நஸீரின் நாட்டம் நிறைவேறாததோடு தவத்தின் தவமும் கலைக்கப்பட்டது !

SLMC N THAVAM_Fotor

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக இருந்த மன்சூர் பாராளுமன்றம் தெரிவாகியதைத் தொடர்ந்து அப் பதவி வெற்றிடமாக்கப்பட்டது.மு.காவிற்கு பதவி ஒன்று கிடைத்துவிட்டால் அதனை பறித்துண்ண பட்சிகள் பல நான்,நீ என போட்டி போட்டுக் கொண்டு கட்சித் தலைமையினை நோக்கி படை எடுப்பது வழமை.அது போன்றே அப் பதவியினை யாருக்கு வழங்குவது? எனத் தீர்மானிப்பதில் தடுமாறுவதும் எந்தளவு காலம் தாழ்த்தி அதனை வழங்க முடியுமோ அவ்வளவு காலம் தாழ்த்தி அதனை வழங்குவதும் மு.கா தலைமையின் வழமையான விடயங்களாகும்.அப் பதவியினை உரியவருக்கு பகிர்ந்தளிக்கும் வரை மு.கா உறுப்பினர்களிடையே பாரிய கருத்துப் போர் இடம்பெற்றுக் கொண்டிருக்கும்.இதன் விளைவால் மு.கா உறுப்பினர்களிடையே மனக் கசப்புக்கள் வலுக்கும்.ஒரு குடையின் கீழ் நிழல் பெற வேண்டிய மு.கா உறுப்பினர்கள் பல கூறுகளாக மனதளவில் பிரிந்து கொள்வார்கள்.இக் குறித்த அமைச்சினை நோக்கிய படை எடுப்பில் அண்மையில் கிழக்கு மாகாண சபைக்கு புதிதாக தெரிவான மாஹிர்,அன்வர்,தவம் ஆகியோரினை பிரதானமானவர்களாக குறிப்பிடலாம்.

மன்சூர் வகித்த மாகாண சுகாதார அமைச்சானது மன்சூர் என்ற தனி நபருக்கு வழங்கப்பட்ட ஒரு பதவியல்ல.அது சம்மாந்துறைத் தொகுதிக்கு வழங்கப்பட்ட ஒரு பதவியாகும்.அந் நேரத்தில் சம்மாந்துறைத் தொகுதியில் மன்சூரின் இடத்தில் இன்னுமொருவர் இருந்தாலும் அப் பதவி அவருக்கு வழங்கப்பட்டிருக்கும்.தற்போது தான் சம்மாந்துறைத் தொகுதியினை பிரதிநிதித்துவப்படுத்தி இருப்பதால் தனக்கு இப் பதவியினைத் தர வேண்டும் என தனது பக்க நியாயத்தினை மாஹிர் முன் வைத்திருந்தார்.மன்சூரிற்கு வழங்கப்பட்ட மாகாண அமைச்சுப் பதவி சம்மாந்துறைத் தொகுதிக்கு வழங்கப்பட்ட ஒரு பதவி என்பதனை மறுப்பதற்கில்லை.அந் நேரத்தில் சம்மாந்துறைத் தொகுதியில் மு.கா சார்பாக மாகாண சபை பிரதிநிதித்தவம் மாத்திரமே காணப்பட்டது.இதன் காரணமாக சம்மாந்துறைத் தொகுதியினை பலப்படுத்த வேண்டிய ஒரு தேவை மு.காவிற்கு இருந்தது.மேலும்,கடந்த மாகாண சபை தேர்தலில் மு.காவின் வெற்றியில் சம்மாந்துறைத் தொகுதி மக்களுக்கு .கணிசமான பங்குண்டு.இவ்வாறான சிந்தனைகளின் விளைவினாலேயே மன்சூரிற்கு அமைச்சு வழங்கப்பட்டது.

தற்போது சம்மாந்துறைத் தொகுதியின் நிலைமை முற்று முழுதாக மாற்றம் பெற்றுள்ளது.சம்மாந்துறைத் தொகுதியில் ஒரு பாராளுமன்ற உறுப்பினர்,ஒரு மாகாண சபை உறுப்பினர் உள்ளனர்.இதில் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் சம்மாந்துறைத் தொகுதி பெற்ற பாராளுமன்ற உறுப்புரிமைக்கு சம்மாந்துறைத் தொகுதி உரிமை கோரும் அளவு வாக்களிக்கவில்லை.சம்மாந்துறைத் தொகுதி பெற்ற பாராளுமன்ற உறுப்புரிமை கூட மு.காவினால் உவர்ந்தளிக்கப்பட்ட பதவிகளில் ஒன்றாகும்.சம்மாந்துறைத் தொகுதி மக்கள் தங்களது கணிசான வாக்களித்து மன்சூரினை பாராளுமன்றம் செல்ல வைத்திருந்தால்,இக் குறித்த அமைச்சினை தங்களுக்கே தர வேண்டும் என உரிமை கோருவதில் சிறுதளவு நியாயம் உள்ளதாக குறிப்பிடலாம்.கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மாஹிர் அவர்கள் மு.காவின் வெற்றியில் பெருதும் கரிசனை காட்டாமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.வேளாண்மை செய்யவும் வேண்டும் சேற்றில் கால் வைக்கவும் கூடாது என்றால் எப்படி? சம்மாந்துறைத் தொகுதிக்கு அமைச்சினை வழங்க வேண்டும் எனச் சிந்திக்கும் அளவு சம்மாந்துறைத் தொகுதியின் நிலை இல்லை.

thavam naseer

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற பிரதிநிதித்துவ இழப்பு மு.காவினை கதி கலங்கச் செய்ததில் பிரதான ஒரு விடயமாகும்.திருகோணமலையில் மு.கா தனது ஒரு பிரதிநிதித்துவத்தினை உறுதி செய்திருந்தால் தேசியப்பட்டியல் பகிர்வு இந்தளவு சவால் மிக்கதாக தோற்றம் பெற்றிருக்காது.தற்போது திருகோணமலை மாவட்டத்திற்கு பொருத்தமான  அரசியல் அதிகாரம் மாகாண அமைச்சா? அல்லது பாராளுமன்ற உறுப்புரிமையா? என ஆராயும் போது பாராளுமன்ற உறுப்புரிமையே என்ற பதிலினைப் பெறலாம்.தேசியப் பட்டியலினையும் வழங்கி மாகாண அமைச்சினையும் வழங்கும் அளவு மு.காவிடம் பதவிகள் ஒன்றும் கொட்டிக் கிடக்கவில்லை.தேசியப்பட்டியலில் திருகோணமலை முதன்மைப் படுத்தப்பட்டமையே மாகாண அமைச்சு விடயத்தில் புறக்கணிக்கப்பட்டமைக்கான காரணங்களில் ஒன்றாக தற்போது கருதப்படுகிறது.மு.காவின் திருகோணமலை பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இழக்கப்படும் போது மு.கா திருகோணமலையினை அரசியல் அதிகாரம் கொண்டு பலப்படுத்த வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகும்.இதன் போது தனக்கு மாகாண அமைச்சு வழங்கப்படும் எனக் கணக்குப் போட்ட மாகாண சபை உறுப்பினர் அன்வர் கடந்த தேர்தலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக்கின் வெற்றிக்கு உளப்பூர்வமாக உழைக்கவில்லை என்ற குற்றச் சாட்டு மு.கா ஆதரவாளர்களிடையே நிலவுவதும் குறிப்பிடத்தக்கது.வேலிக்கு வைத்த முள் காலில் தைத்து விட்டதோ? இது வரை அறியக் கிடைக்கப்பெற்ற மு.கா தரப்பு தகவல்களின் படி மு.காவின் தேசியப்பட்டியலில் திருகோணமலையே முதல் இடத்தில் உள்ளதாக அறிய முடிகிறது.

கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலினைத் தொடர்ந்து மஹிந்த அணியினருடன் மு.கா ஒப்பந்த அடிப்படையில் ஆட்சி அமைத்த போது கிடைக்கபெற்ற மாகாண அமைச்சினை பெற்றுக் கொள்வதில் தவம் அதிகம் முனைப்புக் காட்டினார்.ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன்  பிற்பாடு கிடைக்கப்பெற்ற முதலமைச்சினை நோக்கி காய் நகர்த்தினார்.அதன் பிற்பாடு கிடைக்கப்பெற்ற அமைச்சினை நோக்கி பாய்ந்து பார்த்தார்.தற்போது ஏற்பட்ட மன்சூரின் வெற்றிடத்திற்கு தான் அமைச்சராக நியமிக்கப்படுவேன் என முழுமையாக நம்பி இருந்தார்.எனினும்,இவரின் அனைத்து முயற்சிகளும்,நம்பிக்கைகளும் தோல்வியிலேயே முடிந்தன.கடந்த பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு அக்கரைப்பற்று சென்ற அமைச்சர் ஹக்கீம் அங்கு குழுமி இருந்த மக்களினைப் பார்த்து உணர்ச்சி வசப்பட்டாரோ? தெரியவில்லை தேர்தலிற்கு பின்பு அக்கரைப்பற்றுக்கு மு.காவினால் ஒரு பதவி வழங்கப்படும் என்ற வாக்குறுதியினை வழங்கியிருந்தார்.அக்கரைப்பற்றுக்கு வழங்கச் சாத்தியமான பதவி இவ் அமைச்சு மாத்திரமே! எனினும்,இம் முறையும் அத் திராட்சைப் பழம் தவத்தின் வாய்க்கு கிட்டவில்லை.

தவத்திற்கு அமைச்சுப் பதவி வழங்கப்படும் என்பதும் மு.கா தலைவர் வழங்கிய கடந்த கால வாக்குறுதிகளில் ஒன்றாகவே பார்க்க வேண்டும்.அட்டாளைச்சேனைக்கு தேசியப் பட்டியல் கிடைக்காது என அறிந்த அக் கணம் தொடக்கம் இற்றைவரை மு.கா ஆதரவாளர்கள் அதிகமானோரின் வாய்களில் இருந்து அமைச்சர் ஹக்கீமிற்கு எதிரான சொல் அம்புகள் வெளி வந்த வண்ணம் உள்ளன.தவத்திற்கு அமைச்சு கிடைக்கவில்லை என்பதற்காய் யாரும் அமைச்சர் ஹக்கீமினை விமர்சித்ததாக அறிய முடியவில்லை.இதிலிருந்து தவத்தின் மீது மு.கா ஆதரவாளர்களின் அதிருப்தியினையும் அறிந்து கொள்ளலாம்.தவத்தின் அரசியல் குலமும்,கோத்திரமும் தே.கா அல்லவா? கட்சி மாறினாலும் வரலாறுகளும்,குலமும்,கோத்திரமும் மாறவா போகிறது? 

அட்டாளைச்சேனைக்கு மு.கா தேசியப்பட்டியலினை வழங்காவிட்டால்  நஸீரிற்கே மாகாண அமைச்சுப் பதவி வழங்கப்படும்.ஹசன் அலிக்கு தேசியப் வழங்கப்பட்டால் அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் வழங்கப்படுவதற்கான சர்ந்தர்ப்பம் அரிதானது.இந்த நிறுவலினை தவம் நன்கே அறிவார்.அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் வழங்கப்பட வேண்டும் என்பதில் அலாதிப் பிரியத்துடன் செயற்பட்டார்.எத்தனை கோபம் ஏற்பட்டாலும் யாரும் அஷ்ரபின் மறு உருவமாக பார்க்கப்படும் மு.காவின் செயலாளர் நாயகத்தினை அவமதிக்கும் வண்ணம் நேரடியாக எக் கருத்தும்  தெரிவிப்பதில்லை.இவ் விடயத்தில் மு.காவின்  செயலாளர் நாயகத்திற்கு தேசியப்பட்டியல் வழங்கப்பட்டால் மு.கா அழிவடையும் எனக் குறிப்பிட்டு அவரினை அவமதித்திருந்தார்.அம்பாறை மாவட்டத்தில் மு.காவின் அரசியல் அதிகாரம் மிகவும் குன்றி காணப்பட்ட போது கூட இந்த ஹசன் அலிக்கே மு.கா தேசியப்பட்டியலினை வழங்கி இருந்தது.அன்று அழியாத மு.காவா இன்று அழியப்போகிறது?

தேசியப்பட்டியல் குறித்த நபருக்கு வழங்கப்பட வேண்டும் எனக் கருத்துத் தெரிவிப்பதில் தவறில்லை.அதற்கான தனது பக்க நியாயங்களினை விளக்கிக் கூறி அமைச்சர் ஹக்கீமிற்கு அழுத்தம் பிரயோகித்திருக்கலாம்.ஒரு குறித்த நபரினை சுட்டிக் காட்டி இவருக்கு வழங்கப்பட்டால் கட்சி அழிவடையும் என பகிரங்கமாக குறிப்பிடுவது ஒரு கட்சியின் ஒழுக்க நெறியினை மீறாது செயற்படும் ஒரு மாகாண சபை உறுப்பினருக்கு பொருந்தாத ஒரு செயலாகும்.அதிலும் மு.காவின் செயலாளர் நாயகம் ஹசன் அலி தேசியப்பட்டியலின் மீது கண் வைத்திருக்கும் இச் சந்தர்ப்பத்தில் கூறுவது மிகவும் தவறானதாகும்.இவரின் பேச்சு மு.காவின் எதிரிகளுக்கு வசை பாட இலகு வழியினையும்,பிடியினையும் வழங்கியுள்ளது.

தவத்தின் இது தொடர்பான அறிக்கையில் கடந்த முறை காத்தான்குடி முபீனிக்கு தேசியப்பட்டியல் வழங்காமல் மு.காவின் தவிசாளர் பசீர் செகுதாவூதிற்கு வழங்கியதால் தான் மட்டக்களப்பில் கட்சி அழிந்ததாக குறிப்பிட்டுள்ளார்.இது மு.கா தலைவரின் கடந்த கால வியூகங்களினை அவமதிக்கும் ஒரு செயலாகும்.இதனை விட மு.கா தலைவரினை ஒருவரால் அவமதிக்கவும் முடியாது.2012ம் ஆண்டு காலப்பகுதியில் மு.காவினுள் உள் நுழைந்த தவம் அதற்கு முன்பு இடம்பெற்ற மு.காவின் செயற்பாட்டினை விமர்சிக்க தகுதி இல்லை என்று தான் கூற வேண்டும்.தற்போதும் தவம் கூறியதற்கு முரணாகவே அமைச்சர் ஹக்கீமும் செயற்படப் போகிறார்.தவத்தின் கருத்தின் அடிப்படையில் நோக்கும் போது அமைச்சர் ஹக்கீமின் இச் செயல் கட்சியினை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லப் போகிறது.கடந்த முறை முபீனே தேசியப்பட்டியல் வழங்கத் தகுதியானவர் எனக் மு.காவின் தவிசாளரினையும் வம்புக்கு இழுத்துள்ளார்.இவர் மு.காவின் தலைவர்,செயலாளர்,தவிசாளர் என அனைவரினையும் அவமதித்துள்ளார்.எருமை மாட்டின் மீது மழை பொழியும் போது அது சிறு அசைவினையாவது காட்டும்.அச் சிறு அசைவினைப் போன்றதொரு அசைவினைக் கூட மு.கா காட்டியதாக அறிய முடியவில்லை.

தவம் தனக்கு அமைச்சைத் தரக் கோருவதற்கான பிரதான காரணம் கடந்த முறை இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தலில் முதல் விருப்பு வாக்கைப் பெற்றமையாகும்.விருப்பு வாக்கில் இவர் பின்னிலையில் இருந்திருந்தால் மாகாண அமைச்சின் பக்கம் தனது தலையினை திருப்பியும் இருக்க மாட்டார்.2012 ம் ஆண்டிற்கு முன்பு தவம் எனும் நாமம் அக்கரைப்பற்றுக்குள் மாத்திரம் ஒலித்ததே தவிர வேறு எங்கும் ஒலிக்கவில்லை என்பதே உண்மை.சூரியனின் ஒளியில் சந்திரன் மின்னுவதைப் போன்றே அதாவுல்லாஹ்வின் ஒளியே அக்கரைப்பற்றில் தவத்தின் முகத்தை பிரகாசிக்கச் செய்தது.அந் நேரத்தில் மு.காவின் அழிக்க முடியாத எதிரியாக அதாவுல்லாஹ் காணப்பட்டார்.தவிசாளராக இருந்த தவம் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற மா நாகர சபைத் தேர்தலில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டமை அதாவுல்லாஹ்வின் ஒளியே தவத்தின் முகத்தினை பிராகாசிக்கச் செய்துள்ளது என்பதை அறிய போதுமான ஆதாரமாகும். 

அதாவுல்லாஹ்வை எவ்வாறு அழிப்பது? என மு.கா சிந்தித்த போது,அதாவுல்லாஹ்வின் அரசியல் கூட்டில் இராஜ தந்திரம் பயின்ற தவம் எனும் காகம் கொத்தி விரசப்பட்டது.இறக்கைகள் உடைக்கப்பட்டு போகும் வழி தெரியாது திரு திருவென முழித்துக் கொண்டிருந்த இக் காகம் அங்கும் இங்கும் சுற்றி மு.காவினுள் தஞ்சம் அடைந்தது.இவரினை வெற்றி பெறச் செய்ய மு.கா தலைவர் அதீத சிரத்தை எடுத்தார்.இவர் தவிசாளராக இருந்த அக்கரைப்பற்றில் கடந்த மாகாண சபைத் தேர்தலில் யாருமே களமிறங்காத போதும் இவர் மிகக் குறைவான அளவான வாக்கினையே பெற்றிருந்தார்.இவ் விடயம் இவருக்கென்று சொல்லுமளவு சொந்த வாக்கு வங்கி இல்லை என்பதை சுட்டிக் காட்டுகிறது.ஒரு மேயராக இயலாதிருந்த தவத்தினை  மு.கா மாகாண சபை உறுப்பினராகியுள்ளது.இதற்கு தவம் குறைந்தது இப் பதவியில் நீடித்திருக்கும் நாள் வரையாவது  நன்றியுடன் செயற்பட வேண்டும்.உதவி செய்யாவிட்டாலும் குறைந்தது உபத்திரம் செய்யாமல் இருக்கலாம் அல்லாவா?அமைச்சினை கேட்கும் அளவு இவருக்கு எத் தகுதியும் இல்லை என்பதே உண்மை.இவ் மாகாண அமைச்சுப் பதவிக்காக மு.காவின் சிரேஷ்ட உறுப்பினர்களினை அவமதிப்பதி உண்ட வீட்டிற்கு குந்தகம் விளைவிப்பது போன்றாகும்.மேலும்,இன்று எழும்ப இயலாத அளவு அதாவுல்லாஹ் வலிமை இழந்துள்ளார்.மு.கவில் அதாவுல்லாஹ்வினை உள் வாங்குவதற்கான ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்கின்றன.இச் சந்தர்ப்பத்தில் தவத்திற்கு அமைச்சு வழங்குவது மு.காவின் வளர்ச்சியில் பெரிய பங்களிப்பையும் செய்யப்போவதில்லை.

தேசியப் பட்டியலில் ஒன்றினை அட்டாளைச்சேனைக்கு வழங்க வேண்டும் என்ற கருத்திற்கு மு.கா வட்டத்தில் ஒரு குறித்த ஆதரவு உள்ளது.அட்டாளைச்சேனைக்கு வழங்க வேண்டாம் எனக் கூறுவோர் அனைவரும் அட்டாளைச்சேனைக்கு வழங்கும் மாற்றுத் தீர்வாக மாகாண அமைச்சு இருப்பதால்,வேறு எது வித சிறு சிந்தனைக்களுமின்றி நஸீர் அமைச்சை தனதாக்கிக் கொண்டார்.அமைச்சர் ஹக்கீமின் நல்ல காலமோ தெரியவில்லை இச் சந்தர்ப்பத்தில் ஜெமீல் மு.காவில் இல்லை.அவர் மு.காவில் இருந்திருந்தால் இவ் மாகாண அமைச்சு எது வித போட்டிகளும் இன்றி அவரின் கைகளில் தவழ்ந்திருக்கும் என்று தான் கூற வேண்டும்.அட்டாளைச்சேனை மக்களின் யானைப் பசிக்கு சோளப் பொரியினைக் கூட வழங்கி பசியாற்ற முடியாத ஒரு இக் கட்டான சூழ் நிலைக்கு அமைச்சர் ஹக்கீம் தள்ளப்பட்டிருப்பார்.

அட்டாளைச்சேனைக்கு மாகாண அமைச்சினை வழங்கும் போது உதுமாலெப்பையினால் இழக்கப்பட்ட அரசியல் அதிகாரத்தினை மு.கா நிரப்பியுள்ளதாகவே பார்க்க வேண்டும்.ஏதோ? கிடைக்காத பதவி கிடைத்துவிட்டதாக மு.கா ஆதரவாளர்கள் தம்பட்டம் அடிப்பதில் நியாயமில்லை.மு.காவினை அட்டாளைச்சேனை மக்கள் பூரணமாக ஆதரித்த போதும் அது மு.காவிடம் இருந்து பெற்றுக்கொண்ட அரசியல் அதிகாரங்களை விட தே.கா மூலம் பெற்றுக் கொண்ட அரசியல் அதிகாரங்கள்  அதிகமாகும்.அதாவுல்லாஹ் தனது வாக்கில் உதுமாலெப்பையினை மாகாண சபை உறுப்பினராக்கியது மாத்திரமல்லாது ஒரு மாகாண அமைச்சராக்கியும் வைத்திருந்தார்.மு.கா கிழக்கு மாகாண சபையில் பலம் பெற்றதன் காரணமாகவே உதுமாலெப்பை தனது அமைச்சினை இழக்க வேண்டிய ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டார்.மு.காவினை பலமாக்கியத்தில் அட்டாளைச்சேனைக்கு குறித்த பங்குண்டு.இச் சந்தர்ப்பத்தில் அட்டாளைச்சேனைக்கு குறைந்தது மாகாண அமைச்சை வழங்குவது மு.காவிற்கு கடமையும் கூட.எனினும்,அம்பாறையில் மு.காவின் பதவிக்கள் மிகைத்து காணப்படுவதே அட்டாளைச்சேனைக்கு அரசியல் அதிகாரம் வழங்கப்படும் போது கேள்வி எழு காரணமாகிறது.இது மு.கா தலைவரின் அரசியல் அதிகாரங்களினை பகிர்ந்தளித்தலில் உள்ள குறைபாடாகும்.

மு.கா தேசியப் பட்டியல் வழங்கச் சிந்தித்ததில் அதீத சவாலினை ஏற்படுத்திய அட்டாளைச்சேனைக்கு மாகாண அமைச்சினை வழங்கி ஓரளவு மு.கா ஆதரவாலர்களினை அமைச்சர் ஹக்கீம் திருப்தி செய்துள்ளார்.அட்டாளைச்சேனையின் முக்கிய புள்ளிகள் தேசியப் பட்டியல் என முனு முனுத்துக் கொண்டே உள்ளனர்.தேசியப் பட்டியலினை பேருக்காவது அட்டாளைச்சேனை மக்களினை நுகர்திடச் செய்தால் தான் இனி அமைச்சர் ஹக்கீமின் கதைகள் அட்டாளைச்சேனையில் எடுபடும்.அட்டாளைச்சேனையில் மு.காவிற்கு சமனாக கம்பெடுத்து ஆட யாரும் இல்லை என்ற காரணத்தினால் இது மு.காவிற்கு பாரிய எதிர் விளைவுகளை ஏற்படுத்த வில்லை.இது பற்றி கருத்து வெளியிட்டுள்ள நஸீர் “மு.காவின் மாகாண அமைச்சு பறி போகும் நிலையில் இருந்ததால் தான் தன்னை அமைச்சர் ஹக்கீம் மாகாண அமைச்சை ஏற்குமாறு கூறினார்” என கருத்துத் தெரிவித்துள்ளார்.கிழக்கு மாகாண சபையில் நஸீர் மாத்திரம் உறுப்பினரல்ல.தற்போதைய கிழக்கு மாகாண அமைச்சர் நஸீர் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் ஆகிய இருவரும் தவிர்ந்து தற்போது மு.காவிடம் ஆறு  மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளனர்.மு.காவின் மாகாண அமைச்சினைப் பாதுகாக்க நஸீர் தனது தேசியப்பட்டியலினைத் தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை.ஏனைய ஆறு பேரில் ஒருவர் அப் பதவியினை ஏற்றாலும் அப் பதவியினை மு.காவினால் பாதுகாக்க முடிந்திருக்கும்.தற்போது மு.காவிற்கு ஏற்பட்டுள்ள சூழ் நிலை ஒரு தலைவர்,மக்கள் பிரதிநிதிகள் முகம் கொடுக்கக் கூடிய ஒரு இக்கட்டான சூழ் நிலை என்பதை மறுப்பதற்கு இல்லை.எனினும்,மக்களினை ஏமாற்றி அதனை சமாளிக்க விளைவது ஒரு மக்கள் பிரதிநிதிக்கு அழகல்ல.

தற்போது தேசியப்பட்டியலினை தௌபீக்கிற்கு வழங்க மு.கா தலைமை முடிவு செய்துள்ளது.எதிர் வரும் மாகாண சபைத் தேர்தலின் போது தௌபீக் தனது தேசியப்பட்டியலினை இராஜினாமா செய்து மாகாண சபைத் தேர்தலில் களமிறங்குவார்.அத் தேசியப்பட்டியல் நஸீரிற்கு வழங்கப்படும் என்ற பேச்சு மாகாண சுகாதார அமைச்சராக நஸீர் பதவி ஏற்றதன் பிற்பாடு மு.கா நெருங்கிய வட்டாரத்தில் சிலாகிக்கப்பட்டதை அவதானிக்க முடிந்தது..கடந்த சனிக்கிழமை (31-10-2015) சாய்ந்தமருதில் இடம்பெற்ற இளைஞர் மா நாட்டில் உரையாற்றிய அமைச்சர் ஹக்கீம்,நஸீரின் சுகாதார அமைச்சுக்கான பதவிக் காலம் நிறைவுற்றதும் அட்டாளைச்சேனைக்கு தேசியப் பட்டியல் வழங்கப்படும் எனக் கூறியுள்ளதானது மேலும் இக் கருத்திற்கு வலுச் சேர்க்கும் வண்ணம் உள்ளது.

நஸீர் வகிக்கும் சுகாதார அமைச்சின் பதவிக் காலமானது கிழக்கு மாகாண சபை கலைக்கப்படும் போதே நிறைவுறும்.குறித்த வருடத்தின் பின்னர் நஸீரிற்கு தேசியப்பட்டியல் வழங்கப்படும் என அமைச்சர் ஹக்கீம் குறிப்பிடாது மாகாண சபையின் காலத்தினை எல்லையாக்கி உள்ளார்.இது குறித்த தேசியப்பட்டியல் வழங்கப்படும் உறுப்பினர் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் களமிறங்குவார் என்பதை மறைமுகமாக கூறுகிறது.சில வேளை ஹசன் அலி,பசீர் சேகு தாவூத் போன்ற சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவரினை இவ் விளையாட்டில் இணைத்து பின்னர் முதலமைச்சராக்கும் திட்டத்தினையும் அமைச்சர் ஹக்கீம் வகுத்திருக்கலாம்.எனினும்,தற்போதைய நிலமைகளினை நன்கு அவதானிக்கும் போது மு.காவினால் தற்போதைய முதலமைச்சரினை அவ்வளவு இலகுவில் புறக்கணிக்கவும் முடியாது.ஹசன் அலி,பசீர் சேகு தாவூத் போன்ற சிரேஷ்ட உறுப்பினர்களின் தகுதிக்கு ஏற்ப அவர்களினை வைத்து சிந்திக்கும் போது சாதாரண ஒரு மாகாண உறுப்பினர்ப் பதவியினையோ அல்லது அமைச்சினையோ ஏற்று இருப்பவர்களும் அல்ல.இக் கோணத்தில் சிந்திக்கும் போது திருகோணமலை தொவ்பீக் அத் தேசியப்பட்டியல் மூலம் நியமிக்கப்படுவார் என்பதை அறிந்து கொள்ளலாம்.இவரிற்கு மதிப்பளிக்கும் பொருட்டு மு.காவிற்கு அமைச்சு கிடைக்கும் பட்சத்தில் தௌபீக் முதன்மைப்படுத்தப்படலாம்.இப்படி மீண்டும் நிகழ்ந்தால் அடுத்த முறையும் தவத்திற்கு ஆப்பு தான்!

வாக்குறுதி மீறல் என்பது ஒரு முஸ்லிமைப் பொறுத்தமட்டில் சாதரண ஒரு விடயமல்ல.தேசியப்பட்டியல் என்பது தேர்தலின் பிற்பாடு தோற்றம் பெறும் நிலைமையினைப் பார்த்து பகிர்ந்தளிக்க வேண்டிய ஒன்றாகும்.அவ்வாறே பகிர்ந்தளிக்கவும் சிந்திக்கப்படுகிறது.வாக்குக்காக வார்த்தைகளினை வெளியே விட்டு தங்கள் மறுமை வாழ்வை வீணாக்கிக் கொள்ளக் கூடாது.தேசியப்பட்டியல் பகிர்வில் மு.கா,அ.இ.ம.கா ஆகிய முஸ்லிம் கட்சிகளின் இரு தலைவர்களும் தேர்தலிற்கு முன்பு தாங்கள் அளித்த வாக்குறுதிகளினை நிறைவேற்றத் தவறிவிட்டார்கள்.இது இஸ்லாமிய கலாச்சாரத்திற்கு இழுக்கை ஏற்படுத்தும் விடயங்களாகும்.தேர்தலின் பிற்பாடு என்ன நடக்கும்? என்பதை யூகித்தே குறித்த வாக்குறுதிகள் இரு கட்சித் தலைவர்களினாலும் வழங்கப்பட்டன.எனினும்,இவர்கள் நினைத்தது போன்று கடந்த தேர்தலில் இவர்களது கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறாமையே இவர்கள் வாக்குறுதி மீற பிரதான காரணமாகும்.நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் இறைவன் எதற்கு? எதிர்வரும் காலங்களிலாவது கடந்த வந்த பாதையினை அசை போட்டு பார்ப்பதன் மூலம் கற்றுக் கொண்ட பாடங்களினை மனதில் நிறுத்தி செயற்பட வேண்டும்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்

சம்மாந்துறை.