ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சரவையின் உறுப்பினர்கள் உள்ளிட்ட 75 பேருக்கு உயர்நீதிமன்றம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்காக நிலக்கரி கொள்வனவு செய்வது தொடர்பில் மோசடி இடம்பெற்றதாக முன்வைக்கப்பட்ட மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
தனியார் நிறுவனம் ஒன்று தாக்கல் செய்த குறித்த மனுவில், ஒரு மெற்றிக்தொன் நிலக்கரியைக் கொள்வனவு செய்ய 90 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்ற குறைந்த டென்டரை தாமே முன்வைத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், ஒரு மெற்றிக்தொன் நிலக்கரியைக் கொள்வனவு செய்ய 101 மில்லியன் அமெரிக்க டொலர்களை கோரிய நிறுவனம் ஒன்றுக்கு அந்த டென்டர் வழங்கப்பட்டதாகவும், தமது நிறுவனத்திற்கே டென்டரை வழங்க வேண்டும் என, அரச தொழிநுட்ப மதிப்பீட்டு சபை பரிந்துரை செய்திருந்த போதிலும், அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட டென்டர் சபை பிரதிவாதிகளுக்கு அதனை வழங்கியதாகவும் குறித்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதனால் இந்த விடயத்தில் பாரிய மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகவும், இதற்கு தீர்வு பெற்றுத் தருமாறும் மனுதாரர் சார்பில் கோரப்பட்டிருந்தது.
முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த பிரதம நீதியரசர் கே.ஶ்ரீபவன் தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம், குறித்த மனுவை எதிர்வரும் டிசம்பர் 15ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள அனுமதியளித்துள்ளது.
இதன்படி மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சரவையின் உறுப்பினர்கள் உள்ளிட்ட 75 பேருக்கு, அன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.