பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பருவகால மாற்றம் தொடர்பான விழிப்புணர்வு மாநாடு நடக்கிறது. உலக அளவில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு மற்றும் நாடுகள் இடையிலான உறவு ஆகியன குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஒபாமா, ஜப்பான், சீனா, இந்தியா பிரதமர்கள், இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உள்பட 140-க்கும் மேற்பட்ட தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
மோடியின் இந்த பாரிஸ் பயணத்தின் போது ஒபாமா உட்பட முக்கிய தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். இந்திய நேரப்படி இன்று மதியம் பிரான்ஸ் அதிபர் ஹாலண்டேயை சந்தித்து பேசினார் மோடி. இதனை அடுத்து பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபை சந்தித்து பேச்சு நடத்திவருகிறார். அதிகாரபூர்வமற்ற வகையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. இதே வேளை இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவையும் பிரதமர் சந்தித்துள்ளார் .
எவ்வித முன்நிபந்தனையும் இல்லாமல் இந்தியாவுடன் பேச்சு நடத்த தயார் என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அறிவித்துள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.