சுனாமியின் பின்னர் உலகமே இலங்கையை திரும்பி பார்த்திருந்தும் இந்த கல்முனை சந்தையை நீங்கள் பார்க்காமல் இருப்பதன் மர்மம் என்ன ? இலங்கை வாழ் முஸ்லிம்களின் தலைநகர்,முகவேற்றிலை என்றெல்லாம் வர்ணிக்கப்படும் இந்த மாநகரின் நிலைகளில் இதுவும் ஒன்றே….
தற்போதைய பிரதியமைச்சர் சகோதரர் ஹரீஸ்,முன்னாள் செனட்டர் மசூர் மௌலானா, சகோதரர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப்,சிரேஷ்ட சட்டத்தரணி சகோதரர் நிசாம் காரியப்பர் என்று மாறி மாறி முஸ்லிம் காங்கிரசின் முக்கியஸ்தர்கள் தலைமை ஏற்க மேயர் கதிரையை சூடாக்கியத்தை விட செய்தது என்ன?
இந்த கட்டிடத்தை அமைத்துதந்ததன் பின்னர் இந்த கட்டிடத்தின் மேல் நீங்கள் செய்த உருப்படியான விஸ்தரிப்பு என்ன? மழைகாலம் வந்தால் இந்த சந்தையின் நிலை என்ன? கட்சி,இனம்,மதம்,மொழி ,பிரதேசம் என்கின்ற வேற்றுமைகள் மறந்து இந்த சந்தைக்கு வியாபாரிகளும், கொள்வனவாளர்களும் வேறு மாவட்டங்களில் இருந்தும் இங்கு வருவது உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.ஏன் எனில் இந்த சந்தை எங்கு இருக்கிறது என்று நீங்கள் கேட்டாலும் ஆச்சரியப்படமாட்டோம்.
வரியை மட்டும் வரிந்துகொண்டு அறவிட முடிந்த உங்களால்,வாகனத்தரிப்பிட வாடகையை அறவிட முடிந்த உங்களால்,அப்பாவி ஏழைகளின் வயிறில் அடித்து கடைகளை கொள்ளையடிக்க முடிந்த உங்களால் இதனை செய்ய முடியாது போன மர்மம் என்ன?
அக்கரைப்பற்றில் அதாவுல்லாஹ்வால் முடியுமாக இருந்தால் காத்தான்குடியில் ஹிஸ்புல்லாஹ்வால் முடியும் என்றால் ஏன் உங்களால் வேறு ஒருவன் கட்டிய கட்டடங்களை திறப்பதை தவிர உங்களால் இதுபோன்ற கட்டிடங்களை கட்டி திறக்க முடியாமல் உள்ளது?
இந்த சந்தை பிரச்சினை இன்று,நேற்று ஆரம்பித்ததில்லை. இந்த சந்தை பிரச்சினையை தீர்க்க பல வழிகள் உள்ளது . இந்த சந்தையை அதி நவீன சந்தையாக மாற்றும் திறன் கொண்ட இளம் சந்ததியின் கையில் மாநகர சபையை கையளித்து விட்டு உங்கள் சொந்த வேலையை செய்ய வெளியேறுங்கள்.என கல்முனை மாநகர சபை ஆட்சியாளர்களை தயவாக வேண்டி கொள்கிறேன்.
நகரை மையமாக கொண்ட அமைச்சை கைவசம் வைத்திருக்கும் உங்கள் கட்சியினால் இதனை செய்ய முடியாது போன காரணம் என்ன? கையாளாகாத தன்மையா? இல்லை அரசிடம் மக்கள் பிரச்சினையை கொண்டு செல்வதில் சிக்கலா?
தயவு செய்து எதிர்வரும் தேர்தல் பிரச்சார மேடைகளில் இந்த சந்தையை நவீன சந்தையாக மாற்ற போகிறோம் என கூறி மக்களிடம் வாக்கு பிச்சைக்கு வந்து விடாதீர்கள் !! ஏனனில் அது உங்களால் முடியாத ஒன்று. இந்த ஏழை எளிய மக்களின் வயிற்றை கழுவ உதவிக்கொண்டிருக்கும் இந்த சந்தையை உடனடியாக புனரமைக்க முன்வாருங்கள்.அல்லது வைக்கோல் பட்டறையில் இருக்கும் அந்த விலங்கை போல செயற்படாமல் ஒதுங்குங்கள். எங்கள் ஊரை அபிவிருத்தி செய்ய எங்களால் முடியும் என கர்வத்துடன் தெரிவித்து வைக்க விரும்புகிறேன்.என தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் தேசிய அமைப்பாளரும் அல் – மீஸான் பௌண்டசன் தலைவருமான அல் – ஹாஜ் ஹுதா உமர் கல்முனை மாநகர சபை ஆட்சியாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.