அது நீண்ட காலத்திற்கு நமக்கு தீங்கு விளைவிப்பதாக அமையும்.
மேலும் 20 ஓவர் உலக கோப்பையில் விளையாடாவிட்டால், அது நமது வீரர்களுக்கும், நமது கிரிக்கெட்டுக்கு மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தும். இந்திய அணிக்கு, பாகிஸ்தானுடன் விளையாட விருப்பம் இல்லை என்றால் பரவாயில்லை. அவர்களுடன் விளையாட விட்டாலும், நம்மால் பாகிஸ்தான் கிரிக்கெட்டை நடத்த முடியும். அதே சமயம் நாம் விளையாடினாலும், விளையாடாவிட்டாலும் தீவிரவாத பிரச்சினை ஓய்ந்து விடாது. நேரடி கிரிக்கெட் தொடர் நடந்தால், இரு நாடுகளுக்கும் அது நல்ல விடயமாக இருக்கும். என கூறினார்.