ஐ நா மனித உரிமைகள் தீர்மானத்தின்படி இலங்கை நடந்துகொள்ள இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என மலேசிய எதிர்கட்சித் தமிழ் உறுப்பினர்கள் நரேந்திர மோடியிடம் அழுத்தம் கொடுத்துள்ளனர்.
ஆசியான் மாநாட்டில் பங்கேற்கவும், இந்திய-மலேசிய இருதரப்பு உறவுகள் தொடர்பில் பேச்சுக்களை நடத்தவும் இந்தியப் பிரதமர் கோலாலம்பூர் சென்றுள்ளார்.
அங்கு இந்திய வம்சாவளி மக்கள் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றும்போது, அவர்கள் பிரச்சினை குறித்து திங்கள் கிழமை மலேசியப் பிரதமர் நஜீப் ரசாக்குடன் பேசவுள்ளதாக தெரிவித்தார் என அந்தக் கூட்டத்துக்கு சென்றிருந்த ஹிண்ட்ராஃப் அமைப்பைச் சேர்ந்த விஸ்வலிங்கம் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
இதன் பின்னர் மலேசியாவின் எதிர்கட்சித் தலைவர்கள் இந்தியப் பிரதமரைச் சந்தித்துள்ளனர்.
அந்தச் சந்திப்பில் இலங்கையில் மனித உரிமை நிலைமை மேம்பட இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் எனத் தாங்கள் கோரியதாக அவரை சந்தித்த குழுவில் இருந்த ஜனநாயக செயல் கட்சியின் துணைத் தலைவர் குலசேகரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
அண்மையில் ஐ நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை இதயசுத்தியுடன் நிறைவேற்ற இந்தியா அழுத்தம் கொடுத்து அதை கண்கானிக்க வேண்டும் எனத் தாங்கள் கோரியதாகவும் அவர் கூறினார்.
இலங்கையில் நீண்டகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளின் விடுதலை, மலேசியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 12 இந்தியர்களின் நிலை ஆகியவை குறித்தும் மோடியுடன் விவாதிக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார்.
மலேசியாவிலுள்ள இந்திய வம்சாவளி மக்களின் பிரச்சினைகள் குறித்த தகவல்களை எழுத்து மூலமாக இந்தியத் தூதரிடம் அளிக்குமாறும், அதன் மீது தான் நடவடிக்கை எடுப்பதாகவும் இந்தியப் பிரதமர் தெரிவித்தார் எனவும் கூறுகிறார் மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் குலசேகரன்.
நன்றி – BBC