பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையில் வௌ்ளைக் கொடி விவகாரம் மற்றும் சாள்ஸ் அண்டனி கொலை தொடர்பில் பாரதூரமான தகவல்கள் உள்ளதாகவும், அந்த அறிக்கையை ஜெனிவா யோசனைக்குப் பின்னர் சமரப்பித்தமை நாட்டுக்கு நல்லது எனவும் அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் ராஜித்த சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அத்துடன் உள்நாட்டுப் பொறிமுறை தொடர்பில் வௌிநாட்டு நிபுணர்களின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வது பாரிய விடயம் அல்ல எனவும், பரணகம அறிக்கையை தயாரிப்பதில் வௌிநாட்டு நிபுணர்கள் மூவரின் ஒத்துழைப்பை முன்னாள் ஜனாதிபதி பெற்றுக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஜெனிவா அறிக்கையை எதிர்கட்சிகள் முழுமையாக வாசிக்கவில்லை எனவும், அது குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாகவும் கூறிய அமைச்சர் ராஜித்த, அவ்வாறிருக்க அவர்கள் விஹாரமகாதேவியில் கூடி கூச்சலிடுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதுஎவ்வாறு இருப்பினும் ஜெனிவா யோசனை செயற்படுத்தப்படபோவது உள்நாட்டு பொறிமுறைபடி மட்டுமே எனவும் இதற்கு வௌிநாட்டு நிபுணர்களின் உதவி பெற்றுக் கொள்ளப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.