பொறியியல் பீடம் பறி போகுமா..?  (பாகம்-03) !

 

தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தை நிறுவுவதற்கு பலரும் முயன்றனர்.இதற்கான அனைத்து முயற்சிகளும் நிறைவுற்ற காலப்பகுதியில் 2011ம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் புதிய,பழைய பாட விதானத்திற்கமைய z-score இனை எவ்வாறு கணிப்பது? என்பதைத் தீர்மானிப்பதில் சிக்கல் தோற்றியது.அவ் ஆண்டு மூன்று முறை  z-score மாற்றம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.இதன் காரணமாக பல்கலைக்கழகங்களுக்கு உள் வாங்கப்படும் மாணவர் தொகை அதிகரிக்கப்பட்டிருந்தது.இம் மாணவர் தொகையினைக் கட்டுப்படுத்த ஏற்கனவே தாங்கள் பொறியியல் பீடத்தினை நிறுவ திட்டமிருந்த யாழ்ப்பாண பல்கலைக்கழகம்,தென் கிழக்கு பல்கலைக்கழகங்களில் அவசர அவசரமாக அவ் ஆண்டே பொறியியல் பிரிவை நிறுவ பல் கலைக்கழக மாணிய ஆணைக்குழு கட்டளை பிறப்பித்தது.

seusl

எனினும்,யாழ்ப்பாண பல்கலைக்கழகம் குறித்த ஆண்டு பொறியியல் பிரிவினை ஆரம்பிக்கவில்லை.இத் துறையினை நிறுவுவதற்கான போதிய வளங்களினை ஏற்படுத்திக் கொண்டு அடுத்த ஆண்டே ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.அதாவது 2011ம் ஆண்டு அதிக மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு உள் வாங்கப்பட்டமையினால் தான் இப் பல்கலைகழகத்தில் பொறியியல் பீடம் ஆரம்பிக்கப்பட்டதாக கூறிவதை ஏற்க முடியாது.2011ம் ஆண்டு அதிக மாணவர்கள் உள் வாங்கப்பட்டமையினால் அவசர அவசரமாக ஆரம்பிக்கப்பட்டது என்பதே உண்மை.ஒரு பிள்ளை கருக் கொண்டு பத்து மாதம் தாயின் வயிற்றில் இருந்தால் தான் அப் பிள்ளை நிறைமாதப் பிள்ளையாக ஆரோக்கியமானதாக இருக்கும்.குறை மாதக் குழந்த அவ்வளவு இலகுவில் தேறாதல்லவா?

 

அன்றைய அரசு எதிர்கொண்ட சிக்கலான தீர்விற்கு இம் மாணவர்கள் போடு காய்களாக பயன்படுத்தப்பட்டுள்ளனர் என்பதே உண்மை.இது அரசு தான் எதிர்கொண்ட சவாலினை முகம் கொடுக்க கையாண்ட வழி முறையில் உள்ள பிரச்சினையாகும்.இதற்கு தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் வெற்றியடையாத (FAILURE) திட்டம் என்ற தோற்றப்பாட்டினை ஏற்படுத்த விளைவதை ஒரு போதும் ஏற்க முடியாது.இம் மாணவர்களுக்கு இலங்கையின் பொறியியல் நிறுவனம் (IESL) பொறியியலாளர்களாக அங்கீகாரம் வழங்க வில்லை.அதாவது இவ் நிறுவனத்தின் அங்கீகாரம் குறித்த மாணவர்களுக்கு கிடைக்காத பட்சத்தில் இம் மாணவர்களினை இலங்கையின் பொறியியலாளர்களாக கருத முடியாது என்பதே உண்மை.இதற்காகவா இம் மாணவர்கள் இத்தனை சிரமப்பட்டார்கள்? ஒரு பொறியியல் பீடத்திற்கு தெரிவு செய்யப்படும் மாணவனின் கற்பனைகள் எவ்வாறு அமைந்திருக்கும் என்பதை நான் சொல்லித் தான் நீங்கள் அறிய வேண்டியதில்லை.இதற்கான தீர்வு உடனடியாக வழங்கப்படல் வேண்டும்.மேலும்,இப் பல்கலைக்கழக மாணவர்கள் தங்களது சக ஆண்டு ஏனைய பல்கலைக்கழக மாணவர்களினை விட ஒரு வருடம் பின்னிலை வகிப்பதும் குறிப்பிடத்தக்கது.இதுவெல்லாம் ஒரு குறித்த பொறியியல் சமூகத்தினை குழி தோண்டி புதைப்பது போன்றாகும்.இது மாத்திரமல்ல இன்றைய போட்டி நிறைந்த சூழ் நிலையில் இம் மாணவர்களின் எதிர்காலத்திற்கு சிறப்பானதும் அல்ல.

இவ்வாறான பிரச்சனைகள் இங்கு மட்டும் தோன்றவில்லை பல இடங்களில் தோற்றம் பெற்ற ஒன்றுதான்.கிழக்குப் பல்கலைகழகத்தில் மருத்துவ பீடம் ஆரம்பிக்கப்பட்ட போது கூட இவ்வாறான சில பிரச்சனைகள் தோற்றம்பெற்றிருந்தன.இப் பல்கலைகழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட ஒரு மாணவன் கடந்த சில வருடங்கள் முன்பு நீதி மன்றம் சென்று வேறு பல்கலைக்கழகத்திற்கு இடமாறிய வரலாறும் உள்ளன.றுகுணு பொறியியல் பீடம் கிடைத்தால் அடுத்த முறை ஏ.எல் எழுதி வேறு பல்கலைகழகம் செல்லுவது சிறந்தது என்ற கருத்து நிலவிய காலமும் உண்டு.இன்று இக் கருத்தெல்லாம் மருவி இப் பல்கலைக்கழகங்கள் சக  பல்கலைக்கழகங்களோடு போட்டி போடும் நிலைக்கு வந்துள்ளன.இப் பகுதி கலைத்துறை மாணவர்கள் தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தினை .தங்களது கல்விக்கு ஏதுவான ஒரு இடமாக தெரிவு செய்துள்ளனர்.இப் பல்கலைக்கழகத்தின் ஏனைய துறைகளினையும் யாரும் குறை கூறியதாகவும் அறிய முடியவில்லை.இது போன்று இத் துறையினையும் இத் துறை மாணவர்கள் பொருந்திக் கொள்ளும் காலம் வெகு விரைவில் தோன்றலாம்.எனினும்,தற்போதைய அசமந்தப்போக்கு இல்லாமல் துரித அபிவிருத்தித் திட்டங்கள் அமுல்படுத்தப்படல் வேண்டும்.

மேலதிக துறைசார் கற்கை நெறிகளினை தொடர்வதற்கும் துறை சார் தொழிற்சாலைகளுடன் தொடர்பின்மைஅவர்களின் குற்றச் சாட்டுகளில் பிரதானமான ஒரு குற்றச் சாட்டாகும்.பொறியியற் துறையுடன் தொடர்புடைய கற்கை நெறிகளாக auto cad ,primavera,CIMA,MEP ENGINEERING,MS project,CIVIL 3D ஆகியவற்றைத் தான் இன்றைய பொறியியற் துறை மாணவர்கள் மேலதிக துறைசார் கற்கை நெறிகளாக தொடர்கின்றனர்.பல்கலைகழகத்தில் தொடர்ச்சியான விரிவுரைகள் நடாத்தப்படும் போது இக் கற்கை நெறிகளினை தொடர்வதற்கு நேரம் இருக்காது.அக்கறை மாட்டிற்கு இக் கரை பச்சை போல இருந்தால் படிக்கலாம் என நினைப்பார்களே தவிர 99.9 வீதமான மாணவர்கள் தொடர்வதில்லை என்பதே உண்மை.எனினும்,இக் கற்கை நெறிகளினை அம்பாறை மாவட்டத்தின் பல பாகங்களிலும் தரமிக்க சான்றிதழ்களுடன் பயின்று கொள்ளக் கூடிய வசதி உள்ளது.

துறை சார் தொழிற்சாலைகளுடன் தொடர்பின்மையினை ஒரு குற்றச் சாட்டாகவே குறிப்பிட முடியாது.போதியளவு பயிற்சிக்கான வளங்கள் ஏற்படுத்தப்படும் போது இதற்கான தேவைகள் குறைவு.எனினும்,சில மாதங்களுக்கு ஒரு முறை பொறியியல் துறை மாணவர்கள் தங்களது துறை சார் களச் சுற்றுலா  (field visit) ஒன்றினை மேற்கொள்வார்கள்.இது காலடியில் தான் இருக்க வேண்டும் என்பதை ஒரு போதும் ஏற்க முடியாது.இவ்வாறான பிரச்சனைகளினைத் தவிர்க்கவே இம் மாணவர்களினது கல்வியாண்டில் மூன்று மாதங்களாக இரண்டு பயிற்சிகள் (training) வழங்கப்படும்.இருந்தால் படிக்கலாமே என எண்ணுவதும் இருந்தால் அதனை பயன்படுத்த தவறுவதும் மனித இயல்பே! பொறியியல் பீடத்திற்கான நீரியல் ஆய்வு கூடம் ஒன்று அவர்களின் பீடம் அமைந்துள்ள இடத்தில் நிறுவப்பட்டுக் கொண்டிருக்கின்றது.இக் கட்டடத்தில் civil,electrical பொறியியல் துறைசார் மாணவர்களுக்கு போதுமான அளவு அறிவினை பெறக் கூடிய சூழல் உள்ளது.இக் கட்டடத்தினை எத்தனை civil,electrical துறை  மாணவர்கள் பார்வையிட்டுள்ளனர்? தங்களது விரிவுரையினை அசை போடும் இடமாக எத்தனை பேர் பயன்படுத்தினர்? என்ற வினாவினை எழுப்பினால் ஒரு மாணவன் கூட “நான் பார்த்தேன் ” எனக் கூற முடியாது.ஏனெனில்,நான் அக் குறித்த கட்டிடத்தில் சுமார் ஆறு மாத காலம் பயிற்சிக்காக இருந்தேன்.இவ் பொறியியல் பீடத்தில் கல்வி பயிலும் ஒரு மாணவன் கூட படிக்கும் நோக்கில் அந்தப் பக்கம் சுயமாக வந்ததை அவதானிக்கவில்லை.

ஒரு பக்கம் மீன் பிடி.மறு பக்கம் வேளாண்மை.இப்படியாக உள்ள தென் கிழக்குப் பல்கலைக்கழகம் சூழல் பொறியியல் துறைக்கு ஏதுவானதா? எனச் சிந்திப்பது சிறுமையின் உச்ச கட்ட வெளிப்பாடு.நாமே எமது பிரதேசத்தினை நையப்புடையும் ஒரு செயலும் கூட.இக் குற்றச் சாட்டினை முன் வைக்க இவர்கள் இப் பல்கலைக்கழக மாணவர்களினை  மீன் பிடிக்க அழைத்தார்களா? அல்லது வேளாண்மை செய்ய அழைத்தார்களா? இப்படியான சூழலில் தான் நீங்கள் முளைத்து இன்று பொறியியலாளர் ஆகுவதற்கான தகுதியினைப் பெற்றுள்ளீர்கள் என்பதை மறைக்காமலும்,மறக்காமலும் செயற்பட வேண்டும்.இவ் நையாண்டி வேறு யாரையும் அல்ல உங்கள் தந்தையினையும் சகோதரனையுமே! மேலும்,இப் பகுதியில் காணப்படுகின்ற அனைவரும் விவசாயிகளும் அல்ல மீனவர்களும் அல்ல.போதியளவு கல்வித்தரத்தினை கொண்டே எத்தனை பேர் இங்குள்ளதை நினைவூட்ட விரும்புகிறேன்.மேலும்,இதே கிழக்கு மாகாணத்தில் உள்ள வந்தாறுமுல்லையில் மருத்துவ கல்லூரியினை நிறுவ முடியுமாக இருந்தால் ஏன் இப் பகுதியில் பொறியியல் துறையினை நிறுவ முடியாது? 

இவர்கள் முன் வைக்கும் நீண்ட கால விடுமுறை,வெள்ளத்தில் மூழ்கும் பிரச்சையல்லாம் ஒரு பிரச்சனையே அல்ல.இதுவும் ஒரு முக்கியமான பிரச்சனை என்றால்.இவர்கள் மூடக் கோருவது பொறியியல் பீடத்தினை அல்ல தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தினையே! பொறியியல் பீடத்திற்கு மாத்திரம் வெள்ளம் வருவதும் இல்லை,நீண்ட கால விடுமுறை வழங்கப்படுவதுமில்லை.இன்று இதற்கான கோசம் வலுப்பது போன்று நாளை தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தினை மூடுவதற்கான கோசமும் வலுக்கலாம் என்பதையே இவர்கள் நியாயங்களாக சுட்டிக் காட்டி இருப்பவை கூறுகின்றன.

இத் துறை சிறந்த அபிவிருத்தி காணும் போது இப் பகுதியில் அமைந்துள்ள அரச தொழில் நுட்பக் கல்லூரிகள்,தனியார் பொறியியல் தொடர்புடைய கற்கை நெறிகள்,திறந்த பல்கலைக்கழகங்கள் அபிவிருத்தி காணும்.அதாவது இப் பகுதியின் பொறியியலின் துரித அபிவிருத்தியில் இது பாரிய பங்களிப்பினைச் செய்யும்.இச் சந்தர்ப்பத்தில் இதனைத் தவற விடுவோமாக இருந்தால் தொண்டை கிழியக் கத்தி எதுவித பயனையும் இப் பகுதி சமூகம் அடையப்போவதில்லை.இங்கு சிந்திக்கப்படும் விடயங்கள் எதிர் கால சிந்தனை கொண்டது என்பதை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்.எதிர்காலத்தினை மாத்திரம் சிந்திப்பதி இவ் விடத்தில் பொருத்தமானதல்ல.தற்போது அங்கு கல்வி பயிலும் 300 மாணவர்களின் படிப்புகளிலும் எமது சமூகம் அக்கரை காட்ட வேண்டும்.இதற்கு முடியாது போனால் தகுந்த வளம் ஏற்படுத்தப்படும் வரை இப் பல்கலைக்கழக மாணவர்கள் வேறு துறைகளுக்கு இடமாற்றம் செய்யப்படல் வேண்டும்.இம் மாணவர்களிடம் ஆர்ப்பாட்டங்கள் செய்வதற்கான கதைகள் சிலா உலா வருகிறது.இவர்களுக்கான தீர்வுகளினை காலம் தாழ்த்தாமல் உடனடியாக வழங்க வேண்டும்.

**முற்றும்**

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்

சம்மாந்துறை.