காத்தான்குடி (தொடர்-2)

காத்தான்குடி (தொடர்-2)
+++++++++++++++++++

பத்தொன்பதாம் நூற்றாண்டின்
பாதி காலம் கழிந்த நிலை
சுத்தமான காற்றும்
சுகாதார வாழ்வும்
அஸ்தமிக்கும் போதே
அடங்கி விடும் ஊரு.

image1

குடிசைகள் உள்ளே
குப்பி லாம்பு எரியும்
கொஞ்சம் வசதி என்றால்
கூடத்தில் அரிக்கன் தெரியும்.
இருட்டு ஏறு முன்னே
இருப்பதை உண்டு விட்டு
சுருட்டி வைத்த பாயை
உருட்டி விரித்து
களிமண் தரையில்
கண்ணயர்ந்து தூங்குவார்.
சற்று வசதியுள்ளோர்
சப்பிரமஞ்சக் கட்டிலிலே
துப்பரவான கற்பன் பாயில்
தூங்குவார் துணையுடன்.

தூரத்தில் நரி கத்தும்
தொடர்ந்து நாய் ஊளையிடும்
சாரல் மழைகொட்டும்
சாமத்தில் பேய் கத்தும்.

பாங்கு ஒலி கேட்காது
பறவைகளின் ஒலிகளிலே
தங்களாவே எழுந்து
தண்ணீரில் முகங் கழுக
கிணற்றடிக்கு சென்று
கிடுகு வேலிக்குள்
திலாந்தில் நீர் அள்ளி
தென்னை மரம் பின்னால்
உட்கார்ந்து எழுந்து
ஒளூவும் எடுத்து
நிலா வெளிச்சத்தில்
தொழ பள்ளி செல்வார்.

(ஊர் ஊரும்….)

(Kattankudy Mohamed Nizous)