புலம்பெயர் புலி அமைப்புகளின் தேவைகள் சரியாக நிறைவேற்றப்பட்டு வருவதனால் அரசாங்கத்தின் எந்தவொரு செயற்பாட்டையும் எதிர்க்காது பாராளுமன்றத்தில் வாய்மூடி மௌனமாக இருக்குமாறும் புலம்பெயர் புலி அமைப்புகள் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. புலம்பெயர் அமைப்புகளின் நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே சம்பந்தன் செயற்படுகின்றார் என்று மஹிந்த ஆதரவு அணியினர் குற்றம் சுமத்தினர்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும் மஹிந்த அணியின் முக்கியஸ்தருமான பந்துல குணவர்த்தன இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் நல்லாட்சி என்ற பெயரில் இந்த அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து விடயங்களும் சர்வாதிகாரமாகவே உள்ளன.
பாராளுமன்றத்தில் மக்களின் பிரதிநிதிகள் அனைவருக்கும் சம அந்தஸ்து உள்ளது. அதேபோல் அரசாங்கம் செய்யும் மோசடிகள், ஊழல் தொடர்பில் விமர்சிக்க அனைவருக்கும் சம உரிமை உள்ளது. ஆனால் இன்று அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சிக்கவோ எமது தரப்பு காரணங்களை முன்வைக்கவோ எமக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை. பிரதமர், சபை முதல்வர் மட்டுமல்லாது சபாநாயகரும் எம்மை கட்டுப்படுத்தும் வகையிலேயே செயற்படுகின்றார். ஆகவே இது ஜனநாயக நாட்டில் எமது உரிமைகளை மீறும் செயலாகும்.
பாராளுமன்றத்தில் எமக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அடக்குமுறை செயற்பாடுகள் தொடர்பில் சர்வதேச பாராளுமன்ற பிரிவில் நாம் முறையிடவுள்ளோம். இலங்கையில் ஜனநாயகம் பலமடைந்து சகலருக்கும் உரிமைகள் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் சர்வதேச தரப்பிடம் தெரிவித்து வருகின்றது.
ஆனால் உண்மையில் இலங்கையில் என்ன நடைபெறுகின்றது என்பது சர்வதேச நாடுகளுக்கு தெரியாது. ஆகவே இலங்கையில் எமக்கு எதிராக இடம்பெறும் அடக்குமுறைகளை நாம் வெளிப்படுத்தியாக வேண்டும்.
மேலும் அரசாங்கம் முன்வைத்துள்ள வரவு – செலவு திட்டமானது நாட்டை சீரழிக்கும் வகையில் அமைந்துள்ளது. அரச துறையை தனியார் மயப்படுத்தி நாட்டை முழுமையாக கொள்ளையடிக்கவே இந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது. அநாவசிய வரி அறவீடுகள், திறந்த பொருளாதார கொள்கையில் நாட்டை விற்கும் நடவடிக்கைகளை இவர்கள் மேற்கொள்கின்றனர்.
நாட்டில் மிகப்பெரிய பிரச்சினை தலைதூகியுள்ளது. கல்வியில் மிகப்பெரிய கொள்ளைகள் இடம்பெறுகின்றன.சூரியகல வாகனங்களை நாட்டில் பாவனைக்கு அனுமதித்து இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இந்த அரசாங்கம் மாறாக எரிபொருள் வாகனங்களின் வரியை விடவும் சூரியகல வாகனங்களுக்கு இரண்டுமடங்கு வரிவிதிப்பை செய்துள்ளது. கடந்த காலங்களில் இலங்கைக்கு பொருளாதார பாதுகாவலனாக இருந்த சீனாவை இந்த அரசாங்கம் புறம்தள்ளிவிட்டு நாட்டை பிரிக்கும் கூட்டணி நாடுகளுடன் கைகோர்த்து செயற்படுகின்றது. நாட்டில் முன்னெடுக்கப்பட்ட யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர உதவியதும், நாட்டில் அபிவிருத்திகளை முன்னெடுக்க உதவியதும் சீனாவே தவிர இப்போது கூட்டு சேர்ந்துள்ள கூட்டணியல்ல.
இந்த விடயங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிப்பார்க்ள என்று எதிர்பார்த்தபோதும் எதிர்கட்சியினர் வாய்மூடி செயற்படுகின்றனர். உண்மையில் இன்று எதிர்க்கட்சி ஒன்று எங்கு உள்ளது என்பது மக்கள் மத்தியில் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. மக்களின் பொருளாதார சுமை, நாடு எவ்வாறு பயணிக்கின்றது என்பது இவர்களுக்கு தெரியவில்லை. இவர்களுக்கு தெரிந்த எல்லாமே ஈழம் மட்டுமேயாகும்.
வரவு–செலவு திட்டத்தை எதிர்க்கக்கூடாதென்றும், பாராளுமன்றத்தில் வாய்மூடி இருக்குமாறும் இந்த அரசாங்கத்தின் அனைத்து செயற்பாடுகளையும் ஆதரிக்குமாறும் புலம்பெயர் புலி அமைப்புகள் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.
சர்வதேச மட்டதில் இயங்கிவரும் புலம்பெயர் புலிகள் அமைப்பின் பிரிவினைவாத செயற்பாடுகள் சரியாக இந்த அரசாங்கத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எமது அரசாங்கத்தில் தடை விதிக்கப்பட்டு அனுமதி மறுக்கப்பட்டிருந்த புலம்பெயர் தமிழ் அமைப்புகள் அனைத்தின் தடைகளும் இந்த அரசாங்கத்தில் நீக்கப்பட்டுள்ளது. திறந்த பொருளாதார கொள்கை என்ற திட்டத்தில் புலிகளின் அனைத்து வியாபாரத்தையும் நாட்டில் முன்னெடுக்க இடமளிக்கப்பட்டுள்ளது. ஆகவே இவ்வாறு நாட்டை பிரிக்கும் சகல உதவிகளையும் இந்த அரசாங்கம் செய்துவருவதனால் அதை தடுக்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படக் கூடாது என புலிகளினால் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆகவே இப்போது நாம் மட்டுமே நாட்டை சரியான பாதையில் முன்னெடுக்க ஒன்றிணைந்துள்ளோம். அதை தடுக்கும் வகையில் பாராளுமன்றத்தில் எமக்கு எதிரான அழுத்தங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஆனால் நாம் பாராளுமன்றத்தில் மட்டுமே எமது போராட்டத்தை முன்னெடுக்காது நாட்டு மக்களுடன் ஒன்றினைந்து எமது போராட்டத்தை முன்னெடுக்க தாயாராக உள்ளோம் என அவர் தெரிவித்தார்.