வடக்கு, கிழக்கிலுள்ள மக்கள் விரக்தியடைந்துள்ளார்கள் : எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் !

வடக்கு, கிழக்கிலுள்ள மக்கள் விரக்தி யடைந்துள்ளார்கள் என்ற தெளிவான செய்தி பாடசாலை மாணவனின் தற்கொலை மூலம் வெளிக்கொணரப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இவ்வாறான சம்பவங்கள் மேலும் தொடராமல் இருப்பதற்கு அரசாங்கம் கூட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினார்.

ரயில் முன்னால் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட செந்துரனின் பெற்றோருக்கும், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தமிழ் மக்கள் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர், மக்கள் எந்தளவுக்கு விரக்தியில் உள்ளனர் என்பது இந்த சம்பவத்தின் மூலம் வெளியாகியிருப்பதாகவும் தெரிவித்தார்.

Sambanthan_CI

வரவுசெலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான ஐந்தாவது நாள் விவாதத்தை ஆரம்பித்துவைத்து உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு கூறினார். விரக்தி காரணமாகவே குறித்த மாணவன் கவலைக்குரிய தீர்மானத்துக்குச் சென்றுள்ளார். இதுபோன்றே வடக்கு, கிழக்கில் உள்ள மக்கள் விரக்தியில் உள்ளனர். இதனை அரசாங்கம் இலகுவாக எடுத்துக்கொள்ளக் கூடாது. இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெறுவதை அனுமதிக்க முடியாது. இவற்றைத் தடுப்பதற்கு அரசாங்கம் கூட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

இதேவேளை, வடக்கு கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை விருத்தி செய்வது குறித்து அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்துவதுடன், இதுவிடயத்துக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். பிரிக்கப்படாத இலங்கைக்குள் சமத்துவமாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்ற ஜனநாயகக் கோரிக்கையையே தமிழ் மக்கள் முன்வைத்துள்ளனர். அடிப்படைவாத சக்திகளை கடந்த காலத் தேர்தல்களில் அவர்கள் நிராகரித்துள்ளனர். இவ்வாறான நிலையில் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்களை அரசாங்கம் முன்வைக்க வேண்டும்.

கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு,, கிழக்கு மக்களின் வாழ்வாதாரம் தொடர்பில் அக்கறையின்றி தமது சொந்த நிகழ்ச்சி நிரலில் செயற்பட்டுவந்தது. எனினும் இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து ஏற்படுத்தியிருக்கும் அரசாங்கம் இந்த மக்களின் தேவைகளுக்கு முன்னரிமை அளித்து திட்டங்களை வகுத்து நடவடிக்கை எடுப்பது மிகவும் முக்கியமானது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், வீண்விரயம் மற்றும் ஊழல்களைத் தடுத்து நிறுத்துவது தொடர்பில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்துவதுடன் இதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது மிகவும் அவசியமானது. அண்மையில் அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கையை வெளியிட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஊழல்களை முறியடிப்பதற்கு எவ்வாறான வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்கப்போவது என்பதைத் தெளிவாகக் கூறியிருக்கவில்லை. இந்த நிலையில் அரசாங்கம் ஊழலை முறியடிப்பதற்காக சட்டங்களில் மாற்றங்களைக் கொண்டுவந்தாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.