இளைஞர் பாராளமன்ற பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான ஆசன ஒதுக்கீட்டில் அநீதி என்கிறார் கல்முனை மாநகர பிரதி முதல்வர் மஜீத்

 

 

-எம்.வை.அமீர் –

கடந்த 07.11.2015 இல் நடைபெற்ற இளைஞர் பாராளமன்ற தேர்தல் முதலாவது தடவையாக தேர்தல் தொகுதி அடிப்படையில் நடைபெற்றது. இத்தேர்தல் முடிவுகள் இனங்களுக்கிடையே முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளது. என்று கல்முனை மாநகரசபையின் பிரதி முதல்வர் ஏ.எல்.அப்துல் மஜீத் தெரிவித்தார்.

majeed

 

மட்டக்களப்பு, பொத்துவில் ஆகிய தொகுதிகள் இரட்டை அங்கத்தவர் தொகுதியாக அமையப்பெற்றிருப்பது நாட்டு மக்கள் அனைவரும் அறிந்த விடயமாகும். தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகள் தலா ஒவ்வொருவர் தெரிவு செய்யப்படும் வகையிலேயே பொத்துவில், மட்டக்களப்பு தொகுதிகள் அமையப்பெற்றுள்ளன. இவ்விடயம் சம்பந்தமாக இளைஞர் விவகார அமைச்சும், தேசிய இளைஞர் சேவை மன்றமும் கவனத்திற் கொள்ளாதது பாரிய தவறாகும் என்றும்  இத்தவறினால் மட்டக்களப்பு தொகுதியில் கிடைக்க வேண்டிய முஸ்லிம் பிரதிநிதித்துவமும், பொத்துவில் தொகுதியில் தமிழ் மக்களுக்கு கிடைக்கவேண்டிய பிரதிநிதித்துவமும் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. என்றும் தெரிவித்தார்.

 

இவ்விடயமானது இன்று ஊடகங்களில் பேசுபொருளாகவும், கடும் விமர்சனத்திற்கும் உள்ளாக்கப்பட்டு வருகின்றது. இளைஞர் விவகார அமைச்சும், இளைஞர் சேவை மன்றமும் இதுபோன்ற தவறுகள் எதிர்காலத்தில் நிகழா வண்ணம் இருப்பதை உறுதிசெய்ய உடனடி நடவடிக்கையில் ஈடுபட முன்வர வேண்டுமென கேட்டுக்கொள்வதுடன் இளைஞர் பாராளமன்ற தேர்தல் முறையையும் மீளாய்வு செய்தல் வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

 

தேர்தலில் இளைஞர் கழக உறுப்பினர்களுக்கு மாத்திரம் போட்டியிடுவதற்கும், வாக்களிப்பதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ள முறையானது மீள்பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஏனெனில், நடைமுறையிலுள்ள தேர்தல் முறையானது பிரதேச செயலக அதிகாரிகளின் செல்வாக்குக்குற்படுத்தப்பட்டு வருவதாக பரவலான விசனங்களும், குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

எனவே, நீதியானதும், பக்கசாற்பற்றதும், ஜனநாயகத்தன்மை வாய்ந்ததுமான தேர்தலொன்றுக்கு செல்ல வேண்டுமானால் நாட்டிலுள்ள அனைத்து இளைஞர்களும் தேர்தலில் போட்டியிடுவதற்கும், வாக்களிப்பதற்குமான சந்தர்ப்பம்வழங்குகின்றதான தேர்தல் முறையொன்றை அறிமுகம் செய்ய இளைஞர் விவகார அமைச்சும், தேசிய இளைஞர் சேவை மன்றமும் முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.