காத்தான்குடி (தொடர்-4)
++++++++++++++++++++
(Mohamed Nizous)
புருசன்மார் குளித்த பின்னால்அரிசி மா ரொட்டி உண்டு
தீர்வை சந்தை சென்று
கோர்வை மீன் வாங்குவார்
ஆறேழு மீன்கள் சேர்த்து
சீராக ஈர்க்கிலில் கோர்த்து
இரண்டு சதத்துக்கு வாங்குவார்
இதிலும் குறைக்க ஏங்குவார்
அம்மியில் கொச்சிக்காய் அரைத்து
அண்டாவில் தண்ணீர் நிறைத்து
பண்ட பாத்திரமெல்லாம்
நன்றாய் சாம்பலில் தேய்த்து
கொண்டு வந்த மீனை
துண்டு துண்டாய் வெட்டி
பொரியல் பாலானம் உறைப்பென-பெண்கள்
பெரிய சமையல் செய்வார்
ஆயிரதெண்ணூற்றி ஐம்பதுகளில்
நோய்க்கு வைத்தியம் என்பதில்
பேய்க்கு பார்த்தலும் உண்டு.
வாய்க்குள் மந்திரம் ஓதி
ஏய்க்கும் முறையும் இருந்தது.
நாடியைப் பிடித்துப் பார்த்து
நாடி வந்த நோயினை
ஓட விரட்டும் திறனுடன்
கூடிய பரிசாரியும் இருந்தனர்.
பரவலாய் இருந்த பாதைகள்
பாதம் புதையும் ஒழுங்கைகள்.
கிறவல் பரப்பிய சாலையும்
குறைவாய் ஆங்காங்கிருந்தது.
கரத்தையும் காலையும் நம்பியே
வரத்தும் போக்கும் இருந்தது.
கரத்தையில் போவார் ஊரிலே
பெருத்த பணக்கார ஆட்கள்.
வருத்தம் வாதை வந்தால்
மருத்துவ வண்டி கரத்தையே.
நடையிலே வெய்யிலில் செல்வார்.
இடையிலே நிழலிலே நிற்பார்.
போடிமார் மக்கள் சைக்கிளில்
ஓடுவதை கூடிப் பார்ப்பார்.
கல்லடியில் உள்ள பாலம்
கட்டப் படாத காலம்
வள்ளமும் தோணியும் வழியே
செல்ல வேண்டும் வெளியே.
கொழும்புக்கு செல்வதென்றால்
கூடி மெளலூது ஓதி
புளியந்தீவு சென்று
புகையிரதம் மூலம் செல்வார்
ஊருக்கு மீண்டும் வந்தபின்
ஆரத்தி எடுப்பார் சொந்தங்கள்
(ஊர் ஊரும்…..)
பி.கு.- எனது தாய் மாமாவும் பிரபல நாவல் ஆசிரியருமான ஜுனைதா ஷெரீப் அவர்களின் சின்ன மரைக்கார் பெரிய மரைக்கார் நாவலை அடிப்படையாகக் கொண்டு இது எழுதப்படுகிறது.