எமது கட்சி ஒருபோதும் அங்கீகரிப்பதில்லை : முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் ஹனீபா மதனி !

IMG_2565_Fotor

  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அக்கரைப்பற்றுக் காரியாலயத்தில் சமூகப் பாதுகாப்பில் இளைஞர்களின் வகிபங்கு எனும் தலையங்கத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் அமைப்பாளர் எஸ்.எல்.எம். ஹனீபா மதனி அவர்களிடம் கலந்து கொண்டவர்களால் எழுப்பப்பட்ட ‘அண்மைக்காலமாக அக்கரைப்பற்றின் பாடசாலைக்கல்வியில் உங்கள் கட்சிக்காரர்கள் அப்பட்டமாக தலையீடு செய்து அதிபர்களையும், ஆசிரியர்களையும் அச்சுறுத்துகின்றனரே இது உங்கள் கட்சியின் கொள்கையோடு சம்பந்தப்பட்டதா?’ என்ற கேள்விக்கு விடையளிக்கும் போது ஹனீபா மதனி பின்வருமாறு தெரிவித்தார்.

 

கல்விக் கூடங்கள், பாடசாலைகள், அரச காரியாலயங்கள் என்பவற்றில் தலையீடு செய்து, அவற்றை முரண்பாடுகளைப் பேசுகின்ற சிக்கலான இடங்களாக மாற்றுவதை எமது கட்சி ஒருபோதும் அங்கீகரிப்பதில்லை. இதுவிடயத்தில் கட்சியின் தலைவர், செயலாளர், தவிசாளர் அனைவரும் ஒரே கருத்தையே கொண்டுள்ளனர். மிக நீண்ட காலமாக இந்த நல்ல அம்சத்தை எமது கட்சி பேணி வருகின்ற உண்மையை நாங்கள் மட்டுமின்றி இந்த நாடே நன்கறியும். அண்மைக்காலமாக கிழக்கு மாகாண சபையின் முதல் அமைச்சர் இவ்விடயத்தை ஊடகங்கள் வாயிலாக பகிரங்கமாகவே அறிவித்து வருகின்றார். அண்மைய அவரது ஊடக அறிக்கையொன்றில் பாடசாலைகளில் அரசியல் செய்ய முற்படுகின்ற அரசியல்வாதிகளை நோக்கிட  இந்த அசிங்கமான அரசியல் கலாசாரத்தை நான் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை. அதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பேன், என்று மிகக் காட்டமாக பேசியிருந்தார்.

 

நாட்டில் நல்லாட்சியை உருவாக்கி ஆட்சி பீடம் அமர்ந்திருக்கின்ற அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேனா அவர்களும் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹாவும் இவ்விடயத்தில் மிகக் கடுமையாகவிருக்கின்றனர்.

 

இந்த உண்மைகளையும். யதார்த்தத்தையும் புரியாது இங்கு அக்கரைப்பற்றிலுள்ள கல்வி அதிகாரிகள் தவறுதலாக நடக்க முற்படுவார்களாயின் அவர்களை நாட்டில் தற்போது மலர்ந்திருக்கும் நல்லாட்சிக்கான அரசும் அதனை உருவாக்குவதில் துணைநின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் எந்தக் காரணம் கொண்டும் மன்னிக்காது. இந்த உண்மையை மிகத் தெளிவாகவும், உறுதியாகவும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்.

IMG_2566_Fotor

மேலும் உங்கள் கட்சி கடந்த காலங்களில் அபிவிருத்தியில் ஏன் கவனம் செலுத்தவில்லை என்ற இன்னுமொருவரின் வினாவுக்கு அமைப்பாளர் பின்வருமாறு பதிலளித்தார்.

 

2004ம் ஆண்டிலிருந்து 2010 வரை எமது கட்சி எதிர்க்கட்சியிலிருந்து குரல் கொடுத்து வந்ததும் 2010 முதல் ஆளுங்கட்சிக்குள் எதிர்க்கட்சியாகப் பார்க்கப்பட்டு வந்ததும் இந்த நாடறிந்த உண்மையாகும். இக்கட்சியை எமது அக்கரைப்பற்று மண்ணிலிருந்து நேசித்து ஆதரவு வழங்கியவர்களுக்கு எந்தவித அபிவிருத்தியையும் தொழில் வாய்ப்புக்களையும் வழங்கும் வாய்ப்பு அதற்குக் கிட்டியிருக்கவில்லை. பன்முகப்படுத்தப்பட்ட அபிவிருத்தி நிதியிலிருந்து கூட இங்கு எதனையும் செய்வதற்கு இங்கிருந்த அரசியல்வாதிகள் அனுமதிக்கும் மனோபாவத்துடன் இருக்கவும் இல்லை. மாற்றுக் கருத்துள்ள அரசியல்வாதிகளின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் ஏதாவது நல்லது நடந்து விட்டால் மக்கள் மனம் மாறி அது எமது அரசியல் இருப்புக்கு ஆபத்தமாக வந்து விடுமோ என்று அஞ்சி மாற்றுக்கருத்துள்ள அரசியல்வாதிகளின் அபிவிருத்திகள் இங்கு உள்நுளையாதவாறு நடந்து கொண்டார்கள், ஓர் சந்தர்ப்பத்தில் ஆயிஷா பாலிகா மஹா வித்தியாலயத்தின் வீதியை நிர்மாணிப்பதற்காக மாற்றுக்கருத்துள்ள ஒரு அரசியல்வாதியினால் ஆயத்தப்பட்டு அதற்கென கொண்டு இறக்கப்பட்ட சீமெந்து, கல், மண் எல்லாம் இங்குள்ள அரசியல்வாதிகளால் தடைபோடப்பட்டு மீண்டும் அவை லொறிகளில் ஏற்றப்பட்ட கசப்பான உண்மைகளை நாம் தெரிந்து வைத்திருக்கின்றோம்.

 

ஆனால் இப்போது நல்லாட்சி மலர்ந்திருக்கின்றது. ஆட்சியில் மு.கா. பங்காளியாகவிருக்கின்றது. குறிப்பாக அம்பாரை மாவட்டத்தில் அரசியல் அதிகாரம் மு.காவின் கைகளுக்கே வந்திருக்கிறது. இதனால் இனி அபிவிருத்தி வேலைகள் இங்கு தொடர்ந்து நடைபெறப் போகின்றது.

 

100 நாள் நல்லாட்சியில் சுகாதார இராஜாங்க அமைச்சராகவிருந்த கட்சியின் செயலாளர் கௌரவ ஹசன் அலி அவர்களினால் தொடங்கப்பட்டு தற்போது சுகாதார உதவி அமைச்சராக நியமிக்கப்பட்டள்ள கௌரவ பைசல்காசிம் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட பலகோடிகளைக் கொண்ட அபிவிருத்தி வேலைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதனால் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை அபிவிருத்திகளை உடனடியாக ஆரம்பிக்கும் கட்டத்தில் இருக்கிறது.

 

அண்மையில் அக்கரைப்பற்றுக்கு விஜயம் செய்த கௌரவ உதவி விளையாட்டுத்துறை அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் அக்கரைப்பற்றின் பொது விளையாட்டு மைதானத்தை மீளமைப்பதற்கு பலகோடி ரூபாய்களை ஒதுக்கீடு செய்யும் வகையில் மதிப்பீடுகளைக் கோரியிருக்கின்றார்.

 

இந்த மண்ணில் நீண்ட நாட்களுக்கு முன் நட்டி, நீரூற்றி வளர்க்கப்பட்ட மரம் பெரிதாகி பூத்துக் காய்த்து கனி கொடுக்க ஆரம்பித்திருக்கிறது. இக்கனிகள் அமைப்பாளராக இருந்து இக்கட்சியின் கொடியை தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்த ஹனீபா மதனிக்கு மட்டும் சொந்தமானதல்ல. மாறாக இம்மண்ணில் கட்டவிழ்த்துப்பட்டிருந்த வன்முறைகளைக்கு முகம் கொடுத்து பல இழப்புக்களை சந்தித்து, சொத்துக்களையும் மானமரியாதைகளையும், ஏன் உயிர்களையும் இழந்து நிற்கின்ற அத்தனை பேருக்கும் சமர்ப்பணமானதாகும். இந்த உண்மையையும் இங்கு நாம் மிகத்தெளிவாக கூறுவது எமது தார்மிகக்கடமையாகும். என்று கூறினார். இக்கூட்டத்தில் அரசியல் துறை ஆசிரியர் முஸ்னத் சரிபுத்தீன் உட்பட இன்னும் பலரும் உரையாற்றினர்.