ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நிர்வாகக் காலத்தில் இலங்கையில் இணையத்தள பாவனை சுதந்திரம் வலுவடைந்துள்ளதாக சர்வதேச ஆய்வு அறிக்கையொன்று தெரிவித்துள்ளது.
இணையத்தள பாவனை சுதந்திரம் தொடர்பிலான தமது கணிப்பீட்டில் இலங்கை 40 ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
கடந்த வருடம் இலங்கை 58 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டு பின்தங்கியிருந்தது.நியூயோர்க்கைத் தலைமையகமாகக் கொண்ட ப்ரீடம் ஹவுஸ் எனும் சர்வதேச அமைப்பு 65 நாடுகளில் இந்த ஆய்வினை மேற்கொண்டிருந்தது.
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஸவை தோல்வியடைச் செய்து, மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் இலங்கையில் இணையத்தள பாவனை சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இணையத்தளங்களைத் தடை செய்தல், ஊடகவியலாளர்களை அச்சுறுத்தல் போன்று கடந்த அரசாங்கம் மேற்கொண்ட விடயங்களைத் தவிர்க்கும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் செயற்பட்டுள்ளமையினால் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.