அரசாங்க உத்தியோகஸ்தர்களுக்கான வரிவிலக்கப்பட்ட வாகன அனுமதிப்பத்திர சலுகைக்கு பதிலாக மாற்று திட்டமொன்றை விரைவில் முன்வைக்க இருப்பதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, 2017 முதல் சகல அரச நிறுவனங்களும் தமது உண்மையான பெறுமதியை வரவு செலவுத் திட்டத்தினூடாக வெளிப்படுத்த வேண்டும். மோட்டார் சைக்கில், ஆட்டோ என்பவற்றிற்கு
புகைப் பரிசோதனை கட்டணம் அறவிடப்படமாட்டாது. வெளிநாட்டவருக்கு காணி விற்கப்போவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தவறானது. கடந்த ஆட்சியிலே துறைமுக நகரில் 216 ஏக்கர் காணி சீனாவுக்கு உரித்தாக வழங்கப்பட்டது. ஆனால் எமது அரசாங்கம் முதலீட்டாளர்களுக்கு 99 வருட குத்தகைக்கே காணி வழங்க இருக்கிறது.
வடக்கு கிழக்கு மாகாணத்தில் மேலும் தேவைகள் இருப்பதால் கூடுதல் நிதி ஒதுக்குமாறு தமிழ் எம்.பிக்கள் கோரினர். சகல மாகாணங்களையும் நாம் ஒன்று போலவே கவனிக்கிறோம். ஏதும் குறைபாடு இருந்தால் அதனை சரிசெய்யவும் தேவைகள் இருந்தால் நிறைவேற்றவும் தயாராக இருக்கிறோம். வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கு 14 பில்லியன் மேலதிக நிதி ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தோட்ட பிரதேசத்தின் அபிவிருத்திக்கும் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.