எமது நாட்டில் 43 வீதமானவர்கள் நாளாந்தம் 2 அமெரிக்க டொர்களையே சம்பாதிக்கின்றனர் : பிரதமர் !

Ranil-18

முழு பாராளுமன்றமும் அரசாங்கமாக செயற்படுவதற்குத் தேவையான சகல ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதற்காக பாராளுமன்ற மேற்பார்வைக் குழுக்கள் அமைக்கப்படவிருப்பதுடன், நாட்டில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் புதிய அரசியல் கலாசாரத்துடன் சகலரும் இணைந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் செயற்பாடுகளால் மத்திய கிழக்கில் ஸ்திரமற்ற நிலை ஏற்பட்டால் அதன் தாக்கம் இலங்கையையும் பாதிக்கும். இதனைக் கருத்தில் கொண்டு அவசர நிலைமையொன்றுக்கு முகங்கொடுப் பதற்காக சர்வதேச நாணய நிதியத்துடன், முன்னேற்பாட்டுத் திட்டமொன்றை மேற்கொள்ள எதிர்பார்த்திருப்பதாகவும் பிரதமர் கூறினார்.

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான எட்டாவது நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

மோசடி, குடும்ப ஆதிக்கம், ஜனநாயகத்தை மிதித்து நாகரீகமற்ற சமுதாயமொன்றை உருவாக்கி சர்வாதிகாரத்தை நோக்கிச் சென்ற பயணத்தை மாற்ற வேண்டும் என்பதே பலரதும் நோக்கமாக இருந்தது. இதன் காரணமாகவே நாம் பொது வேட்பாளர் ஒருவரைக் களமிறக்கினோம். அன்று முதல் இன்றுவரை நாம் பல்வேறு சவால்களையும், பிரச்சினைகளையும் எதிர்கொண்டுள்ளோம். நாம் இன்று புதிய பயணமொன்றை ஆரம்பித்திரு க்கிறோம். சம்பிரதாய அரசியலுக்குள் சிக்கியிருந்த அநேகமானவர்களுக்கு இந்த மாற்றத்துக்கு முகங்கொடுப்பது கஷ்டமாகும்.

நாட்டின் பொருளாதாரத்தை அழிக்கும் நாட்டை வெளிநாட்டுக்கு விற்கும் வரவு செலவுத் திட்டமாக எமது இணக்கப்பாட்டு அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தை எதிர்த்தரப்பினர் சித்தரிக்க முயல்கின்றனர். வரவு செலவுத்திட்டத்துக்கு ஆதரவு வழங்க அமைச்சரவையில் தீர்மானித்துள்ளதால் அதனை விமர்சிக்க முடியாதிருப்பதாக இன்னும் சிலர் வருத்தம் தெரிவித்துள்ளனர். இவையாவும் சம்பிரதாய அரசியல் தோற்றப்பாடுகளாகும். எதுவித விஞ்ஞான பூர்வமான அடிப்படையும் இல்லாமல் நமது வரவு செலவுத் திட்டத்தை சிலர் எதிர்ப்பதோடு, எதிர்க்க வேண்டும் என்பதற்காக எதிர்ப்பவர்களும் இருக்கிறார்கள். எமது நாட்டில் புதிய அரசியல் சம்பிரதாயம் ஒன்றை உருவாக்குவதற்கான பொன்னான சந்தர்ப்பம் அமைந்துள்ளது.

இரு பிரதான கட்சிகளும் இணைந்து இணக்கப்பாட்டு அரசாங்கமொன்றை உருவாக்கியுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்த்தரப்புக்கு தலைமைத்துவம் வழங்கி வருகிறது. ஜே.வி.பி. எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் பதவியை வகிக்கிறது. இந்தப் பின்னணியில் முழுப் பாராளுமன்றத்துக்கும் ஆட்சி அதிகாரத்தை வழங்கும் புதிய சட்ட ஒழுங்குகள் தயாரிக்கப்பட்டுள்ளன. கட்சி பேதமின்றி நாட்டின் நலனுக்காகவும் அதன் எதிர்கால சுபீட்சத்துக்காகவும் புதிய அரசியல் பயணம் செல்வதற்கான சந்தர்ப்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்புதிய அரசியல் பயணத்தை பயணிக்க புதிய அரசியல் கலாசாரமொன்றை உருவாக்குவதற்குத் தேவையான பின்னணி தயாரிக்கப் பட்டுள்ளது. முழு பாராளுமன்றமும் அரசாங்கமாக செயற்படுவதற்குத் தேவையான பாராளுமன்ற மேற்பார்வை குழுக்களை நியமிப்பதற்கும் சகல ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளன. பாராளுமன்ற பொதுக் கணக்குக் குழு அரச நிறுவனங்கள் தொடர்பான குழு மக்கள் முறைப்பாட்டுக் குழு என்பவற்றுக்கு மேலதிகமாக மேலும் 16 அம்சங்களின் கீழ் மேற்பார்வைக் குழுக்கள் நியமிக்கப்படும். இவற்றின் தலைவர்களாக சாதாரண எம்.பிக்கள் நியமிக்கப்படுவர். சகல அமைச்சுக்களும் இந்த மேற்பார்வைக் குழுக்களின் கீழ் கொண்டுவரப்படும். அரச நிர்வாகத்துக்குள் முழுப் பாராளுமன்றமும் இணைத்துக் கொள்ளப்படும். நாம் தேர்தலின் போது வாக்களித்தது போன்று தேசிய கணக்காய்வுச் சட்டத்தை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவிருக்கின்றோம். இந்தச் சட்டத்தின் ஊடாக மக்களின் நிதி தொடர்பில் பாராளுமன்றத்துக்கு இருக்கும் நிதிக் கட்டுப்பாட்டு, அதிகாரம் மேலும் பலப்படுத்தப்படும். கணக்காய்வாளரின் தலைமையின் கீழ் சுயாதீன கணக்காய்வு சேவை ஆணைக்குழு உருவாக்கப்பட்டு தேவையான ஒதுக்கீடுகளும் வழங்கப்படும். மிக விரைவில் உள்ளூராட்சி தேர்தலின் பெண்களின் பிரதிநிதித்துவத்தை 25 வீதமாக அதிகரிக்கும் திருத்தச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும். மோசடிக்கு எதிரான செயற்பாடுகளுக்காக பலம் வாய்ந்த நிறுவனமொன்றை உருவாக்குவதற்குத் தேவையான சட்ட ஒழுங்குகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவிருக்கிறோம். நாட்டில் முன்னெடுக்கப்படும் சகல அபிவிருத்தி செயற்பாடுகளையும் கண்காணிப்பதற்காக அபிவிருத்தி கண்காணிப்பு சபைகளை உருவாக்குவதற்குத் தேவையான நாட்டுக்கு உகந்த புதிய அரசியலமைப்பொன்றை தயாரித்து முழு பாராளுமன்றத்தையும் அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணையை விரைவில் பாராளு மன்றத்துக்கு சமர்ப்பிக்கவிருக்கிறோம்.

சுயாதீன ஆணைக்குழுக்கள் அனைத்தும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. சுயாதீன தேர்தல் ஆணைக்குழு நியமிக்கப்படுவதற்கு முன்னரே நாம் சுயாதீனமான தேர்தலை நடத்தினோம். தேர்தல் செயற்பாடுகளில் அரசியல் தலையீடுகள் இருக்கவில்லை. அரச ஊடகங்களை நாம் அரசியல் செயற்பாடுகளுக்குப் பயன்படுத்தவில்லை. தனியார் ஊடகங்களுக்கு பாரிய அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டிருந்தன. ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டார்கள். காணாமல் போனார்கள், இதனால் பலர் வெளிநாடுகளுக்குச் சென்றார்கள், சிலர் மெளனிக்கப்பட்டார்கள், சிலர் அடங்கிப் போனார்கள். இன்று முழு சமூகமும் அச்சமுமோ பயமோ இன்றி வாழ்கின்றது. யாரும் காணாமல் போவதில்லை. அச்சுறுத்தப்படுவதில்லை, கடத்தப்படுவதில்லை, கொலை செய்யப்படுவதில்லை, வெள்ளைவான்கள் கிடையாது, அச்சுறுத்தல்களோ அழுத்தங்களோ கிடையாது, முழு சமூகத்திலும் ஜனநாயகமும், சுதந்திரமும் பரப்பப்பட்டுள்ளன.

இந்த வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக நாட்டின் தேசிய பொருளாதாரம் பலப்படுத்தப்படுவதோடு பொருளாதார அபிவிருத்தியின் பயன்கள் நாட்டின் சகல பிரஜைகளையும் சென்றடையும் வகையில் செயற்றிட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. எமது நாட்டில் 43 வீதமானவர்கள் நாளாந்தம் 2 அமெரிக்க டொர்களையே சம்பாதிக்கப்படுகின்றனர். முழு நாட்டிலும் வறுமை காணப்படுகிறது. இந்த நிலைமையை மாற்றி சாதாரண மக்களுக்கு பொருளாதாரத்தின் பயன்கள் சென்றடைவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.

ஒவ்வொரு துறைக்குமான நிதி, நிதி ஒதுக்கீட்டுச் சட்டத்தின் ஊடாகவே ஒதுக்கப்படுகிறது. ஆனால், நிதியமைச்சரின் வரவு செலவுத் திட்ட உரையை அடிப்படையாக வைத்து ஒவ்வொருத்தருக்கும் நிதி ஒதுக்கப்பட்டது குறித்து சில எதிர்த்தரப்பு எம்.பிக்கள் விமர்சிக்கின்றனர். கல்வியமைச்சுக்கு இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்று கையளிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் பிரகாரம் நிதி ஒதுக்கீட்டுச் சட்டம் பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டால் அரசாங்கமும், அமைச்சரவையும் கலைக்கப்படும். அரசியலமைப்பை சமர்ப்பித்திருக்கிறார்கள். பசளை நிவாரணம், இலவச சீருடை என்பவற்றுக்கு வவுச்சர் முறையொன்றை அறிமுகம் செய்திருக்கிறோம். இந்த நிவாரணங்களை நிறுத்துவதற்கு அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்த முறையின் கீழ் இதன் பலன்கள் நேரடியாக விவசாயிகளையும் மாணவர்களையும் சென்றடையவிருக்கிறது. இதனூடாக கடந்த காலங்களைப் போன்று நிவாரணம் என்ற பெயரில் ‘கமிஷன்’ பெற எவருக்கும் இடமிருக்காது.

அடுத்த வருடம் 6.5 வீத பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்ப்பதோடு 2032 ஆம் ஆண்டாகும் போது உயர்ந்த வருமானம் பெறும் நாடாக நாட்டை முன்னேற்ற எதிர்பார்க்கின்றோம். நாட்டை முன்னேற்றுவதற்கே நாம் எம்மை அர்ப்பணிக்க வேண்டும். எவருக்கும் நாட்டைப் பின்னோக்கித் தள்ள இடமளிக்கப் போவதில்லை கடந்த காலத்தில் கடதாசித் துண்டுக்கு மாத்திரமே நாட்டின் பொருளாதார வளர்ச்சி மட்டுப்பட்டிருந்தது. அபிவிருத்தியின் பலன்கள் மக்களுக்குச் சென்றடைவதே எமது எதிர்பார்ப்பாகும்.

தனக்கு தனிப்பட்ட நிகழ்ச்சியில் எதுவும் கிடையாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாடு குறித்து சிந்தித்தே அவர் சகல நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார்.

ஐ.தே.கவும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் நாட்டுக்கே முன்னுரிமை வழங்கி வருகிறது. ஐ.தே.க. – நாட்டிற்காக’ இதுதான் எமது கட்சியின் தொனிப் பொருளாகும். கடந்த 20 வருடங்களாக எமது கட்சி எதிர்க் கட்சியிலிருந்து பல்வேறு அழுத்தங்களுக்கு முகங்கொடுத்தது. எமது அங்கத்தவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது. அவர்களுக்கு நியாயத்தை நிலைநாட்டும் அதேவேளை, ஏனைய அரசியல் கட்சி உறுப்பினர்களும் அநீதி ஏற்படாத வகையில் செயற்படுவது எமது எதிர்பார்ப்பாகும். புதிய அரசியல் கலாசாரமொன்றை உருவாக்குவதற்காக, ஜனாதிபதி தலைமையில் நாம் மேற்கொண்டு வரும் பயணத்துக்கு ஒத்துழைக்குமாறு கோருகிறேன். 2020 ஆம் ஆண்டு மீண்டும் பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தக் காலப் பகுதியில் நாம் எமது கட்சிகளை விட நாடு குறித்து சிந்தித்து செயற்பட வேண்டும். 2020 ல் எமது கட்சிகளை முன்னேற்றிய தலைவர்களாக அன்றி நாட்டை கட்டியெழுப்பிய தலைவர்க ளாகவே நாம் மக்கள் முன் செல்ல வேண்டும். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காக கைகோர்க்குமாறு பாராளுமன்றத்தில் உள்ள சகல கட்சிகளையும் கோருகின்றேன்.