பொது கணக்குகள் குழு, பொதுநிறுவனங்கள் குழு என்பவற்றுக்கு உறுப்பினர்கள் நியமனத்தில் பொது எதிர்க் கட்சிக்கு அநீதி இழைக்கப் பட்டுள்ளதாக டளஸ் அழகப்பெரும எம்.பி.
தெரிவித்தார். 24 பேரைக் கொண்ட மேற்படி குழுவில் ஐ. ம. சு. மு. சார்பில் 2 உறுப்பினர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். இழைக் கப்பட்டுள்ள அநீதி தொடர்பில் சபாநாயகர் மற்றும் பிரதமர் திங்களன்று தகுந்த பதிலை அளிப்பார்கள் என தான் எதிர்பார்ப்பதாகவும் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 16 தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்களில் 6 பேர் மேற்படி குழுவில் அங்கம் வகிக்கின்றனர். ஜே. பி. பி. எம்.பிக்கள் 6 பேரில் 4 பேர் குழுவில் அங்கம் வகிக்கின்றனர். ஆனால் பொது எதிர்க் கட்சியில் 51 பேர் இருந்தும் 2 பேர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொது எதிர்க் கட்சி மாற்றந்தாய் மனப்பான்மையுடன் பார்க்கப்பட்டுள்ளது. ஜே. வி. பி. யிலிருந்தோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்தோ நியமிக்கப்பட்டுள்ளவர்கள் பற்றி எமக்கு பிரச்சினை இல்லை. அவர்கள் திறமையானர்கள் தான் ஆனால் எமக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி பற்றித் தான் பேசுகிறோம்.
இது தொடர்பாக ஜனாதிபதியுடனும் பேசினோம். அவரும் அதனை ஏற்றுக் கொண்டுள்ளார். யார் யாரிடம் கூற வேண்டுமோ எல்லோரிடமும் கூறிவிட்டோம் என்றார்.
இதேவேளை சபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்திருந்த உறுப்பினர் லக்கி ஜயவர்தனா டலஸ் அழகப்பெரும முன்வைத்த பிரச்சினையை சபாநாயகரின் கவனத்துக்கு கொண்டு வருவதாக கூறினார்.
சபாநாயகர் மட்டுமல்ல பிரதமரும் இது தொடர்பாக சரியான பதிலை திங்கட்கிழமை வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறேன் என்றும் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.