பிட்டும், தேங்காய்ப்பூவும் உவமைத் தொடரை பொது மொழித் தலைமைகள் உயிரூட்ட வேண்டும் !

சுஐப் எம். காசிம்

 
நல்லிணக்க அரசாங்கத்தில் சகல சிறுபான்மையினருக்கும் நன்மை கிடைக்கும் என்பதில் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் நம்பிக்கையுடனுள்ளன. குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள தமிழர்களும் முஸ்லிம்களும் தமது நீண்டகால துயரங்கள், காயங்கள், சவால்களெல்லாம் இந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் தீர்க்கப்பட்டுவிடும் என்று எதிர்பார்ப்பதில் நியாயங்களும் உண்டு. ஏனெனில் நல்லாட்சியைத் தோற்றுவித்ததில் இம்மக்களுக்கே அதிக உரித்துண்டு. நீண்டகாலப் போரினால் நினைவிழந்து, வாழ்விழந்து, உறவினர்களை இழந்து நிற்கும் இங்குள்ள சிறுபான்மைச் சமூகங்கள் இனி இழக்க எதுவுமில்லாது எஞ்சிய உறவினர்களோடு தமது சொந்த இடங்களில் இணைந்து வாழ விருப்பமுடையோராயுள்ளனர்.

 

 எனவே இம்மகக்ளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அசரியல் தலைமைகள் தங்களுக்கிடையிலான அரசியல் போட்டிகளை விடுத்து மக்களின் மீள் குடியேற்றத்தில் அக்கறைப்பட வேண்டும். தமிழர்களும், முஸ்லிம்களும் பிட்டும், தேங்காய்ப்பூவும் போன்று ஒற்றுமையாய் வாழ்ந்த காலத்தை துரதிருஷ்டவசமாக இன்றைய இளைய தலைமுறையினருக்கு காணக்கிடைக்கவில்லை. பயங்கரவாதம், இனவாதம், பிரிவினைவாதம் இந்நாட்டில் கோலோச்சியிருந்ததால் சுமார் முப்பது வருடங்கள் அந்த இனிய யுகம் எம்மைவிட்டும் மறைந்திருந்தது. எனவே இந்த ஒற்றுமை யுகத்தை எமது இளைய தலைமுறையினருக்கு மீணடும் காண்பிக்கும் பொறுப்பு தமிழ், முஸ்லிம் தலைமைகளுக்குண்டு.

rauff hakeem samnathan rishad

 

 வடமாகாணத்தில் இன்றுள்ள அவசரத்தேவை மீள் குடியேற்றமே. இங்குள்ள தமிழர்களும், முஸ்லிம்களும் ஏதாவதொருவகையில், வடிவத்தில் போரினால் இருப்பிடங்களை இழந்துள்ளதே வரலாறு. இதற்கு யார் காரணமென்பதைத் தேடி இரு சமூகங்களும் முரண்படுவதைவிட இனிமேல் இவ்வாறான நிகழ்வுகள் நிகழாமலிருப்பதற்கான சமூகப்பிணைப்பு, புரிந்துணர்வு, நல்லிணக்கத்துடன் மீள்குடியேற்றங்கள் ஆரம்பிக்கப்படுவதே நல்லாட்சியின் ஆயுள் நீடிக்க வழியேற்படுத்தும். எமக்கிடையேயான பிளவுகள் வலுப்படின் வடக்கும், கிழக்கும் தமிழ் பேசுவோரின் தாயகம் என்கின்ற அரசியல் சித்தாந்தம் அர்த்தம் இழக்கும் ஆபத்தையேற்படுத்தலாம். இது தமிழ் மொழி பேசுகின்ற பொது (ஒரு) மொழிச்சமூகத்தின் அரசியல் பலத்தைத் தகர்க்கக் காத்திருக்கும் பேரினவாதிகளுக்கு வாய்ப்பாகிப்போய்விடும்.

 

 ஏற்கனவே எமது தமிழ் மொழித்தாயகம் வடக்கும், கிழக்குமென வேறாக்கப்பட்டிருக்கும் துர்ப்பாக்கியமான நிலையில் தமிழர்களும், முஸ்லிம்களும் மீள்குடியேற்ற விடயத்தில் மோதிக்கொள்வது மேலும் எமது தாயகத்தை நீண்டகாலத்துக்குப் பிரித்து பலவீனப்படுத்த பேரினவாதிகளுக்கு உதவி விடும்.இவ்வளவு பாரதூரமான விளைவுகளைப் புரிந்து கொள்ளாது எமது தலைமைகள் பயணிக்கமாட்டாதென்பதே எனது நம்பிக்கை. மூன்று இலட்சம் தமிழர்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ள நிலையில் புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களையும் அவர்களது இடத்தில் மீளக்குடியேற்றுவதில் தவறில்லையென்ற நியாயம் தமிழ்த் தலைமைகளிடமிருந்து இது வரைக்கும் உறுதியாக ஒலிக்கவில்லை.

 

 இது ஏன் என்பதுதான் முஸ்லிம்களின் நெருடலான வினா. புலிகளின் வலுக்கட்டாயத்தில் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு முஸ்லிம்களுக்கெதிரான அநீதிகளை கண்டும் காணாமலிருந்ததைப்பற்றி நிலைமையின் காரணத்தைக் கருத்திற் கொண்டு முஸ்லிம்கள் அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால் விடுதலைப்புலிகளின் வாடையே இல்லாதுள்ள இன்றைய நல்லிணக்க சூழலிலும் புலிகளின் சிந்தனையில் ஒரு சில தமிழ் அரசியல் தலைவர்கள் செயற்படுவது வேதனையளிப்பது மாத்திரமன்றி பொது மொழி தாயகக்கோட்பாட்டையும் சிதைக்கின்றதென்பதே முஸ்லிம்களுக்குள்ள இரடடிப்பு வேதனையாகும். எனவே வடமாகாண தமிழ் தலைமைகள் வடக்கு முஸ்லிம்களின ;மீள்குடியேற்ற விடயத்தில் வடக்கு முஸ்லிம் தலைமையுடன் பேசினால் பயனுள்ளதாகயிருக்கும். இதைவிடுத்து வேறு புலங்களைத் தளமாகக் கொண்டு இயங்கும் முஸ்லிம் தலைமைகளுடன் பேசுவதை காலங்கடத்தும் விடயமாகவே வடமாகாண முஸ்லிம்கள் கருதுகின்றனர்.

 

 அமைச்சர் ரிஷாட்டின் அண்மைய பாராளுமன்ற உரையிலிருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பில் வைத்திருந்த கௌரவத்தையும், நம்பிக்கையையும் முஸ்லிம்கள் இழக்கத் தொடங்கியுள்ளனர் என்பது புலனாகின்றது. அவர் பாராளுமன்றில் சுமார் முப்பது நிமிடங்கள் வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் தான் அனுபவித்த கஷ்டங்கள், வேதனைகள், அவமானங்கள், அகதி முஸ்லிம்களின் அவலங்கள் தொடர்பில் விலாவாரியாக எடுத்துரைத்து தனது கவலையை வெளியிட்டிருந்தார். மனச்சாட்சியுள்ள தமிழ் தலைவர்களுக்கு இவரின் உரை நியாயத்தைத் தொட்டிருக்காமலிருக்க முடியாது.

 

 வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக எங்காவது, என்றைக்காவது சர்வதேச மட்டத்தில் தமிழ் தலைவர்கள் குரல் எழுப்பவில்லை, முஸ்லிம்களை மீள வடக்கிற்கு வருமாறு இதய சுத்தியுடன் அழைக்கவில்லையென்பதும் அமைச்சர் ரிஷாட்டின் வடமாகாண முஸ்லிம்கள் சார்பான கவலை. இதற்குப்பதிலளிக்க வேண்டிய கட்டாயத்திற்குள்ளான தமிழ் தேசிய கூட்டமைப்பு முஸ்லிம்களுக்கு தங்களால் வழங்கப்பட்ட மாகாணசபை போனஸ் பதவிகள், பாராளுமன்ற தேசியப்;பட்டியல்களை காரணம் காட்டி நியாயம் கற்பிக்கிறது.

 

 முஸ்லிம்களிடமிருந்து அந்நியப்பட்டோருக்கு இவ்வாறான பதவிகளை அலங்காரங்களுக்காக வழங்குவதை விடுத்து முஸ்;லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி வடமாகாண சபையில் ஒரு தீர்pமானத்தை நிறைவேற்றியிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். இனிவரும் காலங்களில் இவற்றை விவாதத்திற்கு எடுக்கவும் நேரமில்லாமல் போய்விடுமளவிற்கு அரசில்களம் சூடுபிடிக்கவுள்ளது.எ னவே தமிழ் தலைமையும், வடபுல முஸ்லிம் தலைமையும் வட மாகாண மக்களின் குறிப்பாக முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தில் ஒருமித்த கருத்துடன் செயற்படுவதே பொது மொழி (ஒரு) சமூகக் கோட்பாட்டையும், பிட்டும் தேங்காய்ப்பூவும் என்கின்ற தமிழ் முஸ்லிம்களுக்கான ஒற்றுமை உவமைத் தொடரையும் உயிரூட்டும் நடவடிக்கையாக அமையுமென்பது திண்ணம் என்பதே எனது பணிவான கருத்தாகும்.