(video) அஜந்த மென்டிசின் சிறப்பான துடுப்பாட்டத்தால் இறுதி நேரத்தில் வென்ற இலங்கை !

இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் முதலாவது போட்டியில், இலங்கை அணி வெற்றிபெற்றுக் கொண்டது. மிகவும் இறுக்கமான போட்டியாக இப்போட்டி அமைந்திருந்த போதிலும், இறுதி நேரத்தில் இலங்கை வெற்றிபெற்றிருந்தது. 

INWISMENDISWIN1(1)

மழை காரணமாகத் தாமதித்துத் தொடங்கிய இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடியிருந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 14.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 40 ஓட்டங்களுடன் காணப்படும் போது மழை குறுக்கிட்டதால், போட்டி 26 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாறியது. அவ்வணி, 26 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 159 ஓட்டங்களைப் பெற்றது. அன்ட்ரே ரசல் 41 (24), டெரன் பிராவோ 38 (58), ஜேஸன் ஹோல்டர் 26 (13) ஆகியோர் சிறப்பான ஆடியிருந்தனர்.
பந்துவீச்சில், சுரங்க லக்மால் 5 ஓவர்களில் 15 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அஜந்த மென்டிஸ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய போதிலும், 4 ஓவர்களில் 46 ஓட்டங்களை விட்டுக் கொடுத்திருந்தார். டக் வேர்த் லூயிஸ் முறையில் 26 ஓவர்களில் 163 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடியிருந்த இலங்கை, முதலாவது விக்கெட்டுக்காக 4.5 ஓவர்களில் 46 ஓட்டங்களைப் பெற்றதோடு, ஒரு கட்டத்தில் 2 விக்கெட்டுகளை இழந்து 103 ஓட்டங்களுடன் பலமான நிலையில் காணப்பட்டது.

 

ஆனால், விக்கெட்டுகள் தொடர்ச்சியாக இழக்கப்பட, 7 விக்கெட்டுகளை இழந்து 133 ஓட்டங்கள் என்ற நிலைக்கு வந்தது. இறுதியில், 9ஆவது விக்கெட் இழக்கப்படும் போது, 20 பந்துகளில் 9 ஓட்டங்கள் பெறப்பட வேண்டியிருந்தது. அந்நிலைமை மாறி, 8 பந்துகளில் 5 ஓட்டங்கள் பெறப்பட வேண்டியிருந்த போது, ஆறு ஓட்டங்களை விளாசிய மென்டிஸ், இலங்கைக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்ததை அறிந்திருக்கவில்லை.

 

மாறாக, அடுத்த பந்தை எதிர்கொள்வதற்காகத் தயாராகிக் கொண்டிருந்தார். மறுமுனையில் இருந்த சுரங்க லக்மாலால் ஞாபகமூட்டப்படவே, அணி வெற்றிபெற்றதை மென்டிஸ் உணர்ந்தார். துடுப்பாட்டத்தில் திலகரட்ண டில்ஷான் 59 (32), அஜந்த மென்டிஸ் ஆ.இ 21 (20) ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில், சுனில் நரைன் 3, கிறெய்க் பிறெத்வெய்ட், ஜொனதன் கார்ட்டர் இருவரும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இப்போட்டியின் நாயகனாக, திலகரட்ண டில்ஷான் தெரிவானார்.