அஸ்லம் . எஸ். மௌலானா
சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்தை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீர்வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீமிடம் சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பான அவசரக் கடிதம் ஒன்றை மன்றத்தின் தலைவர் எம்.ஐ.அப்துல் ஜப்பார், செயலாளர் கலீல் எஸ்.முஹம்மட் ஆகியோர் கையொப்பமிட்டு அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
“சாய்ந்தமருது மக்களின் அடிப்படை தேவையான தனி உள்ளூராட்சி மன்றத்தை பெற்றுக் கொடுப்பதற்கு தாங்கள் மேற்கொண்டு வருகின்ற முயற்சிகளுக்காக இந்த ஊர் மக்களின் சார்பில் தங்களுக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கின்றோம். தங்களது முயற்சி காரணமாக இவ்விடயம் அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளபபட்டு ஒரு முக்கிய கட்டத்தை எட்டியிருப்பதையிட்டு பெரும் மகிழ்ச்சியடைகின்றோம்.
குறிப்பாக சாய்ந்தமருது மக்களின் நீண்ட கால தேவையை நிறைவேற்றித் தருவதற்காக நீங்கள் முன்னாள் உள்ளூராட்சி அமைச்சர் கரு ஜயசூரிய தொடக்கம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரை அவ்விடயத்தை கொண்டு சென்று, அம்முன்மொழிவை நியாயப்படுத்தி, அவர்களின் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்டது மாத்திரமல்லாமல் புதிய உள்ளூராட்சி அமைச்சராக பைசர் முஸ்தபா பதவியேற்ற கையேடு எமது கல்முனைத் தொகுதி எம்.பி. உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளுடன் இவவிடயத்திற்காக பிரத்தியேகமாக சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தி அவரது இணக்கத்தையும் பெற்றுக் கொண்டுள்ளீர்கள்.
அத்துடன் உள்ளூராட்சி அமைச்சர் கேட்டுக் கொண்டதற்கிணங்க தங்களது எழுத்து மூலமான கோரிக்கையையும் சமர்ப்பித்துள்ளதாக அறிகின்றோம். அதேவேளை மார்ச் மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்னதாக சில புதிய உள்ளூராட்சி மன்றங்களை உருவாக்க வேண்டியுள்ளதாக சில தினங்களுக்கு முன்னர் குறிப்பிட்டுள்ள அமைச்சர் பைசர் முஸ்தபா, தங்களினால் முன்வைக்கப்பட்டுள்ள சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை தொடர்பிலும் பிரஸ்தாபித்துள்ளார்.
அந்த வகையில் நீங்களே இதற்குப் பின்னணியாக இருந்து சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்தை ஸ்தாபிப்பதற்கான பிரகடனத்தை வெளியிடுவதற்கு வேண்டிய உத்தியோகபூர்வ நடவைக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம்.
கடந்த ஒரு தசாப்த காலமாக எமது சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றமானது இவ்வூர் மக்கள் சார்பில் இக்கோரிக்கையை முன்வைத்து பல்வேறு வகையான முயற்சிகளை முன்னெடுத்து வந்திருப்பதுடன் தாங்கள் உட்பட அரசியல் தலைமைகளுக்கு பாரிய அழுத்தங்களை கொடுத்து வருவதை நீங்கள் அறிவீர்கள். அதன் பிரகாரமே இவ்விடயம் தொடர்பிலான தங்களது கரிசனையுடன் கூடிய முயற்சிகளை நாம் அவதானித்து வருவதுடன் அதற்கு மேலும் உத்வேகம் கொடுக்கும் வகையில் இக்கடிதத்தை தங்களுக்கு அனுப்பி வைக்கின்றோம்” என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.